மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான கோவையைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, வானம்பாடி என்ற இயக்கத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை இரண்டு முறை பெற்றுள்ள படைப்பாளியான கவிஞர் புவியரசு, கலைஞர் பொற்கிழி விருது, கேரள பண்பாட்டு மையத்தின் சாகித்திய புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.
உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்த இவர், ஜெகநாதன் என்ற தன் இயற்பெயரை தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக புவியரசு என மாற்றிக் கொண்டார்.
கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து 120 புத்தகங்களை எழுதி உள்ளார்.
கோவையின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒருவர், கவிஞர் புவியரசு.
தமிழ் பேராசிரியர்களும், கவிஞர்களும் இணைந்து உருவாக்கிய ‘வானம்பாடி’ இயக்கத்தில் மூத்த முன்னோடியாக இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவராகவும் கவிதையை ஜனநாயகப்படுத்திய ‘வானம்பாடி’ இதழின் தாய்ப் பறவையாகவும் திகழ்ந்தவர்.
வானம்பாடி இயக்கத்தில் அப்துல் ரகுமான், மு.மேத்தா, சிற்பி பாலசுப்ரமணியம், சிதம்பரநாதன் உள்ளிட்ட பல கவிஞர்களும், அறிஞர்களும் அங்கம் வகித்திருந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தவர், பேரூர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் படித்தார்.
பேரூர் தமிழ்க் கல்லூரி துவங்கப்பட்டதுடன் அதில் சேர்ந்து படித்த முதல் குழு மாணவர்களில் இவரும் ஒருவர்.
வாழ்க்கை முழுக்கக் கவிதை, அரசியல், மெய்யியல், சினிமா, வாசிப்பு எனத் தேடலுடன் இயங்கிக்கொண்டிருப்பவர்.
ஓஷோ முதல் சுந்தர ராமசாமி வரை வியந்த படைப்பான தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தது இவருடைய வாழ்நாள் சாதனை.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, எல்லைப் பிரச்சினைக்காக மா.பொ.சிவஞானத்துடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆங்கிலம், ரஷ்யன், மலையாளம், இந்தி, இந்தி ஆகிய மொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.
திரைப்படத் துறையிலும் கால்பதித்த புவியரசு ‘மகாநதி’, ‘விருமாண்டி’, ‘ஹவுஸ்ஃபுல்’ முதலான படங்களில் வசனகர்த்தாகவும், நடிகராகவும் பங்கெடுத்தவர். நடிகர் கமலின் இலக்கிய நண்பர்களில் முக்கியமானவர்.
‘காற்று’ என்ற சிற்றிதழை நடத்திய இவர், நடிகர் கமல்ஹாசனின் ‘மையம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.
தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார்.
ஷேக்ஸ்பியர், கலீல் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆயிரக்கணக்கான கலையரங்கங்கள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சிறைப்புரை ஆற்றியுள்ளார்.
“தேடாதே, தொலைந்து போய்விடுவாய், வழிகள் மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன” என்பது கவிஞர் புவியரசுவின் புகழ்பெற்ற வரிகளாகும்.
இவரது ‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்புக்காகவும், வங்காளக் கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் ‘தி ரெவெல்யூஷனரி’ மொழிப்பெயர்ப்பான ‘புரட்சிக்காரன்’ மொழிபெயர்ப்பு நூலுக்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்.
இவரது கவிதைகள் ஆங்கிலம், உருசிய மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், இந்தி ஆகியவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தனது இறுதிக் காலத்தில் கோவையை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு மறைவுக்கு எழுத்தாளர்கள், கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
“சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். கவிஞர் கவியரசு மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், இவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.