பைசன் காளமாடன்: மூர்க்கமா, ஆக்கமா?

தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடிப் பகுதியில் 1990-களில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமம் வனத்தி. பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமம் தேமாங்குளம்.

அந்தப் பகுதி மக்களுக்கே கபடிதான் உயிரில் கலந்த ‘தேசிய’ விளையாட்டு. அதனாலும் அங்கு சாதிய மோதல்கள் நிகழ்வதுண்டு. அதன் பாதிப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொடர்வதும் உண்டு.

தாழ்த்தப்பட்ட கிராமத்துக் கோவில் பூசாரிக்கு (பசுபதி) ஒரு மகன் கிட்டான் (துருவ் விக்ரம்), ஒரு மகள் (ரஜிஷா விஜயன்). கிட்டானுக்கு பெரிய கபடி வீரன் ஆக வேண்டுமென ஆசை.

கிரிக்கெட்டில் நன்றாக ஆடி இலங்கையை இந்தியா ஜெயித்தால், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவது போல,

இதற்கு முன்பு கபடி ஆட்டத்தில் சாதனை படைத்த தாழ்த்தப்பட்ட சமூக வீரன் ஒருவனை, பிற்படுத்தப்பட்ட சாதி வெறி ஆட்கள் வெட்டிக் கொன்றதைப் பார்த்த பூசாரிக்கு, மகனுக்கும் அந்த நிலை வரக் கூடாது என்ற பயம்.

எனவே கிட்டானுக்கு கபடி வேண்டாம் என்பதில் உறுதியாக நிற்கிறார்.

அதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபடி வீரன் ஒருவனுக்கு கிட்டானை பிடிக்காது. அதனால் கிட்டானின் குடும்பத்தையும் அவனுக்குப் பிடிக்காது.

கிட்டான் கபடியில் முன்னேறக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட சமூக கபடி வீரனே நினைக்கிறான். ஆனால் அவன் தங்கை (அனுபமா பரமேஸ்வரன்) கிட்டானைக் காதலிக்கிறாள்.

பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர் கந்தசாமி (லால்), தாழ்த்தப்பட்ட மக்களின் சாதித் தலைவர் பாண்டியராஜா (அமீர்). இருவரும் வேறு தங்கள் கவுரவத்துக்காக இரு சமூக மக்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் (மதன்) கிட்டானுக்கு உதவுகிறார்.

கிட்டான் தனது ஊருக்கும் வெளியே வேறு வேறு அணிகளில் விளையாடி உயர்கிறான்.

அதன் பின்னரும் சொல்ல முடியாத கஷடங்களை அவமானங்களை தடைகளை துரோகங்களை அடி உதையை தாங்கி முன்னேறி, இந்தியக் கபடி அணியில் இடம் பெற்று, ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடப் போனால், பாகிஸ்தானும் இந்தியாவும் ஆடும் முதல் மேட்ச்சில் கிட்டானுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

ஆடாமல் ஜெயிக்காமல் வந்தால் ஊருக்குள்ளே நுழைந்தால் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலையில்,

கிட்டானுக்கு என்ன நடந்தது? சாதி வெறி என்னும் மலையை சுமந்தபடியே தன்னை நிரூபிக்க ஓடிய கிட்டான், இலக்கை அடைந்து வென்றானா, இற்று விழுந்தானா? என்பதே இந்த ‘பைசன் காளமாடன்’.

தலித் இளைஞனும் சிறந்த கபடி வீரருமான மணத்தி கணேசன் என்பவரின் வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களோடு கற்பனைகளையும் சேர்த்து இந்தப் படத்தை எழுதி இருப்பதாக படத்தின் துவக்கத்தில் சொல்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தை சிறப்பாகப் படைத்துள்ளார் மாரி செல்வராஜ். சமரசம் இல்லாத கடின உழைப்பு, மிக நீண்ட லாங் ஷாட்கள் மூலம் கதை நடக்கும் நிலவியல், மண் மனம், கதை நடக்கும் சூழல் இவற்றை சிறப்பாக உருவாக்குவதன் மூலம் சாதாரண காட்சிகளையும் தரக்கூட்டல் செய்துள்ளார்.

”யாருன்னே தெரியாத ஒருத்தன் வந்து கட்டிப் புடிச்சு, நீ நம்ம ஆளுங்கறான். யாருன்னே தெரியாத ஒருத்தன் முறைக்கிறான். எவன் உண்மை, எவன் பொய்ன்னு தெரியல?” என்று துருவ் விக்ரம் புலம்புவது தாழ்த்தப்பட்ட மக்களின் ஆழ் மன வலியை நேர்மையாக வெளிப்படுத்தும் வசனம்.

‘கர்ணன்’ படத்தில் லால் கதாபாத்திரத்திடம், செத்துப் போன மனைவியின் தோழி சொல்லும் விஷயம் காமம் சம்மந்தப்பட்டது என்பதையும் மீறி நெகிழ வைக்கும்.

அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அந்த வழியில் படத்தின் இரண்டு கதாநாயகிகளின் (அனுபமா, ரெஜிஷா) காதலன்களும் பெண்களைவிட வயதில் சிறியவர்கள். சிறப்பு மாரி செல்வராஜ்.

பிற்படுத்தப்படுத்தப்பட்ட ஆட்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியதால் தன் சமூக ஆட்களிடம் அடிவாங்கிய பிற்படுத்தப்பட்ட ஆட்களும் உண்டு.

சொந்த லாபத்துக்காக சாதி வெறி பிடித்த பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்களிடம் பணத்துக்காக தன் சமூகப் போராளிகளைக் காட்டிக் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட ஆட்களும் உண்டு என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

”நம்ம ஆளுக அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க அண்ணா” என்று ஒரு காட்சியில் தன்னிடம் சொல்லும் உதவியாளரிடம் அமீர் சொல்லும் பதில் மாரியின் மனசாட்சியின் குரலாகவே இருக்கட்டும்.

‘இயக்குநர் மேதை’ மகேந்திரன் தனது நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் பற்றிக் கூறியபோது,

”கல்யாணத்துக்கு முன்பு, விரும்பி ஜாக்கிங் போகும் பழக்கம் உள்ள ஒரு பெண், கல்யாணத்துக்கு அப்புறம் தன் கணவன் உயிரைக் காப்பாற்ற ஓடுகிறாள் என்ற வாக்கியம்தான் அந்தப் படம் உருவாகக் காரணம்” என்றார்.

அதே போல இந்தப் படத்தில், சாதி ரீதியான அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஓடி ஓடியே தீர்த்துக் கொண்ட இளைஞன், ஒரு நிலையில் தன் சாதி அவமானத்தைக் களையவும், லட்சியத்தை அடையவும், உயிர் பிழைக்கவும் ஓடுகிறான்.

நடிப்பு, உழைப்பு என இந்தப் படத்தில் பிரம்மிக்க வைக்கும் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் துருவ் விக்ரம். நம்பிக்கையை விதைக்கிறார்.

துருவ் தமிழ் சினிமா வானில் ஒரு துருவ நட்சத்திரமாக வருவார்.

இயல்பில் ஜொலிக்கும் நடிப்பைப் படம் முழுக்க வழங்குகிறார் பசுபதி. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அவர்.

கம்பீரமான கேரக்டரில் பட்டாசு வசனங்களைப் பேசி பலம் சேர்க்கிறார் அமீர். ரெஜிஷா மிகப்பொருத்தம்.

சற்றே மலையாள வாசனைப் பேச்சு, மலையாள நடை, உடை, பாவனை இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பும் சிறப்பு.

பல படங்களில் தமிழை மலையாளம் போல பேசி அதையும் விக்கல் வந்த மாதிரி பேசும் வழக்கமுள்ள லால் இந்தப் படத்தில் சிறப்பாக பேசியிருப்பது ஆச்சர்யம் (ஒருவேளை அவர் மாதிரி வேறு யாரும் பேசினார்களோ என்னவோ)

இயக்கத்தையும் எழில் அரசுவின் ஒளிப்பதிவையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கவே முடியவில்லை.

இயக்குநரின் கற்பனையை நிஜத்தில் கொண்டு வருவதில் மாபெரும் பங்களிப்பை தந்திருக்கிறது ஒளிப்பதிவு.

நிவாஸ் பிரசன்னாவின் பாடல் இசை உருவாற்றுகிறது எனில், பின்னணி இசை ஒரு தனி மொழி போல் உணர வைக்கிறது.

பைசன் என்பது காட்டெருமை. அதாவது எருமை. ஆனால் காளமாடன் என்பது வேறு. பைசன் எப்படி காளமாடனாகவும் இருக்க முடியும் என்ற கேள்வி ஆரம்பத்தில் வந்தது நிஜம்.

ஆனால், மண்ணின் மைந்தர்களுக்கு அவன் காளமாடன். காஸ்மாபாலிட்டன் சமூகத்தின் பார்வையில் அவன் பைசன் என்று உணரவைக்கும் விதம் அருமை.

இப்படி எல்லாம் சுயசாதி ஆட்கள் தொடங்கி இந்தி வாலாக்கள் வரை எல்லோராலும் புறக்கணிக்கப்படும் கிட்டான்,

இவ்வளவு கத்திகள், உருட்டுக் கட்டைகள், வேல் கம்புகளையும் மீறி தப்பிக்காமல் போய் விடுவானோ, இல்லை மாட்டிக் கொள்வானோ என்ற பதட்டம் ஒவ்வொரு காட்சியிலும் வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

ஆனால், எடுத்த எடுப்பிலேயே கிட்டான் ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியின் சார்பாகப் போய்விட்டான் என்று சொல்லி விடுவதன் மூலம்,

”அதாம் லே அவன் சப்பான் போயிட்டாம்லா, உசுருக்கு ஒண்ணும் பங்கமில்லப்பா…” என்று படம் பார்ப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகி விடுகிறார்கள்.

அவன் ஜெயிப்பானா இல்லையா என்ற ஒரே விசயத்துக்குள் விசயத்துக்குள் படம் சிக்கிக் கொண்டது.

இப்படி சில குறைகள், கேள்விகள் எழுந்தாலும், பைசன் காளமாடன் – திமில் திமிறும் சிறப்பான சீற்றம்.

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment