இது கவிதையல்ல நிகழ் அனுபவம் :
தனக்குப் பிடித்த செல்ஃபோனை வாங்கிய அந்த இளம்பெண்ணுக்கு
அதுவே மூச்சுக்கு நிகரானது.
எந்நேரமும் செல்ஃபோனும் ஒட்டிக்கொண்டது அந்தப் பெண்ணிடம்
உயிருள்ள அங்கத்தைப்போல.
ஒரு நாள் நள்ளிரவில்
போர்வைக்குள் இருட்டில் வெளிச்சம் மிளிர்வதைக் கண்ட தாய்
போர்வையை விளக்கிப் பார்த்தபோது,
கண்சிவந்த முழிப்புடன் இருந்த மகளைப் பார்த்து உச்சக் கட்டக் குரலில் கத்தினார்.
கையிலிருந்த செல்போனைப் பிடுங்கி
அந்தப் பெண்ணிருந்த அறைக் கதவைச் சாத்திவிட்டு
படுக்கச் சொல்லிவிட்டு அந்தக் கதவைச் சாத்திவிட்டுப் போனார் தாயார்.
காலை விழித்து அந்தப் பெண்ணிருந்த கதவைத் திறந்தபோது,
அந்த இளம்பெண் தாயின் சேலையில் மின்விசிறியின் கீழே உயிரற்றுத் தொங்கிக் கொண்டிருந்தார்.
அலறி வீறிட்டுக் கத்தி அந்த சடலத்தைக் கீழே இறக்கி உடற்கூராய்வு செய்து அந்த கிராமத்து மயானத்திற்குச் சென்று அடக்க வேலைகளைச் செய்து மகளின் உடலுக்கு தீமூட்டிய தந்தையிடம் உறவினர் ஒருவர் அந்தப் பெண்ணின் செல்ஃபோனைக் காட்டி கேட்டார் –
“இந்த ஃபோனை என்ன செய்ய?”
“குரல் உடைந்து அழுகையுடன் தந்தை சொன்னார், “அவள் நேசிச்சது, அவளோடேயே எரிஞ்சு போகட்டும், வீசித் தொலை”.
உடன் கட்டையானது அந்த செல்ஃபோன்.
– யூகி