பாக்யராஜுடன் பரிமளித்த நட்சத்திரப் பட்டாளம்: ஒரு ஜாலி ட்ரிப்!

“சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம், பிறரை சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்” என்பதைத் தன்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும் மையமாக, பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ்.

துவக்கத்தில் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் உதிரிக் காட்சிகளில் பாக்யராஜ் தலைக்காட்டியிருந்தாலும் கூட, பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படமே அவரை கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தியது.

அதன்பிறகு, 1979-ல் பாக்யராஜ் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் படத்தை அவருக்கே உரித்தான ஜோவியலான பாணியில் இயக்கியிருப்பார்.

அதில், கோவை வட்டார மொழியோடு இயல்பாக பேசும் கவுண்டமணியும் கல்லாப்பெட்டி சிங்காரமும் காந்திமதி போன்றவர்களும் நகைச்சுவைக் காட்சியில் பரிமளித்திருப்பார்கள்.

ஒரு கை ஓசை என்று நெகட்டிவான ஒரு டைட்டிலை வைத்தாலும்கூட படம் முழுக்க வாய்ப்பேச முடியாதவராக பாக்யராஜ் வந்தாலும் கூட அந்தப் படத்திலும் அவருடைய கலகலப்பான பாணிக்கு குறைவிருக்காது.

உதிரிப்பூக்கள் படத்தில் நடித்திருந்த அஸ்வினியை அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

பின்னாளில் தயாரிப்பாளரான சங்கிலி முருகனுக்கு அதில் அற்புதமான கதாபாத்திரத்தைக் கொடுத்திருப்பார் பாக்யராஜ். அந்தப் படமும் வணிக ரீதியில் வெற்றிப் படமானது.

அடுத்து அவர் இயக்கிய மௌன கீதங்கள் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, அந்தத் திரைப்படத்தின் கதை பிரபல வார இதழில் தொடராகவும் ஒரே நேரத்தில் வெளிவந்தது.

படத்தில் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அமர்க்களப்படுத்தியிருப்பார் கதாநாயகியாக நடித்த சரிதா. 

ஒரு காட்சியில், பாக்யராஜின் தலைமுடியைப் பிடித்து ஆட்டியதும் அவர் கத்துகிறபோது திரையரங்குகளில் சிரிப்பலை பரவும். அந்தப் படத்தின் வசனங்கள் பரவலாக ரசிக்கப்பட்டது. 

முழுக்க முழுக்க இளம்பெண்களை கலாய்க்கிற இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமான ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தைப் பற்றி பாக்யராஜ் கூறும்போது, “தன்னுடைய வாழ்வில் அசலாக நடந்த அனுபவங்களைத்தான் படத்தில் காட்சிப்படுத்தியதாகச் சொல்லியிருப்பார்.

தன்னுடன் இளம் பருவத்தில் பழகிய நண்பர்களையும் அதில் நடிக்க வைத்திருப்பார். ராதிகாவும் தன் பங்கிற்கு அமர்க்களப்படுத்தியிருப்பார். பாக்யராஜ் படங்களிலேயே இந்தப் படம் தனி ரகத்தில் இருக்கும் ஜாலியான படம் என்று சொல்லலாம்.

அடுத்து முந்தைய படத்திலிருந்து முழுக்க மாறுபட்ட விதத்தில், மனைவியை எப்படியாவது கொல்ல முயலும் நெகட்டிவான பாத்திரத்தில் விடியும் வரை காத்திரு  திரைப்படத்தில் நடித்திருப்பார் பாக்யராஜ்.

அப்போது பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்துவந்த கராத்தே மணி இந்தப் படத்தில், துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.

இந்தப் படத்திலும் அயர வைக்காத காட்சிகளின் மூலம் வணிக ரீதியில் வெற்றிப்படமாக்கி இருந்தார் பாக்யராஜ்.

இந்த வரிசையில்  முழுக்க மாறுபட்ட படம் அந்த 7 நாட்கள். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்பட்ட சில சம்பவங்களை முன்வைத்தும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சில அனுபவங்களை முன்வைத்தும் “பாலக்காட்டு மாதவன் நாயராக“ மலையாள சாயல் படிந்த தமிழோடு படம் முழுக்க பரவியிருப்பார் பாக்யராஜ்.

இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்பிகா பிறகு உச்சக்கட்ட நட்சத்திரமாகி விட்டார். இதில் டாக்டராக நடித்த நடிகர் ராஜேஷ் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்தப் படமும் கமர்ஷியலாக பெரும் வெற்றி அடைந்த திரைப்படமானது.

பாக்யராஜ் படங்கிலிலேயே பெரும் வெற்றியை நோக்கி நகர்ந்த படங்களில் ஒன்றாக பாக்யராஜ் இயக்கி, நடித்த தூறல் நின்னு போச்சு படத்தைச் சொல்லலாம்.

ஆசியாவிலேயே அப்போது மிகப்பெரிய திரையரங்கமாகச் சொல்லப்பட்ட மதுரை தங்கம் தியேட்டரிலேயே 100 நாட்களைக் கடந்து ஓடிய படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

சுலோச்சனா கதாநாயகிய நடித்த இந்தப் படத்தில் கன்னம் முழுக்கப் பரவிய மீசையோடு குஸ்தி வாத்தியாராக வித்தியமான கேரக்டர் ரோலில் நம்பியாரை நடிக்க வைத்திருப்பார் பாக்யராஜ்.

நம்பியார் பல நூற்றுக்கணக்கான படங்கள் நடித்தாலும், அவர் நினைவில் வைத்திருந்த பாத்திரங்களில் அந்த குஸ்தி வாத்தியார் கதாபாத்திரமும் ஒன்றானது.

குடும்பம், பாசம் கலந்த சென்டிமெண்டான காதல் கதை என்றாலும், அதை படம் முழுவதும் ஜாலியாக பாக்யராஜ் கொண்டு சென்ற விதம் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.

அடுத்து பேசப்பட்ட படம் – டார்லிங் டார்லிங் டார்லிங். சற்றே வித்தியாசமாக ஆங்கில பாணி கதையாக சிறு வயதிலிருந்தே சிறுமியாக தன்னுடன் பழகிய பெண்ணை வளர்ந்த பின்பு நேசிக்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாக்யராஜ்.

இதில், கதாநாயகியாக நடித்த பூர்ணிமா ஜெயராம் இந்தப் படத்திற்கு பிறகு பூர்ணிமா பாக்யராஜாக மாறினார்.

இந்தப் படத்திலும் பாக்யராஜின் அப்பாவாக பங்களாவை மேற்பார்வை பார்ப்பவரான கல்லாப்பெட்டி சிங்காரம் செய்யும் விசித்திரமான சேட்டைகள் பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும்.

இந்தப் படமும் அவருக்கு கமர்ஷியல் வெற்றியைத் தேடித்தந்த படமானது.

இதற்கடுத்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு பாக்யராஜ் படங்களிலேயே மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தந்த படமானது.

இதில், கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊர்வசி அடுத்தடுத்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் முன்னனி கதாநாயகியானார். 

பாக்யராஜுக்கே பின்னாளில் அடையாளமாகச் சொல்லப்படும் அளவுக்கு முருங்கைக்காய் பாசம் வெளிப்பட்டது. ஏகப்பட்ட மகளிரையும் அந்தத் திரைப்படத்தின் ரசிகைகளாக்கியது.

இந்தப் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகே பாக்யராஜை தன்னுடைய கலை வாரிசாக அறிவித்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வித்தியாசமாக ஓய்வு பெற்ற மிலிட்டரி கேப்டன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த படம் தாவணிக் கனவுகள்.

திருமணமாகாத பல இளம் பெண்களின் வாழ்வியலைக் கூட நகைச்சுவை இழையோட சொன்ன இந்தத் திரைப்படத்திற்கும் வணிக ரீதியான வெற்றிக் கிடைத்தது.

ஊர்வசியின் மூத்த சகோதரியான கல்பனாவை கதாநாயகியாக நடிக்க வைத்து தன்னுடைய வழக்கமமான பாணியில் பாக்யராஜ் இயக்கி நடித்திருந்தாலும், சின்ன வீடு படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற முடியவில்லை.

இதையடுத்து இந்தியில் ஏற்கனவே தான் கதை வசனம் எழுதிய ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் சில காட்சிகளை மாற்றியமைத்து அமிதாப்பச்சனை கதாநாயகனாக்கி பாக்யராஜ் இயக்கிய அக்ரி ரஸ்தா படம் பெரும் வெற்றியடைந்து அமிதாப் நடித்த படங்களில் அவரே பலமுறை குறிப்பிடும் படமாகவும் அமைந்தது.

இதற்கிடையில் பாலகுமாரன் இயக்கத்தில் பாக்யராஜும் சோபனாவும் சோமையாஜுலுவும் குமரிமுத்துவும் மனோரமாவும் நடித்த நையாண்டி கலந்த திரைப்படமான இது நம்ம ஆளு என்கிற திரைப்படம் பாக்யராஜுக்கு புகழை ஈட்டித் தந்த இன்னொரு திரைப்படம். 

இதற்கு பிறகு எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரிராரோ போன்ற படங்கள் வெளிவந்தாலும் எம்ஜிஆருடன் பாக்யராஜ் இணைந்து நடித்த தோற்றத்தை உருவாக்கிய படம் அவசர போலீஸ் 100.

இரட்டை வேடங்களில் இந்தப் படத்தில் நடித்திருந்த பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் மகனாகவும் நடித்திருப்பார்.

எம்.ஜி.ஆர். நடித்து பாதியில் நின்றுபோன அண்ணா நீ என் தெய்வம் என்ற படக்காட்சிகளை சாமர்த்தியமாக இந்தப் படத்தில் பொருத்தமாக சேர்த்திருந்தார் பாக்யராஜ்.

வழக்கமாக கவர்ச்சி வேடங்களில் வரும் சில்க் சுமிதா இந்தப் படத்தில் “பாவா“ என்று அடிக்கடி அழைத்தபடி பாக்யராஜின் மனைவியாக நடித்திருப்பார்.

இதற்கு பிறகு பவுனு பவுனுதான், ராசுக்குட்டி, சுந்தர காண்டம், வீட்ல விசேஷங்க படங்களைத் தொடர்ந்து சற்றே மாறுபட்டு கவனிக்க வைத்த படம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படம்.

கதாநாயகியான மீனாவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் அந்தப் படத்தில் வரும் சிறு பாத்திரங்களைக் கூட காட்சிகள் எடுத்த விதத்தில் கவனிக்க வைத்திருப்பார் பாக்யராஜ்.

இந்தப் படத்தில் ரிக்ஷா ஓட்டுநராக வரும் சார்லியின் கதாபாத்திரம் நினைவு கொள்ள தகுந்த அளவில் இருக்கும்.

இதைத் தொடர்ந்து நீண்ட காலம் கழித்து கவுண்டமணி பாக்யராஜடன் இணைந்து நடித்த படம் ஞானப்பழம். பத்திரிகை ஆசிரியராக பாக்யராஜ் வரும் இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய சொக்கத்தங்கம் திரைப்படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் நடிக்க பாக்யராஜ் பாணியிலியே கலகலப்பாக உருவான இந்தப் படம் பெறும் வெற்றியைப் பெற்றது.

2003-ல் இயக்கிய சொக்கத்தங்கம் பட வெற்றிக்குப் பிறகு அவர் சில படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவை வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை.

துவக்கத்தில் திரைக்கதை அமைப்பதில் தனித்துவமான பாணியை உருவாக்கியதாக சொல்லப்பட்ட பாக்யராஜ் அவரது பெரும்பாலான படங்களில் அந்த பாணியை பின்பற்றி வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவரது இறுதிக் காலத்தில் இயக்கிய படங்கள் வணிக ரீதியாக வெற்றியைத் தர முடியவில்லை என்பதும் எதார்த்தம்.

அதன்பிறகு மற்றவர்களுடைய இயக்கத்தில் நடிக்கும் நடிகராக பாக்யராஜ் மாறிவிட்டாலும், பாக்யராஜ் என்றதும் தற்போதும் பலரின் நினைவுக்கு வருவது அவருடைய நகைச்சுவை கலந்த பாணியிலான அவருடைய பேச்சும் காட்சியமைப்புகளும்தான்.

அதுவே இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜின் அடையாளமாகவும் மாறியிருக்கிறது.

– அகில் அரவிந்தன்

Comments (0)
Add Comment