இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவி ஏற்ற நிகழ்வுக்கு முன்பு வரை, அந்த அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பங்கு பெறுவார்களா என்பது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக இருந்தது.
பொதுவுடமைக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தாங்கள் அமைச்சரவையில் பங்கு பெற மாட்டோம் என்பதை தெளிவாக சொல்லிவிட்டன.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் அப்படித் தெளிவாக சொல்லவில்லை. அதனால் ஊடகங்களில் தொடர்ந்து அது விமர்சனத்திற்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
இதற்கு ஏற்றபடி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான தொல். திருமாவளவன் தொடர்ந்து கொடுத்த பேட்டியிலும் பல்வேறு முரணங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.
அதேசமயம் அவருடைய கட்சியின் மற்ற முக்கியப் பொறுப்பாளரான ரவிக்குமார் எம்.பி. போன்றவர்களும், மற்றவர்களும் கொடுத்த பேட்டியின் வெவ்வேறு பதிவுகளிலும் மாறுபட்ட பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டன.
இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரான வன்னியரசு புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்றும், அவருக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட இருக்கிறது என்றெல்லாம் வழக்கம்போல பல செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளிவண்ணம் இருந்தன.
அதே மாதிரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஒரு உறுப்பினர் பெயரும் வலுவாக அடிபட்டது.
ஆனால், இன்று புதிய அமைச்சரவையில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் நேரம் வரை விடுதலைச் சிறுத்தைகள் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்கவில்லை. அதைப் போலவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன்னுடைய நிலையை அறிவிக்கவில்லை.
இதைப்போலவே ஊடகங்களில் நிலவிய இன்னொரு சஸ்பென்ஸ் அதிமுகவிலிருந்து தனித்து சி.வி.சண்முகம் தலைமையில் பிரிந்து தவெகவுக்கு ஆதரவளித்து வாக்களித்த அந்த அணியினருக்கு அமைச்சரவையில் பங்கு இருக்குமா என்பதும் கேட்கப்பட்டது.
ஆனால், இன்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிற அமைச்சரவையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் அணியினருக்கும் பங்களிக்கப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.
தவெகவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்பே முதல்வரான விஜய் அவர்களை நேரடியாகச் சென்று பார்த்ததும் விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் தனித்து வெவ்வேறு பேட்டிகளை அளித்த வண்ணம் இருந்தார்கள்.
அவர்களுக்கு குறிப்பிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட இருக்கின்றன என்றெல்லாம் வழக்கம் போல வதந்திகள் பரவி இருந்தன.
ஆனால், தற்போது அதிமுகவின் சி.வி.சண்மூகம் அணியினருக்கு அமைச்சரவையில் பங்கு அளிக்கப்படவில்லை என்கிறபோது அவர்கள் இனி என்ன முடிவெடுப்பார்கள்?
அமைச்சரவையில் பங்குபெறாத நிலையில் தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து எடுப்பார்களா? அல்லது தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்வார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏற்கனவே பொதுவுடமைக் கட்சிகள் அதிமுகவினரை இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கக்கூடாது என்பதை ஒரு நிபந்தனையாகவே வைத்திருந்தன.
அப்படி அதிமுகவினர் பங்கேற்கும் பட்சத்தில் தாங்கள் இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்திருந்தார்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்.
தற்போது புதிய அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படாமல் சென்னை ராஜ்பவனில் பதவி ஏற்றாலும்கூட, இன்னும் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து தவெக கூட்டணிக்கு ஆதரவளித்திருக்கிற கட்சிகளும், அதிமுகவில் இருந்து பிரிந்து தவெகவை ஆதரித்த கட்சிகளும் இனி என்ன நிலைப்பாட்டை ஏற்பார்கள் என்பதுதான் தற்போது வழக்கம்போல தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசப்படும் விவாதப் பொருளாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை.