மழைக்காக வானத்த எதிர்பார்த்து கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்!

ஆடி மாசம் பிறந்து சில நாட்களாகி விட்டன. இன்னும் வெய்யில் குறைந்தபாடில்லை. வெக்கை தாங்க முடியவில்லை. வீசும் அனல் காற்று அக்னியாக பொசுக்குகிறது.

குற்றாலத்தில் போதுமான தண்ணீர் விழவில்லை. தாமிரபரணியில் வாய்க்கால் மாதிரிதான் தண்ணீர் செல்கிறது.

வைகாசி கடைசி ஆனி முதலிலேயே சாரல் ஆரம்பித்துவிடும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாரல், அணிந்திருக்கும் ஆடைகள் நனைகிற அளவுக்கு அப்படியே ஜில்லுனு தெளிக்கும். ஆடி மாசம் முழுவதும் மே காத்து அலைக்கழிக்கும்.

கூரை வீடுகள், ஓலை வீடுகள் பிய்த்துக் கொண்டு போகும். நிறுத்தியிருக்கும் சைக்கிள்கள் அனைத்தையும் காற்று தரையில் சாய்ந்து விடும். மேற்காமல் சைக்கிள்‌ ஓட்டவே முடியாது.

எச்சிலை விழுங்கினால் தூசிமண் உதட்டில் படியும்படி வாயில் மண்ணள்ளிப் போட்டிருக்கும் காற்று.

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும் என்பதும்
ஆடிக்காத்துக்கு அம்மியும் இடம் பெயரும் என்பது சொலவடை.

ஆடிப்பட்டம் தேடி விதை என்பதெல்லாம் மலையேறி விட்டது. என்னமோ ’எல்நினோ’வாம் ஒரு வருஷத்தில் பெய்யும் மழையை ஒரே நேரத்தில் பெய்ய வைக்குமாம்.

அதிக வெப்பத்தைக் கொண்டு வருமாம். மழையே இல்லாமல் ஆக்குமாம். விஞ்ஞாணிகள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

என்ன எழவு காடையத்தோ தெரியல நாங்க கரிசக்காட்டை உழுது போட்டுட்டு விதைக்கிறதுக்காக தெனம்தெனம் வானத்தை அண்ணாந்து பாத்துப்பாத்து கழுத்து வலிச்சதுதான் மிச்சம். கடவுள் கண் தொறக்க மாட்டேன்கிறார்.

– எழுத்தாளர் சோ. தர்மன்

Comments (0)
Add Comment