தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து தனியார் செய்தி தொலைக்காட்சிகளான பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் ஆகிய சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.
இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க எம்பி கனிமொழி, நா.த.க தலைவர் சீமான், பா.மா.க தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பத்திரிகை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதா? என பலர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இது தவறான தகவல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நீக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானது.
அந்த 3 சேனல்களும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில செட் ஆப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என கூறப்பட்டுள்ளது.
– வைஷ்ணவி பாலு