மேகதாது பிரச்சனை: தற்போது என்ன செய்ய வேண்டும்?

கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றதிலிருந்தே மேகதாது அணைப் பிரச்சனையும், காவிரியில் நீர்ப்பாசனதுக்காக நீர் திறந்துவிடுவது குறித்த விமர்சனங்களும், எதிர்க்குரல்களும் இரு மாநிலத்திலேயுமே அதிகரித்திருக்கின்றன. 

அண்மையில், தஞ்சையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தண்ணீர் வரத்துப் பற்றி கொச்சையாகப் பேச நேரலையாக பல தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்ட எடிட் செய்யப்படாத அந்த காணொளி தமிழகம், கர்நாடகா மட்டுமல்ல வட இந்திய ஊடகங்கள் வரை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் பேச்சையொட்டிய விசாரணைக்காக உதயநிதி அழைத்துச் செல்லப்பட்டபோது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து நம் ஊடகங்களுக்கு தீனிபோட்டது மட்டும்தான் மிச்சம். 

போராட்டத்தின் பலனாக ஒன்றும் கிடைக்கவில்லை. 

இயற்கை கருணை வைத்து அதிகமாக மழைபெய்து காவிரியில் சற்றே அதிகமாக நீர் திறந்துவிடப்பட்டது.

ஆனால், மேகதாது அணைப் பிரச்சனையைப் பொறுத்தவரை கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. இரு மாநில மக்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள கன்னடர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இதில், ஒன்றில் நிகழ்கிற பாதிப்பு இன்னொன்றையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரச்சனையின்போது, கர்நாடகாவில் குறிப்பாக பெங்களுருவிலும் கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழ்த் திரைப்படங்கள் அங்கு திரையிட முடியாத இறுக்கமான சூழ்நிலை நிலவியது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல பெங்களுருவிலும் பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிற அரசியல் கட்சி பிரமுகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த சமயத்தில் மேகதாது அணை விவகாரத்தில் என்னதான் செய்யலாம்?

குறிப்பாக தற்போது கர்நாடக அரசை அரவணைக்கும் விதத்தில் கரிசனம் காட்டுகிற மத்திய பாஜக அரசின் கவனத்தை நம்மீதும் காட்ட வைக்க, இன்றைய சூழலில் என்ன செய்யலாம்?

சட்டசபையில் கண்டனத் தீர்மானம் இயற்றுவதோ, வெறுமனே ஒரு நாள் அடையாளப் போராட்டம் எழுப்புவதோ, தொலைக்காட்சகளில் விவாதிப்பதோ இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைத் தேடி தந்துவிடாது.

அறவழியிலேயே சாத்வீகமாக சட்டத்தை, சட்ட நெறிமுறைக்கு உட்பட்டு சில எதிரப்பு வடிவங்களை இங்குள்ள இயக்கங்கள் கையில் எடுப்பார்களா? 

உண்ணாவிரதம் – இது மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்வில் அடிக்கடி பல்வேறு சந்தர்ப்பங்களில் கையாண்ட எளிய போராட்ட வடிவம்.

தன்னுடலை வருத்திக் கொண்டு, அதேசமயம் தான் வலியுறுத்தும் கோரிக்கையை பலப்படுத்தி, மக்கள் கவனத்தையும், அரசின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கச் செய்து, குறைந்தபட்சத் தீர்வை நோக்கி நகர்த்துவதைத்தான் இந்த உண்ணாவிரதப் போராட்ட வடிவம் நமக்கு உணர்த்தி இருக்கிறது.

அதேசமயம் இந்தப் போராட்ட வடிவம் எந்த விதத்திலும் வன்முறைக்கு வித்திடும் போராட்டமல்ல.

தமிழகத்தில் இதே உண்ணாவிரதம் என்கிற போராட்ட வடிவத்தை மகாத்மா காந்தி காலத்திற்கு முன்பிருந்தே வலியுறுத்தி உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள். 

விருதுநகரில், காங்கிரஸ் கட்சிக் காலத்திலேயே தமிழ்நாடு என்கிற பெயரை அன்றைய சென்னை மாகாணத்திற்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இதே மண்ணில் போராடி இருக்கிறார் சங்கரலிங்கனார்.

அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மயிலாப்பூர் பகுதியில்  58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமலு.

உயிர்நீத்தப் பிறகே ஆந்திர மாநிலம் உருவாக வழிபிறந்தது. இன்றும் ஆந்திர மக்கள் பொட்டி ஸ்ரீ ராமுலுவை நினைவில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப் பிரச்சனைக்காக கிட்டு இதே அணுகுமுறையுடன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்திருக்கிறார்.

இதெல்லாம் நினைவில் இருக்கிற உண்ணாவிரத வடிவங்கள்.

மிக அண்மையில் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினர் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு மையப்புள்ளியாக அமைந்தது, பிரபல சமூக சேவகரான சோனம் வாங்சுக் 26 நாட்கள் நடத்திய உண்ணாவிரதம் ஏறத்தாழ சாவின் விளிம்பைத் தொட்டு திரும்பி இருக்கிற அவரது போராட்டம் நிறுத்தப்பட்டபோது கூட அதை விமர்சித்த காருண்யம் மிக்கவர்களும் இங்கு இருக்கவே செய்தார்கள்.

சரி, இங்குள்ளப் பிரச்சனைக்கு வருவோம். 

இதே காவிரிப் பிரச்சனைக்காக இதற்கு முன்பு தமிழக முதலமைச்சர்களாக இருந்த பலர் உண்ணாவிரதப் போராட்டம் என்கிற வடிவத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் என்பதையும்

அப்போதெல்லாம் மத்திய அரசு உரிய கவனத்தையும் உடனடியாக செலுத்தி இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதுகூட அத்தகைய சாத்வீகமான முறையில் தமிழக விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியும் காவிரி நதி நீரை உரிய முறையில் திறக்கக் கோரியும் மேகதாது அணை விசயத்தில் மத்திய அரசு சமரசமற்ற திடமான முடிவெடுக்கக் கோரியும் இதே விதமான உண்ணாவிரத வடிவத்தைப் பெரும்பாலான தமிழகத்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் இங்கும் முன்னெடுக்கலாம்.

ற்போதைய தமிழக முதல்வரான விஜய் தலைமையில் மெரினாவில் பரந்துபட்ட மக்களை ஒன்றிணைத்து அமைதியான முறையில், தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்வது தேசம் முழுக்க கவனிக்க வைக்கும்.

தமிழக நலனில் உண்மையாகவே அக்கறை கொண்ட கட்சித் தலைவர்களும் அதே உண்ணாவிரத நிகழ்வில் கூட்டணியாகக் கலந்துகொள்வது கூடுதல் பலனளிப்பதாகவே இருக்கும்.

வெறுமனே உதிரி உதிரியாகக் குரல் கொடுப்பதும் திசை மாற்றுவதுமான பேச்சுக்களைவிட காந்திய வழியிலான அடையாள உண்ணாவிரத வடிவத்தை தற்போதைய சூழலில் விஜய் மேற்கொண்டார் என்றால், தவெகவின் ஒற்றுமைமிக்க அந்தப் போராட்ட வடிவம் கர்நாடகத்தையும் கவனிக்க வைக்கும், மத்திய பாஜக அரசையும் தமிழக நலன்குறித்து பரிசீலித்து பாரபட்சமற்ற முடிவெடுக்க வழிவகுக்கும்.

எந்த விதத்திலும் வன்முறையற்ற வீண் விரோதத்தை கிளப்பும் முழக்கங்களற்ற இத்தகைய ஒன்றுபடுதல் எத்தகைய விளைவை உருவாக்கும் என்பதற்கு நமக்கு முன்பு உள்ள சாட்சியமாக இருக்கிறது ஜல்லிக்கட்டுக்காக நம்முடைய தமிழக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மாபெரும் போராட்டம்.

அந்தப் போராட்டத்தின் விளைவு யாரையெல்லாம் பரிசீலிக்க வைத்தது என்பதையும் நடைமுறையில் நாம் உணர்ந்திருக்கிறோம்.

அதனால் காந்திய வழியில் நம் கோரிக்கைகளை முன்நிறுத்துவது தற்காலத்தின் தேவை. இதை உணர வேண்டியவர்கள் உணரட்டும்.

– மணா

Comments (0)
Add Comment