இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட சமூகநீதித் திட்டமாகும்.
1900-களின் ஆரம்பத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், பிற சமூகங்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தன.
இதற்கு எதிராக 1916-ம் ஆண்டு நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 1921-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் “Communal G.O.” அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பல சமூகங்களுக்கு விகிதாசார அடிப்படையில் அரசு வேலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்தியாவில் சமூகநீதிக்கான முதல் முக்கிய இடஒதுக்கீட்டு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
இந்தச் சிந்தனையை பெரியார் ஈ.வே.ராமசாமி வலுவாக முன்னெடுத்தார்.
அதேபோல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பில் சமூகநீதிக்கான சட்டப் பாதுகாப்புகளை உருவாக்க முக்கிய பங்கு வகித்தார்.
1951-ம் ஆண்டு “Champakam Dorairajan” வழக்கில், உச்சநீதிமன்றம் Communal G.O. செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக பெரியார் போராட்டம் நடத்தினார்.
பின்னர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு, 1951-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டத்தின் மூலம் Article 15(4)-ஐ கொண்டு வந்தது.
இதன் மூலம் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வ அனுமதி கிடைத்தது.
தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்டோர் (BC) மக்களுக்கு 25% மற்றும் பட்டியலின மக்களுக்கு (SC) 16% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்னர் மு.கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட சட்டநாதன் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், 1971-ம் ஆண்டு BC இட ஒதுக்கீடு 31% ஆகவும், SC இடஒதுக்கீடு 18% ஆகவும் உயர்த்தப்பட்டது.
பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இடஒதுக்கீட்டு சதவீதம் மேலும் உயர்த்தப்பட்டதால், தமிழ்நாட்டின் மொத்த இட ஒதுக்கீடு 68% ஆனது.
அதன் பிறகு, 1989-ம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான அரசு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) தனி ஒதுக்கீட்டை உருவாக்கியது.
தொடர்ந்து, 1990-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து பழங்குடியினர் (ST) மக்களுக்கு தனியாக 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69% ஆனது.
இதற்கிடையில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு அமைத்த மண்டல் கமிஷன், OBC மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை 1990-ம் ஆண்டு வி.பி.சிங் அரசு அமல்படுத்தியது.
இதற்கு எதிராக “இந்திரா சாஹ்னி” வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50%-ஐ தாண்டக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. அதனை பாதுகாக்கும் வகையில், ஜெ.ஜெயலலிதா அரசு தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டு சட்டத்தை இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்த்தது.
இதனால் இன்று வரை தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு வரலாறு என்பது சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்காக பல தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் நடத்திய நீண்ட போராட்டத்தின் விளைவாகும்.
– சங்கீதா