ஊர் சுற்றிக் குறிப்புகள் :
ஆடி மாதம் வந்துவிட்டாலே சென்னை மாநகரில், குறிப்பாக வடசென்னையில் தனி களைகட்டி விடுகிறது. ஆங்கங்கே மஞ்சள் புடவையை அணிந்து அகலமான குங்குமம் வைத்த பல பெண்மணிகளைப் பார்க்க முடிகிறது.
ஆடியில் வெள்ளிக் கிழமை வந்துவிட்டாலே வடசென்னையின் பல பகுதிகளில் சாலையோரம் கூட ஆங்காங்கே பெரிய அண்டாக்களிலோ அல்லது பித்தளை பாத்திரங்களிலோ கூழை பக்தி மயமாகாக விநியோகித்தப்படியே இருப்பார்கள்.
அப்படி விநியோகிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது பெண்மணிகள்.
கடந்த வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் அத்தகைய கனத்த ஆடிக்கூழ் பானைகளையும், அண்டாக்களையும் பார்க்க முடிந்தது.
பலர் அதை வாங்கி அருந்திக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.
இருசக்கர வானத்தில் நண்பர் ஒருவருடன் கடந்துசென்றபோது, நண்பர் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி, “நாமும் போய் கூழ் குடிச்சுவிட்டு வரலாமே” என்றார்.
வாகனத்திலிருந்து இறங்கி அருகில் போனபோது அதை விநியோகித்துக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி மிகுந்த மரியாதையுடன், “வாங்க தம்பி” என்று சொன்னபடியே பேப்பர் கப்பில் அந்தக் கூழை ஊற்றி எங்களிடம் கொடுத்தார்.
ஏதோ சொந்த பந்தத்தைப் போல அந்தக் கூழ் கொடுக்கும் முறை இருந்தது.
கூழ் குடித்தோம். கேழ்வரகு கூழ்தான். அளவான உப்பு கலந்த நிலையில் குடிப்பதற்கு மிகவும் அருமையாகவே இருந்தது.
நாங்கள் இருவரும் குடித்துக்கொண்டிருந்த போது எங்களுடைய முகங்களைப் பார்த்த அந்தப் பெண்மணி மறுபடியும், “கொஞ்சம் ஊத்தட்டுமா தம்பி” என்றார்.
“வேண்டாம்” என்று மறுத்துவிட்டு நாங்கள் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் அந்த சாலையோரத்தில் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து ஒரு வட இந்தியக் குடும்பம் கீழிறங்கி வந்தது. அதில் வயதானவர்களும் இருந்தார்கள். ஒரு இளம்பெண்ணும் இருந்தார்.
அந்த கூழ் பானையை நெருங்கி வந்ததுமே, அந்த இளம்பெண்ணுக்கு அந்தக் கூழை பார்த்ததும் முகமெல்லாம் பரவசமாகிவிட்டது.
தமிழிலேயே, “ஆளுக்கு ஒரு டம்ளர் குடுங்கம்மா” என்று மரியாதையோடு அழைத்ததும், அந்தக் கூழை விநியோகித்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு பூரிப்பு தாங்கவில்லை.
எல்லாருக்கும் மகிழ்வுடன் அந்த பேப்பர் கப்பில் அந்த ஆடிக்கூழை ஊற்றிக் கொடுத்தார்.
அவர்களும் அங்கேயே நின்றபடியே நிதானமாக கூழை சுவைத்தபின் டம்ளரை கீழே போட்டுவிட்டு அதைக் கொடுத்த அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டு காரில் ஏறினார்கள்.
வடசென்னையைப் பற்றி எவ்வளவோ நெகட்டிவ்வான அம்சங்கள் பல்வேறு மீடியாக்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், இப்படிப்பட்ட நெகிழ்வான பாசிட்டிவ்வான அம்சங்களும் உண்டு ஆடிக்கூழின் பின்னணியில் இருக்கத்தான் செய்கிறது.