பெண்கள் ஜனநாயக உணர்வு மிக்கவர்கள்!

நம் பெண்கள் எப்போதும் சனநாயக உணர்வு மிக்கவர்கள். பேருந்தில் போகும்போது ஒரு குழந்தை சிரித்துவிட்டால் நம் பெண்கள் குழந்தையை வாங்கித் தம் மடியில் வைத்துக் கொள்வார்கள்.
 
குழந்தைகளின் சாதி, மதம் எதையும் பார்ப்பதில்லை.
 
பெண் தெய்வங்கள் இன்னும் ஆயுதம் ஏந்தித்தான் இருக்கிறார்கள்.
 
அம்மன் கோயில்களைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி எனக்குக் கபாலீசுவரர் கோயிலையோ, பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலையோ பார்க்கும்போது ஏற்படுவதில்லை.
 
ஏனென்றால் அம்மன் கோயில்களின்தான் உயிர்களுக்கு இடையேயான ஒத்திசைவு இருக்கிறது. இது பெரும்பாலும் பெண்களால் காப்பாற்றப்பட்டு வருகின்றது.
 
அம்மன் கோயில்களில்தான் பெண்கள் சாமியாடமுடியும். அருள்வாக்குத் தரமுடியும். அம்மன் கோயில்களில்தான் பெண்களின் ஆன்மீகத்தை உறுதிப்படுத்துகின்றோம்.
 
இன்னும் சொன்னால் பெண்கள் போராட்ட உணர்வோடு தங்கள் ஆன்மீகத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.
 
சங்க இலக்கியத்தில் ஊருக்குப் புறத்தே இருக்கக் கூடிய நடுகல்லுக்குப் பெண்தான் வழிபாடு செய்கின்றாள். நெல்லும் மலரும் தூவி இல்லுறை தெய்வத்தை வணங்குகின்றாள்.
 
இன்றைக்கும் பிற கலாசாரங்களால் பாதிக்கப்படாத நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளிலே நாள்தோறும் வீட்டில் விளக்கேற்றுவார்கள். இந்த விளக்கேற்றும் அதிகாரத்தைப் பெண் ஆணுக்குத் தர மறுக்கிறாள்.
 
இதில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. பெண் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது என்பது ஒன்று.
 
சமையல் அறைக்குள் பெண்கள் ஆண்களை நுழையவிட மாட்டார்கள். ‘இங்கே என்ன உங்களுக்கு வேலை?’ என்று விரட்டிவிடுவார்கள்.
 
அதைப் போய் நாம் வலியப் பற்றிக்கொள்வது என்பது அன்றைக்கும் நிகழ்ந்ததுதான்; இன்றைக்கும் நிகழ்வதுதான்.
 
பெரும் சமையலுக்கு நளபாகம், பீமபாகம் என்று பெயர்; சாதாரணச் சமையல் என்றால் அது பெண்ணினுடைய சமையல்.
 
திருவிழா வீடுகளில் பெரிய சமையல் ஆக்க வேண்டுமென்றால் ஆண்கள் வந்துவிடுவார்கள். பிரமாண்டம் என்பதே அதிகாரம்தான்.
 
– தொ.பரமசிவன் 
 
நன்றி: இந்திரன் முகநூல் பதிவு
Comments (0)
Add Comment