கரூர் மாவட்டம் காளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன், அந்த வட்டாரத்தில் சட்ட விரோதமாக இயங்கிவந்த கல் குவாரிகளை எதிர்த்து அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தார்.
குப்பம் என்கிற பகுதியில் உரிமம் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து செயல்பட்ட ஒரு குவாரி, ஜெகநாதனின் புகார் காரணமாக மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர் செல்வகுமாரின் தரப்பு, ஜெகநாதன் மீது 2022இல் மினி வேனை ஏற்றிக் கொலை செய்தது.
இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அண்மையில் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி இளவழகன் – குவாரி உரிமையாளர் உள்பட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதம் அல்லது கூடுதல் சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளார்.
இயற்கை வளத்தைக் கொள்ளை அடித்ததோடு, அதைத் தடுக்க முயன்றவரைக் கொலை செய்யவும் தயங்காதவர்களின் பண வெறிக்கு இந்தத் தீர்ப்பு தகுந்த பாடம் புகட்டியுள்ளது.
தமிழகத்தில், அரசின் அனுமதி பெற்ற 2000க்கும் மேலான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் கனிமம் எடுப்பது, உரிமம் முடிந்த பிறகும் செயல்படுவது, தனியார் இடங்களில் அரசு அனுமதியின்றிக் கனிம வளங்களை வெட்டி எடுப்பது முதலானவை கல் குவாரிகளில் நிகழ்த்தப்படும் பொதுவான விதிமீறல்கள்.
பெரும்பாலும் பொதுநல வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள், அமலாக்கத் துறை போன்றவற்றின் சோதனைகள் போன்றவற்றால் மட்டுமே குவாரிகளின் விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வரும் சூழல் நிலவுகிறது.
குவாரிகளின் விதிமீறலுக்கான குறைந்தபட்ச அபராதத்தை ஒரு டன்னுக்கு ரூ.25 எனக் குறைத்து ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசாணை விமர்சனத்துக்கு உள்ளானது.
அரசு அதிகாரிகள் குவாரி உரிமையாளர்களுக்கு மறைமுகமாகத் துணைபோகின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்கு இது வலுசேர்க்கின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூரைச் சேர்ந்த சமூகச் செயல்பாட்டாளர் கே.ஜெகபர் அலி 2025இல் கொல்லப் பட்டதற்கும் கல் குவாரிகளின் அத்துமீறலே காரணமாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.
பெரும்பாலான மணல் குவாரிகளிலும் இதே சுரண்டல்தான் நடைபெறுகிறது.
ஜெகநாதன் கொல்லப்பட்டதை அடுத்து, அவரின் மனைவி ரேவதி, தங்களது எதிர்காலத்துக்கான சில கோரிக்கைகளை முன்வைத்துக் கணவரின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து பெற்றுக்கொள்ளாமல் ஐந்து நாள்களுக்குப் போராட்டம் நடத்தினார்.
ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதோடு, ஜெகநாதனின் இரு மகன்களின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.
அவற்றை முழுமையாக நிறைவேற்றுவது தமிழக அரசின் பொறுப்பு.
குற்றவாளிகள் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், உரிய சட்ட நடவடிக்கையையும் அரசு திறம்படத் தொடர வேண்டும்.
தவெக தலைமையில் புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில், பல கல் குவாரிகளை நிலவியல் – சுரங்கத் துறை ஆய்வுசெய்ய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 431 குவாரிகளில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
67 குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சில குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகள் இதே உறுதியோடு தொடரட்டும்.
முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த சமூக ஆர்வலர்களுக்கு நீதி நிலைநாட்டப்படட்டும்!
- நன்றி: இந்து தமிழ் திசை தலையங்கம்