வறண்ட மேட்டூர் அணை: டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி!

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த வருடம் திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் இருப்பதால் விவசாயிகள் கவலையாக உள்ளனர்.

வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால், 2026-ஆம் வருடத்தில் அந்த தேதியில் நீர் திறக்கப்படாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த முடிவால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக மேட்டூர் அணை நீரையே நம்பியுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாதது, தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது மற்றும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டாதது ஆகிய காரணங்களால் ஜூன் 12-ல் நீர் திறப்பது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பருவமழை தீவிரமடைந்து அணைகளில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், குறுவை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே, கவலையடைந்துள்ள விவசாயிகள் சம்பா சாகுபடியையாவது காப்பாற்ற, தமிழக அரசு கர்நாடகாவுடன் பேசி காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சு. சுரேகா

Comments (0)
Add Comment