வெள்ளத் தடுப்புப் பணிகளில் வேகம் தேவை!

அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்திய பிரத சாகு, அரசு சிறப்புச் செயலாளர் சு. ஸ்ரீதரன், முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் செயல்பாட்டு தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் புதிய பாசனக் கட்டமைப்புப் பணிகள்,

ஏற்கனவே உள்ள பாசனக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள், நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள்,

அணை மேலாண்மை, கடல் அரிப்புத் தடுப்பு நடவடிக்கைகள், நீர்நிலைகளைப் புனரமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகள்,

ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், தூர்வாரும் பணிகள் மற்றும் பருவமழைக்கு முந்தைய முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதோடு, சென்னையின் வெள்ளத் தணிப்புப் பணிகள், முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகளின் நிலை, புதிதாக அறிவிக்கப்பட்ட பணிகள் மற்றும் அவற்றுக்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொண்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதோடு, ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறையின் முதன்மைச் செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

– வைஷ்ணவி பாலு

Comments (0)
Add Comment