2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க. போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து சாதனை படைத்தது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் “உங்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவேன். அதேபோல் அவருக்கும் வெற்றியைத் தேடித் தாருங்கள்” என்று மக்களிடம் விஜய் கூறினார்.
தேர்தலில் போட்டியிடுவதாக பரவிய தகவல்:
இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதனால் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவிப்பை ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
அரசியலுக்கு வர ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்:
தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதன்மூலம் தான் அரசியலுக்கு வருவது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளார்.
அவர் பகிர்ந்த வீடியோவில், “இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களுடைய ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துக்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது சுயநலமற்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன். நீங்கள் ‘ஆம்’ என்று சொன்னால், நான் அரசியலில் இறங்கத் தயாராக இருக்கிறேன்.
உங்களுடைய ஆசியுடன் இந்த அரசியல் பயணத்தை எப்போது, யாருடன் தொடங்கப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு தனது முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்த அவர், இயக்குநர் பாரதிராஜா மறைவையொட்டி அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்தார்.
ரசிகர்களும் பொதுமக்களும் இந்த வீடியோவில் கருத்திட்டு பகிர்ந்து வருகின்றனர்.
– வைஷ்ணவி பாலு