நூல் அறிமுகம்:
* இந்து மதமும் சாதியும் இரட்டைப் பிள்ளைகள். சாதியும் சாதிக் கொடுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இந்த ஒப்புவமைகளுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை அட்டூழியங்களே சான்று என்று பல்வேறு தரவுகளோடு நிரூபிக்கிறது இந்த நூல் !
* நீடாமங்கலம் வன்கொடுமை நிகழ்ச்சியை நமக்கு தகுந்த ஆதாரங்களோடு கள ஆய்வு அடிப்படையில் நூலை படைத்துள்ளார் முனைவர் பேராசிரியர். ஆ. திருநீலகண்டன்.
அவரது இந்த சிறப்பான முயற்சிக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !
* 1937ம் ஆண்டு இறுதியில் பழைய தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு மாநாடு நடைபெற்றது.
தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் மூன்றாவது அரசியல் மாநாடு 28.12.1937 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்றது. மாநாட்டுத் தலைவராக ஓமந்தூர் பி. ராமசாமி இருந்து நடத்தினார்.
* மாநாட்டில் பிற்பகல் வேளையில் சமபந்தி விருந்துண்ணலுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சாதி, மத வேறுபாடின்றி யாவரும் வரலாம் என பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது !
* அதன் காரணமாக அங்கு வேடிக்கைப் பார்க்க நின்றிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட பிறப்பு வழிச் சாதிய தடையை மறந்து, பசியில் எல்லாம் மறந்து போய் மாநாட்டுப் பந்தலில் அமர்ந்து உணவருந்தினர் !
* இதைக் கண்டு சினம் கொண்ட மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தூண்டுதலின் பேரில் உணவருந்திக் கொண்டிருந்த அந்த தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களை சிலர் தாக்கி விரட்டியடித்தார்கள். வலி தாங்காமல் அவர்கள் அனைவரும் எழுந்து ஓடினார்கள் !
அந்த அப்பாவிகளை அத்தோடு விட்டார்களா இந்தப் பாவிகள் ? இல்லையே !
* அதற்கு மறுநாள் அந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கு தகவல் தரப்பட்டு அங்கும் அவர்கள் தாக்கப்பட்டார்கள். அங்கே அவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தார்கள்.
அவர்களுக்கு மொட்டை அடித்து அவர்களது வாயில் சாணிப்பாலை கரைத்து ஊற்றி, அவர்களுக்கு சாணிப்பாலால் அபிஷேகம் செய்தார்கள்.
* சுமார் இருபது தொழிலாளர்களுக்கு இந்த தண்டனை தரப்பட்டது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் – தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் ஆகியோர்..!
* இந்த கொடிய வன்முறையைக் கண்டித்து சுயமரியாதை இயக்கம் உடனேயே எதிர் வினையாற்றியது. சுயமரியாதை இயக்க நாளேடுகள் ‘விடுதலை’ மற்றும் ‘குடிஅரசு’ இதை முதன் முதலில் உலகிற்கு எடுத்துச் சொன்னது.
இந்த ஏடுகள் இரண்டும் ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு தமிழ் மக்களிடம் நீடாமங்கலம் வன்கொடுமையைப் பேசு பொருளாக்கியது. வேறு எந்த பத்திரிக்கைகளும் இதுபற்றி மூச்சு விடவில்லை !
* சாதிய வன்கொடுமையைப் பற்றி ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்த முனைவர் ஆ. திருநீலகண்டன், சாதி வேறுபாடுகளை சுயமரியாதை இயக்கம் எப்படி கையாண்டது என்பதை வரலாற்று ரீதியாகவும் தெரிவித்திருக்கின்றார் !
* 1926ம் ஆண்டு மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாடு, 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு, 1930 மற்றும் 1931களில் நடைபெற்ற மாகாண மாநாடுகளில் விருந்துண்ணல் நிகழ்வுகளில் நாடார்களை (அன்று தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட வர்கள் ) கொண்டு சமையல் செய்ய வைத்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தொண்டர்களுடன் இணைந்து பார்ப்பனரல்லாத உயர் சாதியினரும் உணவை பறிமாற வைத்தும் மாற்றத்தை துவக்கி வைத்தது சுயமரியாதை இயக்கம் !
அதன் தொடர்ச்சியாக சாதி மறுப்பு திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும் !
* இந்த வன்கொடுமையை அறிந்தவுடன் அன்றைய நீடாமங்கல சுயமரியாதைக் கட்சித் தலைவர் அ. ஆறுமுகம் பெரியாருக்கு தந்தி வழியாக தகவலை தெரிவித்தார். தந்தியை பெற்றவுடன், விடுதலை நாளிதழின் ஆசிரியர் குழுவிலிருந்த அ. பொன்னம்பலனாரைக் கள விசாரணைக்காக நீடாமங்கலத்திற்கு பெரியார் அனுப்பி வைத்தாராம் !
* பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு சுயமரியாதை இயக்கம் பாதுகாப்பு தந்தது. மேலும் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட தோழர்களை பெரியார் பல பொதுக் கூட்டங்களில் பேச வைத்தார் .
* அப்போது சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி இருந்தார். சட்டசபையில் இது பற்றி கேள்வி எழுந்த போது, ” அப்படி எந்த ஹரிஜனரும் அவமானப்படுத்தப்படவோ, தாக்கப்படவோ இல்லை ! ” …என்று பதிலுரைத்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் மந்திரி வி. ஐ. முனுசாமிப்பிள்ளை !
* இதே காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் இரட்டைமலை சீனிவாசனும் எம். சி. ராஜாவும் எவ்வித எதிர்வினையாற்றியதாக எந்த தகவலும் இல்லை என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார் !
* இந்த வன்கொடுமை செய்திகளை எதிர்த்து பண்ணையார் தரப்பினர் விடுதலை நாளிதழ் மீது மானநஷ்ட வழக்கை 12.02.1938ல் திருத்துறைப் பூண்டியில் தொடுத்தார்கள். அன்றைய நீதிக்கட்சியின் துணைத்தலைவர் ஏ. டி. பன்னீர் செல்வம் விடுதலை இதழுக்காக வாதாடினார்.
* 15.06.1938 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீடாமங்கலம் பற்றி விடுதலையில் வந்த கட்டுரையில் கண்ட விஷயங்கள் உண்மையல்ல எனக்கூறி , எதிரிகளான விடுதலை வெளியிட்டாளர் ஈ. வெ. கிருஷ்ண சாமிக்கும் ஆசிரியர் எஸ். முத்துசாமிப் பிள்ளைக்கும் தண்டனையாக தலா ரூ 200/ அபராதமும் தவறினால் நாலுமாத தண்டனையும் வழங்கப்பட்டது !
* தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. 1938 ஆண்டு ஆகஸ்ட் மாத நடுவில் இறுதித் தீர்ப்பு தரப்பட்டது. அதன்படி ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகை தலா ரூ 200லிருந்து தலா 100 என குறைத்து வழங்கப்பட்டதாம்.
இந்த பதிவுக்குப் பின்னர் வேறு எந்த தகவலும் பின்னர் வந்த விடுதலை நாளிதழில் கிடைக்கவில்லை என நூலாசிரியர் தெரிவிக்கின்றார் !
* சாதிக்கும், சாதிய கொடுமைகளுக்கும் எதிராக சுயமரியாதை இயக்கமும் தந்தை பெரியாரும் நடத்திய போராட்டங்களும், முன்னெடுப்புகளும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இது போன்ற நூல்கள் பேருதவியாக இருக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை !
வாய்மையை காப்பாற்ற வாய்ப்பிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது !
- பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.******************************
நூல்: நீடாமங்கலம் : சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
ஆசிரியர்: முனைவர் ஆ. திருநீலகண்டன்
காலச்சுவடு பதிப்பகம் –
பக்கங்கள்: 152
விலை: ரூ.190/-