இந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெண்ணினத்திற்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.
நீதிக்கட்சி அரசின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பெரும்பங்காற்றியவர்.
அன்றைய தமிழ்ப் பேரரசர்களின் நிலவுடைமைச் சமூகத்தில் தோன்றிய தேவதாசி முறை பிற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேடுகளில் ஒன்றாக ஆகியது.
பொட்டுக் கட்டுதல் என்னும் சடங்கின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்பட்டது.
கோயில் புரோகிதர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பாலியல் தேவைகளை நிறைவு செய்வது தேவதாசிகளின் பணியானது.
இத்தகைய சூழ்நிலையில், தேவதாசி முறையின் கொடுமையினை எதிர்த்துப் பேசியும், எழுதியும் தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் முத்துலட்சுமி அம்மையார்.
The awakening demand for Devadasi legislation, Why should the Devadasi institution in the Hindu temples be abolished ஆகிய அவரது இருநூல்கள் தேவதாசி முறை ஒழிப்பின் அவசியத்தை எடுத்துரைப்பன.
முத்துலட்சுமி அம்மையாரின் தேவதாசி ஒழிப்பு மசோதாவை ஆதரித்து, தந்தை பெரியார் குடிஅரசு இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார்.
“கடவுளின் பெயரால் பெண்களுக்கு, விபச்சாரித்தனம் செய்ய பொட்டுக் கட்டுதல் என்னும் பெயரில் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது” என்று சாடிய பெரியார், “ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாகத் தங்கள் பெண்களை இதற்காக உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது?
அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்ற வகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபனை?” என்று கேட்கிறார். (குடி அரசு, 30.10.1927).
ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் (1930) முத்துலட்சுமி அம்மையாரின் மசோதா விரைவில் சட்டமாக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தைத் தந்தை பெரியார் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
டாக்டர் முத்துலட்சுமியின் பணி பெண்கள் நலத்துடன் நின்றுவிடவில்லை. 1949-ம் ஆண்டு புற்றுநோய் நிவாரண நிதி அமைப்பை ஏற்படுத்தினார். சென்னை அடையாறில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தையும், மருத்துவமனையையும் உருவாக்கினார்.
தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் – விபச்சார ஒழிப்புச் சட்டம் – பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் – பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்-என பெண்ணுரிமைக்கான சட்டங்கள் கொண்டுவரக் குரல் கொடுத்தவர்.
‘நகராட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்க உரிமை வேண்டும்,
பெண்களுக்குத் தனியாகக் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்,
பெண் நீதிபதிகள் நிறையப்பேர் நியமனம் செய்யப்பட வேண்டும்-குழந்தைத் திருமணம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்’
– என பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவென்றே தனது வாழ்க்கையை அர்பணித்தவர் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி!
– வெற்றிச் செல்வன்
நன்றி: கீற்று