தவெகவின் வெள்ளை அறிக்கை உணர்த்துவது என்ன?

தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றபோது, “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்” என்று அறிவித்திருந்தார். 

அதைத்தான் இப்போது நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்.

அதேசமயம் சென்ற திமுக ஆட்சியில், இதேமாதிரியான வெள்ளை அறிக்கையை எதிர்க்கட்சிகள் கேட்டபோது, வெள்ளை பேப்பரை ஒருவர் தூக்கிக் காண்பித்த சம்பவமும் சிலருக்கு நினைவுக்கு வரலாம்.

தவெக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்திற்குள் எந்தெந்த துறைகளில், எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது?

எந்தெந்தத் துறைகளில் அரசியல் மொழியில் சொன்னால், எந்தளவுக்கு லீக்கேஜ் ஏற்பட்டிருக்கிறது?

– என்பதையெல்லாம் புள்ளிவிவர ஆதாரத்தோடு, இந்த வெள்ளை அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.

இதுவரை தமிழக அரசுக்கான கடன்பாக்கித் தொகை சுமார் பத்து லட்சம் கோடி என்று இதுவரை குறிப்பிடப்பட்டு வந்ததை இன்னும் தெளிவான ஆதரத்துடன் பொதுத்துறைக்கான நஷ்டத்தையும் உள்ளடக்கி சுமார் 13 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாக தெள்ளத் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, இதற்கு முன்பிருந்த ஆட்சியைவிட கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அதிகப்படியான கடன் வாங்கப்பட்டிருப்பதும், அப்பட்டமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டிலிருக்கும் ஒவ்வொருவர் தலைமீதும் சுமார் ஒன்னேகால் லட்சம் கடன் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.

அதோடுமட்டுமல்லாமல், போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டிருக்கிற நஷ்டம் குறித்தும், மிகக் குறைந்த அளவுக்கான வருமானம் வருவது குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இதைக் குறிப்பிடும்போது, கடந்த ஆட்சியின்போது, இதே போக்குவரத்துத் துறையில் பெண்கள் குறிப்பிட்ட பகுதியில் இலவசமாகப் பயணிக்கலாம் என்பதை நடைமுறைப்படுத்திவிட்டு, அப்படி பயணம் செய்பவர்களைப் பார்த்து “ஓசி“ என்று ஒரு அமைச்சரே கேலி செய்யும் அளவுக்கு போன நிகழ்வெல்லாம் நடந்தது.

அதேசமயம் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள உயர்வுக்கும் பென்ஷன் தொகைக்கும் படாதபாடு பட வேண்டியிருந்தது.

போக்குவரத்துத் துறை பெரு நஷ்டத்தில் இயங்கும்போது, ஒருபுறம் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கிறார்கள்.

மறுபுறம் அதே போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் துறை சார்ந்த நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் துன்பத்தை அனுபவித்தார்கள்.

தற்போது, தவெக அரசும் இலவசப் பேருந்து பயணத்தை தமிழக அளவில் விரிவுபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது.

அதன்படி அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், இதே போக்குவரத்துத்துறை இன்னும் எவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்?

அதேமாதிரிதான் மின்சாரத் துறையிலும். ஏற்கனவே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்திருப்பது மாதிரியே மின்வெட்டும் அதிகரித்திருக்கிறது. மின்பற்றாக்குறை நிலவுகிறது.

மின்சாரத் துறையில் டிரான்ஸ்பார்மர் வாங்குவதில் துவங்கி பல்வேறு டெண்டர்களை வழங்கியது வரை எங்கும் ஊழல் கறை ஒட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

இந்தச் சூழலில், தவெக அறிவித்தபடி இலவச மின்சாரத்தைத் தொடர்ந்து அறிவிக்க முடியுமா?

இப்படி பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்களையும் பொருளாதார பற்றாக்குறையையும் விவரித்திருக்கும் இந்த வெள்ளை அறிக்கை அளிக்கும் புள்ளி விவரங்கள், கடனைத் தன் தலையில் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழரையுமே கவலைப்பட வைக்கின்றன.

ஒருபக்கம் இலவசங்களை வழங்கிவிட்டு மறுபுறம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் கனிமவளம், நீர்வளம் என்று பலவற்றில் நிகழும் அன்றாட கொள்ளையை ஒழுங்குப்படுத்தி அதை அரசுக்கு வருவாய் வரக்கூடிய அளவில், மாற்றியமைக்கலாம்.

வசதியானவர்களுக்குக் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். சரியான வருமானத்தைக் கணக்கில் காட்டாமல், பதுக்கி வைத்திருப்பவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி அரசுக்கு வருவாய் ஈட்டித்தரலாம்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை அதிகார பலத்துடன் மீட்டு, அரசுடைமையாக்கலாம்.

இப்படி ஒவ்வொரு துறையையும் சீர்படுத்தி அரசின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றாலும், இவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்த காலதாமதமாகும் என்பது மட்டும் எதார்த்தம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இரு கட்சிகளுக்கான ஆட்சியின்போது, பொருளாதார வளர்ச்சி என்கிற பின்னணியில், நடந்திருக்கிற பொருளாதார சிக்கல்களை, ஒழுங்கீனங்களை, கொள்ளையை, ஊழலை எல்லாம் தகுந்த ஆதாரத்துடன் வாக்களித்த மக்களுக்கு முன் வெளிப்படையாக முன் வையுங்கள்.

ஊழலில் விடுபட்டவர்களை இனியாவது எந்தவித காலதாமதமும் உள்ளடி வேலைகளும் இல்லாமல், நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுங்கள்.

இவற்றிற்கு பின்புலமாக இருந்த அதிகாரிகளின் மீது விசாரணையைத் தொடர்ந்து அவர்களுடைய ஊழல் சொத்துக்களைக் கைப்பற்றுங்கள்.

இதுபோன்ற நடவடிக்கையை எதிர்பார்த்துதான் மக்கள் தங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை தவெக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மயிலிறகாக இருந்தாலும், அதிகப்படியான சுமையை ஏற்றுக் கொண்டே போனால், அச்சு முறிந்துவிடும் என்று அதிகப்படியான சுமையின் கணத்தை வெளிப்படுத்துகிற திருக்குறளின் அர்த்தத்தை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

கடனாளியாக தாங்கள் தொடர்ந்து இருந்துவருவது பற்றிய தன்னுணர்வை தமிழக பெருமக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வெள்ளை அறிக்கை வெளிப்படுத்துவதும் இதைத்தான்.

– மணா

#வெள்ளைஅறிக்கை #தமிழ்நாடு #முதல்வர் #விஜய் #நிதிநிலை #நிதியமைச்சர் #மரியவில்சன் #திமுக #தவெக #அரசியல் #கடன் #போக்குவரத்துத்துறை #இலவசப்பேருந்துபயணம் #மின்சாரத்துறை #பொருளாதாரம் #கனிமவளம் #நீர்வளம் #TamilNadu #ChiefMinister #Vijay #FinanceMinister #MariaWilson #DMK #TVK #Politics #Debt #TransportDepartment #FreeBusTravel #ElectricityDepartment #Economy #MineralResources #WaterResources

Comments (0)
Add Comment