வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதிய தாராபாரதி, ராதாகிருஷ்ணன் என்ற தன் பெயரை தாரா என்றும், பாரதியார் மேல் கொண்ட பற்றால் தன் பெயரோடு பாரதியை இணைத்து தாராபாரதி என மாற்றிக்கொண்டார்.
பாரதம் அன்றைய நாற்றங்கால், புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை), விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம் உள்ளிட்ட கவிதைகள்,
நூல்கள் ஊக்கமளிப்பதாகவும், முற்போக்கு சிந்தனை நிறைந்ததாகவும் இருக்கின்றன.
இவரது நூல்களை தமிழக அரசு 2010-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது.
34 ஆண்டுகள் ஆசிரியராக சிறந்த சேவை செய்ததற்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தாராபாரதி, கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
“வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் – உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்”
– என்ற நம்பிக்கைக் கவிதையால் நாடறியப்பட்ட கவிஞாயிறு தாராபாரதியின் மொத்தக் கவிதைகள் முழுமையையும் வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ‘இலக்கிய வீதி’ இனியவன்.
“உயிரே! மெய்யே!
உயிர்மெய்யாய் இருப்பவளே!
தமிழே, உனக்கு
உயிர் – மெய்யாய் இருக்கிறதா?”
– என்று மொழி குறித்த சோகத்தைக் கூட அழகாக வெளிப்படுத்துகிறார்.
“குழந்தையின் நாக்கிலில்லை
கோயில்மணி நாக்கிலில்லை
அழகுதமிழ் தீர்ப்பிலில்லை
அலுவலகக் கோப்பிலில்லை”
– என்று வேதனைப்படுகிறது.
“தமிழறியும் பெருமாளும்
தமிழ்க் கடவுள் முருகனும்
அமுதத் தமிழ் கேட்டால்
ஆசி தர மறுப்பாரா?”
ஆலயத்திலும் இல்லாமல் போன தமிழ் பற்றி, அழுத்தமாகக் கேள்வியை எழுப்புகிறார்.
தமிழின் அழகு, தமிழின் தொன்மை, தமிழின் பெருமை பற்றியெல்லாம் புதுமைமிக்க மரபுத் தமிழில் எழுதுகிறார்.
ஆயினும், ஆங்கில மொழியில் கற்பதையோ… அறிவியல் மொழியாக- கணினி மொழியாக தமிழ் பரிணமிக்க வேண்டிய அவசியத்தையோ மறுக்காத ஓர் அறிவியல் அணுகுமுறை தென்படுகிறது.
தந்தையர் நாடு குறித்த கவிதைகளில் ஒருமைப்பாடு அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.
மராட்டியத்தில் கலவரம், குஜராத்தில் கலவரம், வட இந்தியாவில் கலவரம், கர்நாடகத் தில் கலவரம் என்று இந்திய தேச ஒருமைப்பாடே சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கிற சமுதாயச் சூழலில், இவரது கவிதைக்குரலில் ஒருமைப்பாடு தேசப்பற்று மிக்கதாக இருக்கிறது.
“கன்னிக்குமரியின்
கூந்தலுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்
கம்பனின் அமுதக்
கவிதைகளுக்கு
கங்கை அலைகள் இசையமைக்க…
காளிதாசனின்
தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க….”
ஒருமைப்பாட்டை வெறும் கருத்தாக முன்வைக்காமல், கற்பனைநயமும், மொழியழகும், காவியச் செறிவுமிக்க அழகுக் கவிதையாக முன்வைக்கிறார்.
தாராபாரதியின் கவிதைகளில்… எளிமையும், இலக்கியமும் நவீனத்துவமும், புதுக் கவிதைக்குரிய செறிவும், சொற்புதுமைத் தெறிப்பும் கைகோர்த்திருக்கிற புதுமையை உணர முடிகிறது.
வாசிக்கிறபோது ஏற்படுகிற இனிய அனுபவம், முற்றிலும் புதுமையாய் இருக்கிறது.
கவிஞர் தமிழ் ஒளி, வா.செ.குழந்தைசாமி, தணிகைச் செல்வன், நவகவி போன்ற கவிஞர்களின் கவிதைகளில் காணப்படுகிற மரபும், புதுமையும் கலந்த இனிய சங்கமப் பேரழகு, கவிஞாயிறு தாராபாரதியின் கவிதைகளிலும் ததும்புகிறது.
இது ஒரு வித்தியாசமான சங்கமம். இந்த சங்கமப் புதுமையே ஒரு தனி அழகியலாக மலர்கிறது. தனிச் சுவை தருகிறது.
ஏறக்குறைய நானூறு பக்கங்கள் கொண்ட பெரிய தொகுப்பாக இருந்தபோதிலும், முழுமையாக வாசிக்க இயலுகிற அளவுக்கு, சுவையும், அழகும், புதுமையும் கவிதைகளில் பொங்குகிறது.
கவிதை வாசிக்கிற அனுபவத்தின்போது, கவிஞரின் கடலளவிலான சொல்வளம், நம்முன் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
அமரர் கவிஞாயிறு தாராபாரதியின் கருத்துகளும், சிந்தனைகளும், ஏழை எளிய பாட்டாளி மக்களின் நலன் சார்ந்தே இயங்குவது போற்றுதலுக்குரியது.
இலக்கிய வீதி இனியவன் அவர்கள் கவிதை நூலை அழகாக அச்சிட்டு, கச்சிதமான ஓவியத்திறத்துடன் வெளியிட்டிருப்பதைத் தனியாக பாராட்டலாம்.
- மேலாண்மை பொன்னுச்சாமி
***********
நூல்: கவிஞாயிறு – தாராபாரதி கவிதைகள்
இலக்கியவீதி வெளியீடு,
எண்-149, பூங்கா சாலை,
அண்ணா நகர் மேற்கு (விரிவு),
சென்னை – 600 101.
விலை ரூ. 250/-