கூட்டணி ஆட்சி அமையும் சந்தர்ப்பத்தை யார் உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், மக்கள் தான் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை சொல்லியாக வேண்டும்.
மத்தியில், இந்தராகாந்தி பிரதமர் பொறுப்பை இழந்தபிறகு, அமைந்த ஜனதா ஆட்சியில், பலதரப்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அப்படி கூட்டணி அமைத்த கட்சிகளில் ஒன்றாக இருந்தது பாஜக.
பிறகு அதே பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று, அப்படி பெரும்பான்மை பெற்றதாலேயே ஏதேச்சதிகாரம் மனப்பான்மைக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது அதே பாஜக மத்தியில் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளால் வரும் ஆபத்து எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நடைமுறையில், அனுபவப்பூர்வமாக கற்றுக் கொடுத்திருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.
அதேமாதிரிதான் அருகிலிருக்கிற பாண்டிச்சேரியிலும் பல கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணி அரசுதான் அங்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேசமயம் தமிழ்நாட்டில் மட்டும் இங்குள்ள பெரிய கட்சிகளால், அடிக்கடி முன்வைக்கப்பட்ட முழக்கம் “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை.”
அதிலும் திமுகவும் அதிமுகவும் ஒரே குரலில், கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பில்லை என்பதையும் கூட்டணி ஆட்சியில், தேர்தல் காலத்திய கூட்டணி கட்சிகளை இணைக்கவே முடியாது என்றெல்லாம், அடிக்கடி அழுத்தமாக சொல்லிவந்த நிலையில், அந்த முழக்கத்தை தற்போது மாற்றியமைத்திருப்பவர்களும் தமிழக மக்கள்தான்.
என்னதான் புதிதாக வந்த தவெக பெரும்பாலான எண்ணிக்கையைப் பெற்றிருந்தாலும், கூட்டணி ஆட்சிக்கான சூழலை ஏற்படுத்தியிருப்பவர்கள் தமிழக வாக்காளர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.
இது தற்செயலாக நடந்த அரசியல் நிகழ்வல்ல. தமிழகத்தின் பிரதான கட்சிகளான இரு கட்சிகளுக்கும் எதிரான மனநிலை மக்களிடம் இருந்து வந்திருப்பதையும் ஒரு மாற்று ஆட்சியைத் தேடக் கூடிய மனநிலை இளைஞர்களிடம் பெரும்பான்மையாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொண்டே தற்போது தமிழகத்தில் அமைந்திருக்கிற கூட்டணி ஆட்சியைப் பார்க்க வேண்டும்.
ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் விளைவாக, உருவான கூட்டணி ஆட்சியை, அதிலும் மிகவும் சிரமப்பட்டு, அழைக்கழிக்கப்பட்டு இறுதியில் உருவான கூட்டணி ஆட்சியை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை.
அதேமாதிரி மத்தியில் இருக்கிற பாஜகவும் இந்த கூட்டணிச் சூழலை விரும்பவில்லை.
எப்படியாவது, தவெக தலைவரான விஜய் முதல்வர் பதவியை ஏற்றுவிடக்கூடாது என்பதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு என்னென்ன அரசியல் உத்திகள் கையாளப்பட வேண்டுமோ, அனைத்துவிதமான நேரடியான மற்றும் மறைமுகமான தந்திரங்கள் அனைத்தும் இந்தக் கூட்டணி ஆட்சிக்கு எதிராக பிரயோகிகப்பட்டன.
திமுக முதலில் 6 மாத கால அவகாசத்தை கொடுப்போம் என்று அதிகாரப் பூர்வமாக அளித்தாலும் தவெக ஆட்சிக்கு எதிரான விமர்சனத்தை கூர்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
பற்றாக்குறைக்கு அதிமுகவும் தங்களுக்குள் பிளவுபட்டு, தனித்து நிற்கிறது.
ஒருவிதத்தில் பார்க்கப்போனால், பாஜகவின் ஒரு காலத்திய முழக்கமான கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்ற முழக்கத்திற்கு செயல்வடிவம் கொடுத்திருப்பவர் விஜய்தான்.
அதேசமயம் ஊடக பரபரப்பு காரணமாக பலரிடம் இயல்பாக எழுந்திருக்கும் கேள்வி, “இந்தக் கூட்டணி ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும்” என்பதுதான்.
தவெக ஆட்சியில் பங்கேற்றிருக்கிற காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் மீது திமுக வைத்திருக்கும் விமர்சனம் அந்த திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகளை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அதிலும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான ஆ.ராசா அதே கட்சிகளின் நிலைப்பாடு குறித்து, வெளியிட்டு பின்னர் நீக்கிய மிக மோசமான பதிவும், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி இதே கூட்டணிக் கட்சிகளை கழுவி ஊற்றுகிற மாதிரி பேசிய வார்த்தைகளும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதுவரை கொள்கைக் கூட்டணி என்று சொல்லப்பட்டு வந்த அதே கூட்டணிக்குள் மிகக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, கிடைத்த அந்தக் குறைந்தபட்ச தொகுதிகளில், அவர்கள் வெற்றியடைந்து தற்போது கூட்டணி ஆட்சியில் பங்கேற்கும் வரை சென்றிருப்பதை அதே கட்சிகள் தங்களுடைய நீண்டகால செயல்பாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் கருதுகிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்தத் தலைவரான காதர் மொய்தீன் குறிப்பட்டபடி இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றால்தான், தேர்தல் கூட்டணியில் பல கட்சிகள் பங்கேற்கும் அரசியல் சூழ்நிலை வரலாம்.
“தற்போதைய தவெக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்கான சில தந்திரங்களை தவெகவும் கையாள்கிறது என்றாலும், இனி தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிற்கு வர நினைக்கும் எந்த ஒரு கட்சியும் கூட்டணி ஆட்சியில் பங்கு என்கின்ற நிபந்தனைக்கு கட்டுப்படாமல், இங்கு தேர்தல் கூட்டணியைக் கட்டமைக்க முடியாது.
தமிழக முதல்வர் விஜய் மீதும் தவெக கட்சி மீதும் எத்தகைய கடும் விமர்சனங்களை திமுகவும் அதிமுகவும் முன்வைத்துக் கொண்டிருந்தாலும், இப்போதைக்கு உடனடியாக, இன்னொரு தேர்தலை சந்திக்கும் மனநிலையில் அந்தக் கட்சிகள் இல்லை.
தமிழகத்தில் இனி ஒரு தேர்தல் வரும்பட்சத்தில், கூட்டணியில் சேர விரும்பும் எந்தக் கட்சியும் 2 நிபந்தனைகளை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது.
ஒன்று தேர்தலின்போது, கூட்டணி அமைந்தால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும். இரண்டாவது தாங்கள் தங்களுக்கான தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
கூட்டணி வைக்கும் பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட எங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இவை இனிவரும் காலத்தில் தேர்தல் கூட்டணிக்கான பொதுவிதியாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
இடையில் தமிழகத்தில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், திமுக அணியிலும் அதிமுக அணியிலும் எவ்வளவு தூரத்திற்கு கொள்கை பலத்துடன் எத்தனைக் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து நிற்கப் போகின்றன என்பதையெல்லாம், வழக்கம்போல அனைவரும் சொல்வதைப் போல – பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– லியோ