முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதியுள்ள, ‘இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் (12.08.2026) நடைபெற்றது.
விழாவில் பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும்.
வரும் தலைமுறையினர் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
இளைய தலைமுறையினரிடம் ஒரு வேண்டுகோள். இது ரீல்ஸ் காலம்; சமூக ஊடகப் பிரபலங்கள் உங்களை வேறு திசையில் ஈர்த்து உங்களது கவனத்தை சிதறடிக்கக்கூடும்.
குறுக்கு வழியைத் தேடிப் போகும் இந்தக் காலகட்டத்தில் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
குறுக்கு வழிகள் உங்கள் வாழ்வை சீரழித்து விடும். இளைஞர்களே நீங்கள் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் உங்களுக்குப் பிடித்தமானவர்களின் சுயசரிதையைப் படியுங்கள்.
சுயசரிதைகளைப் படித்து மற்றவர்களின் போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் கோவிந்த் ஓய்வெடுக்கவில்லை.
இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவர் தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறார்.
அவரது சுயசரிதையை இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். ராம்நாத் கோவிந்த் தனது புத்தகத்தில் அவரது தாயார் குறித்து எழுதியுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அவரது தாயார் எப்படி இறந்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவரது வலியை உணர்கிறேன்.
எனது தாயார் 100 ஆண்டுகள் வரை வாழ்ந்து என்னை ஆசீர்வதித்துச் சென்றார். ஆனாலும், அவர் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் நான் ஆழமாக உணர்கிறேன்.
ஒருவரின் மன உறுதி எப்படிக் கடினமான சூழல்களைக் கடந்து மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவிக்கு உயர உதவும் என்பதை ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது” என்றார்.