‘தமிழ்நாடு வாழ்க’ என அவையோரை முழங்க வைத்த அண்ணா!

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மரபுகளை மீறி இரண்டு செயல்கள் நடந்தன.
 
ஒன்று:
 
சட்டமன்றத்தில் கோஷங்கள் முழங்கக் கூடாது. அது அவை மரபாக கருதப்படுகிறது. அந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒரு வாக்கியத்தை முழங்கினர்.
 
அதை முழங்குவதற்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள் அவைத்தலைவரிடம் முறையாக வேண்டுகோள் வைத்து அனுமதி பெற்று கட்சி சார்பின்றி எல்லோரையும் முழங்க வைத்தார். அந்த வாக்கியம் ‘தமிழ்நாடு வாழ்க’.
 
தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் எல்லோருடைய ஆதரவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது மிக சுருக்கமாகவே அவரும் பேசினார்.
 
உறுப்பினர் அனைவரின் பங்களிப்பும் குரல் ஒலிப்பும் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்க விரும்பி அவர் வைத்த வேண்டுகோள்தான் ‘தமிழ்நாடு வாழ்க’ என்னும் முழக்கம். சட்டமன்ற அவைமரபுகளை மீறி முழங்கப்பட்டது.
 
இரண்டு:
 
ஒருமுறை முதலமைச்சர் அண்ணா சட்டமன்றத்தில் உரை ஆற்றிக் கொண்டு இருக்கிறார். அந்த உரையை பாதியில் நிறுத்திவிட்டு அவைக்கு வெளியே சென்று திரும்பி வந்து உரையை தொடர்கிறார். இது அவை மரபை மீறிய செயலாகக் கருதப்பட்டது. பேசப்பட்டது.
 
நடந்தது என்னவென்றால் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு அவைக்காவல் அதிகாரியிடம் இருந்து தகவல் வருகிறது.
 
தென் மாவட்டத்தில் இருந்து மக்கள் பலர் அவரை சந்திக்க அவைக்குள் நுழைய முற்படுவதாகவும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தகவல்.
 
அண்ணா தன் உரையை பாதியில் நிறுத்திவிட்டு விவரம் எதுவும் அவைக்குத் தெரிவிக்காமல் வெளியில் சென்று அந்த மக்களை சந்தித்துவிட்டு மீண்டும் வந்து அவை நடவடிக்கைகளில் தொடர்கிறார்.
 
எங்கிருந்தோ தொலை தூரத்தில் இருந்து வந்த அந்த கிராமப்புற மக்களை சட்டமன்ற அலுவல்கள் இருந்தபோதும் அவைமரபை மீறி பாதியில் நிறுத்திவிட்டு வந்து பார்த்த மகத்தான மனிதர் அண்ணா.
 
மக்கள் குரலே மகேசன் குரல் என மதித்த பண்பாளர் அறிஞர் அண்ணா .
 
நன்றி – அருள் பிரகாசம்
 

#தமிழ்நாடு_வாழ்க #சட்டமன்றபேரவை #அண்ணா #பேரறிஞர்அண்ணா #TamilNadu #TamilAssembly #TNAssembly #தமிழ் #தமிழ்நாடுசட்டமன்றம் #சட்டமன்றம் #PerarignarAnna_

 
 
 
Comments (0)
Add Comment