பற்றி எரியும் மலர் தேசம்; மணிப்பூர் மோதலின் பின்னணி!

பத்திரிகையாளர் டி.வி.சோமு

மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது மணிப்பூர். தமிழ்நாட்டின் கொங்கு பகுதி அளவுதான் அதன் நிலப்பரப்பு. ஆனால் மக்கள் தொகை சுமார் மூன்றில் ஒரு பங்கு – 37.9 லட்சம் மட்டுமே.

ஆனால், வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது. இரு பெண்களை நிர்வாணமாக்கிச் சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ நாட்டைப் பதறவைத்தது.

நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிலர் மரணமடைந்து இருக்கிறார்கள். முதலமைச்சர் வீடு நோக்கிப் பேரணி நடந்து, மாநிலமே அல்லோலகல்லோலமாகக் கிடக்கிறது.

இந்த சின்ன மாநிலத்தில் ஏன் இத்தனை பிரச்சினை?

இங்கே மூன்று வித பிரிவினர் இருக்கின்றனர். மொத்த மாநிலத்தின் 10% நிலப்பரப்பில் மெய்தி மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், மொத்த மக்கள் தொகையில் இவர்களே பெரும்பான்மையினர் சுமார் 51%.

மீதமுள்ள 90% பரப்பில் நாகா மற்றும் குகி – ஜோ பழங்குடியினரும் வாழ்கிறார்கள்.

சமவெளியில் வாழும் மெய்தி மக்கள், “நாங்கள்தான் பெரும்பான்மையினர். ஆனால் குறுகிய இடத்தில் வசிக்கிறோம். பரந்துவிரிந்து கிடக்கும் மலைப் பகுதியில் நாங்கள் நிரந்தரமாகக் குடியேறவோ, இடம் வாங்கவோ சட்டம் தடுக்கிறது.

காரணம் எங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைத்திருப்பதுதான். ஆனால் பழங்குடி மக்கள் எங்கள் பகுதியில் இடம் வாங்குகிறார்கள்; குடியேறுகிறார்கள். இந்த நெருக்கடியினால் எங்கள் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. ஆகவே, எங்களையும் பழங்குடிப் பிரிவில் சேர்க்க வேண்டும்” எனப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

மலையில் வாழும் பழங்குடி மக்களான நாகா மற்றும் குகி – ஜோ மக்களோ, “சமவெளிப் பகுதியில் வாழ்வதாலும், அதிக சட்டமன்றத் தொகுதிகள் இருப்பதாலும் மெய்தி இனத்தவர்தான் அதிக செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

அவர்களைப் பழங்குடியினர் என அறிவித்தால், எங்கள் பகுதிக்குள் நுழைவார்கள். எங்கள் நிலத்தை கபளீகரம் செய்வதோடு, எங்கள் இனத்தையே அழித்துவிடுவார்கள்” என எதிர்த்து நிற்கிறார்கள்.

இதற்கிடையே, மலையில் வாழும் நாகா மற்றும் குகி – ஜோ மக்களிடையேயும் மோதல் உண்டு.

வெள்ளையர் இட்ட தீ:

ஆங்கிலேய ஆட்சியில், நாகா மக்களை எதிர்க்க முடியாமல், 18-ஆம் நூற்றாண்டில் பர்மாவில் இருந்து குகி – ஜோ மக்களைக் கொண்டு வந்து குடியமர்த்தினர். இப்போது அந்த இரு மக்களுக்குள்ளும் எல்லைப் பிரச்சினை.

இதற்கிடையே மெய்தி மக்கள், “எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதில் என்ன தயக்கம்? நாங்களும் பழங்குடியினர்தான்.

ஆதிகாலத்தில் நாங்கள் ‘சனமஹி’ என்ற மதத்தைப் பின்பற்றினோம். பிறகு எங்கள் மன்னர் வைணவத்தைத் தழுவ, நாங்களும் மாறினோம்.

பிறகு எங்களை வெள்ளையர் ‘இந்துக்கள்’ எனப் பதிவிட்டுவிட்டனர். அதனால் தவறாக எங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டனர். ஆனால் நாங்களும் ஆதி பழங்குடியினரே” என்கின்றனர்.

மெய்தி மக்களில் ஆகப்பெரும்பாலோர் இந்துக்கள். நாகா மற்றும் குகி – ஜோ இனத்தவர் ஆகப்பெரும்பாலோர் கிறித்துவர். ஆனால் இது மத மோதல் அல்ல. (கிறிஸ்துவர்களான நாகா மற்றும் குகி – ஜோ இடையேயும் மோதல் இருப்பதைப் பார்த்தோம்.)

மூன்று தரப்பினருக்குமே, நிலத்தின் மீதான தங்கள் அதிகாரம், சந்ததியினரின் இருப்பு – எதிர்காலம் ஆகியவையே அடிப்படைப் பிரச்சினை. (எல்லா இடத்திலும் இவைதானே முதன்மை!)

அந்தந்த இனத்தின் பெயரில் ஆயுதப் போராட்டக் குழுக்களும் இருக்கின்றன. அவர்கள் தங்கள் இன மக்களிடையே வரி வசூல் செய்கின்றனர்.

பக்கத்தில் மியான்மர் இருப்பதால், எல்லை தாண்டி அங்கே காட்டுப் பகுதியில் முகாம் அமைத்துக்கொள்வதும் நடக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலமாகவும் வருமானம் வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி யோசித்துப் பார்த்தால், மூன்று தரப்பினருமே தங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதைத் தவறென்று சொல்வதற்கில்லை.

பிரச்சினையைச் சம நோக்குடன் பார்த்துத் தீர்வு காண அரசுகள் முயல வேண்டும்.

முதலில் மூன்று தரப்பினரிடமும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சமவெளி மற்றும் மலைப்பகுதி இரண்டிற்கும் இடையே இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வேண்டும்.

எந்தத் தரப்புக்கும் பாதிப்பு இல்லாத வகையில், நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு குறித்த தெளிவான சட்ட ரீதியான தீர்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து எடுக்க வேண்டும்.

அது நடக்குமா என்பதுதான் நமது எதிர்பார்ப்பு!

– டி.வி.சோமு

Comments (0)
Add Comment