மாடலிங் டூ ராணுவ அதிகாரி: மெத்வானியின் பயணம்!

இளம்பெண் ஒருவர், மாடலிங் உலகில் கிடைக்கும் உடனடி புகழ், பணத்தைத் துறந்து, நாட்டுக்குச் சேவை செய்ய ராணுவ அதிகாரி ஆகியுள்ளார்.

கஷிஷ் மெத்வானி என்ற அந்தப் பெண், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர்.

23 வயதாகும் இப்பெண்ணின் தந்தை விஞ்ஞானி, தாய் ராணுவப் பள்ளி ஆசிரியை.

வீட்டில் தொலைக்காட்சியில் அழகிப் போட்டிகளைப் பார்த்துப் பார்த்தே, தானும் மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டுள்ளார் கஷிஷ்.

அதேநேரம், நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது.

இவர், புனே சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உயிரித்தொழில் நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் நரம்பியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தார்.

இவருக்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஆனால் அதை உதறிய கஷிஷ், தனது கனவை நோக்கி பயணித்திருக்கிறார்.

இவர், 2023-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார்.

அதன் பின்னர், 2024-ம் ஆண்டில் நடைபெற்ற, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள, ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் 11 மாதங்கள் கடுமையான பயிற்சியை நிறைவு செய்தார்.

பயிற்சி நிறைவு அணி வகுப்புக்குப் பிறகு, கஷிஷ் இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக பதவி பெற்று, விமான பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்ந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், கஷிஷ் தற்போது பணிபுரியும் ராணுவ விமான பாதுகாப்பு படைப் பிரிவு முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கஷிஷ் தேசிய மாணவர் படையில் இணைந்து செயலாற்றியபோது, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றதோடு, பிரதமர் மோடி கையால், அகில இந்திய சிறந்த கேடட் என்ற கவுரவமும் பெற்றார்.

அந்த அனுபவம், ராணுவம்தான் தனக்குச் சரியான இடம் என்பதை உணர்த்தியதாக கஷிஷ் தெரிவித்துள்ளார்.

“மாடலிங்கும், அழகி போட்டிகளில் பங்கேற்பதும் எனக்கு பிடித்தமான விஷயங்கள். ஆனால் நான் வாழ்நாள் முழுவதும் அதிலேயே இருக்க முடியாது.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றதும், பிரதமர் மோடி கையால் சிறந்த தேசிய மாணவர் படை வீராங்கனை விருது பெற்றதும், எனக்கு என்று ஒரு பொறுப்பு இருப்பதை உணர்த்தின.

அதன் பிறகு தான், நமக்கான இடம் ராணுவம்தான் என்று தீர்மானித்தேன்” என்கிறார்.

ராணுவ அதிகாரி கஷிஷ் மெத்வானிக்கு மேலும் பல திறமைகளும் உண்டு. உதாரணமாக, இவர் பரதநாட்டியக் கலைஞர், தபேலா இசைக் கலைஞர், வினாடி-வினா போட்டியாளர், விவாதப் பேச்சாளர்.

இவர், விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை.

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கூடைப்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காலத்திலும் பல பதக்கங்களைப் பெற்று பெருமை அடைந்திருக்கிறார், கஷிஷ் மெத்வானி.

எல்லாவற்றுக்கும் மேலாக, கஷிஷ் மெத்வானிக்கு சமூக சேவை எண்ணம் உண்டு.

இவர், கொரோனா ஊரடங்கின் போது, பிளாஸ்மா, ரத்தம் மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிப் பதற்காக மெத்வானி ‘கிரிட்டிகல் காஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இப்படி பல முகங்கள் கொண்ட கஷிஷ் மெத்வானி, மெத்தவும் பாராட்டுக்குரியவர்தான்!

Comments (0)
Add Comment