அதிகரிக்கும் பதற்றம்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, லண்டனில் இருந்து வெளிவரும் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையின் மூலம் தெரியவந்துள்ளது.

டாக்டர் டேமியன் சன்டோமவ்ரோ என்பவரின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஆயிரக்கணக்கானோரிடம் 12 பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

“உலகளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 120 கோடியாக உள்ளது. இது கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு 2 மடங்காகும்.

இதுபோன்ற பாதிப்பு பெண்களிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.

அதேநேரத்தில் ஆட்டிசம், கவனக் குறைபாடு, ஆளுமைக் குறைபாடு போன்றவை ஆண்களிடம் காணப்படுகின்றன.

இதேபோல் கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும், மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்த பூமியில் 7 பேரில் ஒருவர் மனநல பாதிப்பில் வாழ்கிறார்.

கொரோனா தொற்றுக்கு முன்பே பதற்றம், மன அழுத்தம் போன்றவை அதிகமாக இருந்தன.

உலகளவில் கொரோனா காலத்திலும், அதற்குப் பிறகும் அந்தப் பிரச்சினை வேகமாக அதிகரித்துவிட்டது.

அதன்பிறகு பழைய நிலைக்கு வரவில்லை.

அதிலும் கடந்த 2023-ம் ஆண்டுதான் இந்தப் பிரச்சினை உச்ச கட்டத்தில் இருந்துள்ளது.

குறிப்பாக 15 வயது முதல் 19 வயதுள்ள இளைஞர்கள் தான் மனநலம் பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உலகளவில் மனநல சேவைகளை அதிகரிப்பது மட்டும் தீர்வாகாது.

வாழ்க்கை முறையில் தெரபி, தேவைப்படும் நேரங்களில் மருந்துகள், உணவு, உடற்பயிற்சி, உறக்கம், சமூக ஈடுபாடு போன்ற மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.”

Comments (0)
Add Comment