திட்டமிட்ட தோல்வி…!

எதிர்பார்த்தபடியே ஜெமினியின் 1952-ம் ஆண்டு ஹிந்திப் படம் ‘மிஸ்டர் சம்பத்’ நிதானமான வரவேற்பையே பெற்றது.

ஆனால், வட இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் அப்படம் பற்றி எழுதின.

அத்துடன் வாசனின் பத்திரிகையாளர் சந்திப்பும், முடிந்தால் ஜெமினி ஸ்தாபனத்தின் வரலாறையும் சாதனையையும் வெளியிட்டன.

‘மிஸ்டர் சம்பத்’ பற்றிய பத்திரிகைச் செய்திகள் விமர்சனங்கள், ஜெமினி பற்றிய கட்டுரைகள் போன்றவற்றைக் கட்டுக் கட்டாகச் சேர்த்தோம்.

இதில் எல்லாப் பத்திரிகைகளுக்கும் ஜெமினி விளம்பரம் கிடைத்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

ஆனால், அவற்றுக்கு ஜெமினி பற்றிச் செய்தியோ கட்டுரையோ வெளியிடுவது பெருமைக்கு உரிய விஷயமாக இருந்தது.

இதுகூட வாசனின் பல வாதங்களை நிரூபிப்பதாக இருந்தது.

பத்திரிகை படிப்பவர்கள், பத்திரிகைக்கு எழுதுபவர்கள் சினிமாவின் உண்மையான ரசிகர்களா?

பத்திரிகைக்கு எழுதுபவர்கள் பல புறப் பாதிப்புகளுக்கு உட்பட்டு விடுகிறார்கள்.

இப்பாதிப்புகளின் காரணமாக அவர்களுக்கும் சினிமா அனுபவத் தேவை உள்ளவர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.

மேலும், ஒரு திரைப்படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் உள்ள ஒரு ரசிகனை எந்தப் பத்திரிகைச் செய்தியும் அத்திரைப்படம் பற்றிய கண்டன விமர்சனமும் தடுக்க முடிவதில்லை.

இதெல்லாம்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

வாசனுக்கு சாரி போன்ற லட்சியவாத விளம்பர அதிகாரிகள் திரைப்படத் துறைக்குப் பொருத்தம் இல்லை என்பதற்கு சினிமா என்பது எல்லைகளே அற்ற கலைச் சாதனமாக இருக்கலாம்.

ஆனால், ஒரு திரைப்படக் கம்பெனியில் ஊழியனாக இருப்பது எல்லைகள் கொண்ட நிலைதான்.

நிறைய ஆட்டம் பாட்டு எல்லாம் இருந்தும் ‘மிஸ்டர் சம்பத்’ ஒரு பெரிய வெற்றியாக மாறாததற்கு ஒரு பட்டியலாகக் காரணங்களை அடுக்கலாம்.

பொம்மைக் கதாநாயகி :

இந்தக் கதாநாயகியின் மனத்தை ஈர்க்கும் நாயகனாக உள்ளவனும் ஒரு பொம்மை.

திட்டவட்டமான பிரச்னை கிடையாது. பிரச்னை என்று ஒன்றை அடையாளம் காட்டினால் அதற்குத் திட்டவட்டமான முடிவு கிடையாது.

‘மிஸ்டர் சம்பத்’ படத்தின் மூலப்படமான ‘மிஸ். மாலினி’ வெளியான நாள்களில், தமிழ்நாட்டில் ரேஷன் விதிகள் வாழ்க்கையை மிகவும் சிரமம் உடையதாகச் செய்து விட்டிருந்தன.

கியூவில் நிற்பது என்பது அந்த நாளில் புதிய அனுபவம். இதை எல்லாம் ‘மிஸ் மாலினி’ பிரதிபலித்தது.

இந்த ‘சடையர்’ அம்சத்தை ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக, ‘பராசக்தி’ வெளியான நாள்களில்தான் எடுத்துக் கூற முடிந்தது.

‘மிஸ்டர் சம்பத்’ படத்தில் ‘சடையர்’ எடுபடவில்லை. ‘மிஸ் மாலினி’ படத்தைப் போலவே ‘மிஸ்டர் சம்பத்’ படத்திலும் இந்த ‘சடையர்’ இரு தளங்களில் இருந்தது.

ஒன்று அதன் கதைப்போக்கிலும் பாத்திரச் சித்திரிப்பிலும்.

இந்தத் தள ‘சடையர்’ ஓரளவு வெற்றி என்றுகூடக் கூறலாம். இது மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது.

அப்பாத்திரங்களை மோதிலால், கன்னையாலால், ஆகா என்ற மூன்று முழு பம்பாய் நடிகர்கள் ஏற்றார்கள்.

இரண்டாம் தள ‘சடையர்’ திரைப்படத்திலேயே வரும் மேடை நாடகங்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. இவை எல்லாமே வெறும் நாடகமாகவே போய்விட்டன. ‘ஐம்பது-அறுபது’ நாடகம் கூட.

இந்த ஐம்பது – அறுபது நாடகம், என்.எஸ்.கே. தயாரித்த ‘மணமகள்’ என்ற படத்தில் லலிதா – பத்மினி சகோதரிகள் நடனம் ஆடுவதற்கு வசதியாக அமைந்தது.

1950-ல் உள்ள சிரமமான நிலையும், அறுபதில் அடையக்கூடிய மேன்மையும் இதில் மாறி மாறிக் காண்பிக்கப்பட்டன.

‘மிஸ்டர் சம்பத்’ படத்தில் இதையே ’53-63′ (த்ரேபன் -த்ரேசட்) என்று மாற்றப்பட்டது.

சமூகத்தின் வருங்காலம் பற்றிய கனவுகள், எப்படி எதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தாது இருக்கும் என்பதற்கு இந்த இரு நடன நாடகங்களும் இன்றைக்கு எடுத்துக்காட்டு.

தமிழில் அது ‘பராசக்தி’ ஆட்சி செலுத்திய காலம்.

இருபது ஆண்டுக் காலத்தில் தமிழ் சினிமா, பார்ஸி மேடை நாடகப் பாணித் தொடக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுவித்துக் கொண்டு திரைப்படத்துக்கே உரிய ‘மொழி’ ஒன்றைக் கைவசப்படுத்திக் கொள்ளும் தருணத்தில் மீண்டும் நாடக பாணிக்கும் பின் தள்ளப்பட்டது.

நடிகர்கள் கேமராவை நோக்கிப் பக்கம் பக்கமாக வசனங்களை அடுக்குத் தொடரிலும் அடங்காத மொழியிலும் வாரி இறைக்கத் தொடங்கினார்கள்.

பொதுவாகவே திரைப்படத் துறையில் ஏதாவது ஓர் அம்சம் பரபரப்பு ஏற்படுத்தினால் உடனே மூன்று நான்கு ஆண்டுகளுக்கு அதே அம்சம் எல்லாத் திரைப்படங்களிலும் புகுத்தப்படும்.

‘பராசக்தி’ ஏற்படுத்திய பரபரப்பும் சமனப் பட சில ஆண்டுகள் தேவைப்படும். ஜெமினியில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்களுக்கே ‘பராசக்தி’ ஒரு தாழ்வுமனப்பான்மையை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

அதுவரை ஜெமினிப் படங்கள் உரையாடல்களுக்கான தனிப்பெயர் ஏதும் பெற்றதில்லை. ஆனால் இனியும் அதுபற்றி அலட்சியமாக இருக்க முடியுமா?

‘மிஸ்டர் சம்பத்’ வெளியாகிய அடுத்த ஆண்டிலும் போனஸ் இருந்தது. ஆனால் முன்பு போல அவ்வளவு தாராளமாக இல்லை.

அத்துடன் இன்னொன்றும் இருந்தது. ஆள் குறைப்பு.

நான் ஜெமினியில் சேர்ந்த நாள் தொடங்கியே எல்லாரும் இதோ வரப்போகிறது, இதோ வந்தேவிட்டது என்று இந்த ஆள்குறைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

ஜெமினியின் மகோன்னத நாட்களிலேயே ஒரிருவர் அவர்களாகவே வேலையைவிட்டுப் போவார்கள்.

ஜெமினியின் நூலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அப்படித்தான் போனார்.

ஒரு தனிப்பட்டோர் திரைப்படக் குழுவில் சேர்ந்தார். கதை, வசனம், நடிகர் தேர்வு எனப் பொறுப்புகள்.

இந்தப் பையன் என்ன பெரியதாகச் சாதித்து விடப் போகிறான் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் அவனுடைய படம், புதிய நாடக பாணி வசன மழை வெள்ளத்தையும் மீறிப் பெரும் வெற்றி கண்டது.

இன்னும் பிரம்மாண்டமான படத்துக்குத் திட்டம் தீட்டப்பட்டது.

பகுத்தறிவு மணம் தமிழ்நாடு எங்கும் வீசிக்கொண்டிருக்கும் போது ராஜா – ராணி – சாபம் – விமோசனம் கதையா என்றார்கள். அதுவும் மாபெரும் வெற்றி.

அதுவே ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது. முந்திய சாதனைகளை எல்லாம் தூள் தூளாக்கிக் கொண்டு ஓடியது.

இப்படங்கள் முறையே, ‘மனம்போல் மாங்கல்யம்’, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘தேவதா’.

மாஜி ஜெமினிக்காரரான கே.எஸ். ஸ்ரீனிவாசன் என்ற அந்த இளைஞருக்கு இந்த மூன்று படங்கள் வரை நல்ல காலம்.

அந்தக் கம்பெனியின் பெயர் நாராயணன் கம்பெனி. மூன்று படங்களிலும் ஜெமினி கணேசன்தான் கதாநாயகன்.

இதன் ஒரு விளைவு, ஒரிரு ஆண்டுகளுக்காவது இரு கணேசன்களின் ரசிகர்கள், ரசிகர்களுக்கே உரிய பகைமை பாராட்டினார்கள்.

மூன்றாவது முனையாக எம்.ஜி.ஆர்.

சிறிது சிறிதாக இந்த முக்கோணம் ஒரு கோணத்தை இழந்து, அடுத்த இருபது ஆண்டுக் காலத்துக்கு, இரு ஆண் நட்சத்திரங்களுக்கு இடையில் தமிழ்த் திரைப்படவுலகம், அதன் ஏற்றத்தையும் ஏக்கத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஒப்படைத்தது.

இந்த மாறுபட்ட, குழப்பம் மிகுந்த சூழ்நிலையில் ஜெமினி என்ன செய்யப் போகிறது? அதன் அடுத்த படம் என்ன?

இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த நாள்களிலேயே ‘சந்திரலேகா’, ‘ஔவையார்’ ஆகிய இரு படங்களின் அறிவிப்பை ஆனந்த விகடன் தீபாவளி மலர்கள் தாங்கியிருக்கின்றன.

அந்த அறிவிப்பின்படி கே.எல்.வி. வசந்தா என்பவர்தான் ‘சந்திரலேகா’வில் கதாநாயகி.

‘ஒளவையார்’ படத்தில் கே.பி. சுந்தராம்பாள்.

பல்வேறு வகையில் கதை, நடிகர் மற்றும் அமைப்பில் மாற்றம் அடைந்த பிறகுதான் சந்திரலேகா அதனுடைய இறுதி வடிவம் அடைந்தது.

ஜெமினி நூலகத்தில் இப்படத்துக்கான பல திரைக்கதைகள் கிடந்தன. ‘ஒளவையார்’ படம் மட்டும் ஒரு முடிவுறா தயாரிப்பு என்றுதான் சம்பந்தப்பட்டவர்கள் எண்ணியிருக்கவேண்டும்.

அது அறிவிக்கப்பட்ட பின் எத்தனை ஜெமினி படங்கள் அதனை முந்திக் கொண்டன. அந்நாள் வரை ‘ஔவையார்’ ஓர் ஓய்வு நேரத் தயாரிப்பாக இருந்தது.

‘மிஸ்டர் சம்பத்’ வெளியிடுவதற்காக வட இந்தியாவுக்குச் சென்று, 1953 தொடக்கத்தில் சென்னை திரும்பிய வாசன் எடுத்த முதல் தீர்மானம், இனியும் இந்த ‘ஔவையார்’ தயாரிப்பை இழுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதுதான்.

அன்றைய தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் அனைவரும் – புதுமைப்பித்தன் உள்பட – எப்போதாவது எம்முறையிலாவது அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.

அதுவரை படமெடுக்கப்பட்டதில் திருவள்ளுவர் பகுதி இரண்டு மணி நேரம் இருந்தது;

ஆதி பகவன் பகுதி இரண்டு மணி நேரம் இருந்தது; ஏலங்குழலிப் பகுதி இரண்டு மணி நேரம் இருந்தது;

அடங்காப் பிடாரி மனைவி பகுதி இரண்டு மணி நேரம் இருந்தது; பாரி மன்னன் பகுதி இரண்டு மணி நேரம் இருந்தது.

தமிழகத்தின் மிக நீளமான திரைப்படம் என்ற சிறப்பைப் பெறப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

அப்படியே அதுவரை படமாக்கப்பட்டதை இணைத்து வெளியிட்டால் போதும்.

ஆனால், வாசன் அப்படிச் செய்யவில்லை.

உண்மையில் அடுத்த ஆறு மாதத்தில் செய்து முடித்த வேலை, ஆறு ஆண்டுகளில் முடித்ததைவிட அதிகமாக இருந்தது. படம் மூன்று மணி நேரத்துக்கு வெட்டப்பட்டது.

அந்த 1953 ஆகஸ்டு சுதந்தர தினத்தன்று ‘ஒளவையார்’ படம் வெளியிடப்பட வேண்டும் என்று வாசன் உத்தரவு பிறப்பித்தார்.

– கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘அசோகமித்திரன் கட்டுரைகள் நூல் -2’-லிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment