அதிகரித்த வாக்குச் சதவீதம்: என்ன காரணம்?

எத்தனையோ தேர்தல்களை தமிழ்நாடு சந்தித்திருந்தாலும் இம்முறை தமிழ்நாடு சந்தித்திருக்கிற தேர்தல் வித்தியாசமானது.

ஏறத்தாழ 85.15 சதவீத அளவுக்கு வாக்குச் சதவீதம் அதிகரித்திருப்பது  தமிழகத்திலுள்ள அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் ஆவேசமாய் பேசக்கூடியவர்கள், யூ டியூப் வலைதளங்களில் உணர்ச்சிகரமாக பேசுகிறவர்களை மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களையும் இந்த சதவீத உயர்வு வியக்க வைத்திருக்கிறது.

இதுவரை இல்லாத ஆச்சர்யமாக வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு வந்து வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள்.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தங்களின் சொந்த ஊர்களுக்குப் போகிற அதே ஆர்வத்தோடு, பேருந்துகளைப் பிடித்து ஊருக்குச் சென்று வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள்.

கையிலிருக்கிற செல்போனுக்கு ஏறத்தாழ அடிமையைப் போல ஆகிவிட்ட, இளம் தலைமுறையினரும் சற்றே நிமிர்ந்து, வாக்களிக்கும் பூத்களுக்கு ஒரு நடை நடந்து வாக்களித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

தாங்கள் வாக்களித்ததை ஒரு விரல் காட்டி, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல, மிகவும் வயதானவர்களும், மலைப்பகுதிகளில் நீண்டதூரம் நடந்து வந்து வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள்.               

இப்படி பலத்தரப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து ஒரே மாதிரியான உணர்வுடன் இவ்வளவு பரந்துபட்ட எண்ணிக்கையில், வாக்களித்திருக்கிறார்கள் என்றால், இந்த மாற்றம் அரசியல் கட்சிகளாலோ, அல்லது தேர்தல் ஆணையத்தாலோ விளைந்த மாற்றமல்ல.

வாக்காளப் பெருமக்கள் தங்களுக்குள் உருவான அகத் தூண்டுதலின் காரணமாகவே, இந்தளவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.

அந்த விதமான அகத் தூண்டுதலை ஏற்படுத்தியது யார்? என்பது தான் முக்கியமான கேள்வி.

ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பியிருக்கிறார்களா? அல்லது இதே ஆட்சி தொடர வேண்டும் என்கிற எண்ணம்தான்  அவர்களை அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வைத்திருக்கிறதா?   எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் – குறிப்பாக தவெக தலைவரான விஜயின் பிரச்சாரம்  அதிகளவில் ஈர்ப்பை ஏற்படுத்தி வாக்களிக்க வைத்திருக்கிறதா? அல்லது தேர்தலுக்கு முந்திய தினங்களில் கொடுக்கப்பட்ட கடைசி நேர பணப்பட்டுவாடா  வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்திருக்கிறதா? – என்கிற கேள்விகள் பல்வேறு ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தற்போது எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அதிமுக என்கின்ற இயக்கத்தை துவக்கியபோது, அவர் சந்தித்தப் பிரச்சனைகளும் எதிர்வினைகளும் ஏராளம்.

ஆனால், அவரே திண்டுக்கல்லில் அப்போது நடந்த நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாயத்தேவர் என்கின்ற வேட்பாளரை இரட்டை இலை சின்னம் சகிதமாக களம் இறக்கியபோது அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிறகு அதே ஆதரவு தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைக்கும் அளவுக்கு உயர்ந்தது என்பதெல்லாம் நாம் கண்ணுக்கு முன்னால் பார்த்த தேர்தல் உதாரணங்கள்.

அதே மாதிரியாக எழுச்சியான ஆதரவு தற்போது விஜய்க்கும் கிடைத்திருக்கிறதா என்றால், தற்போதைய நிலையில் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பரந்துபட்ட அளவில், பெரும் வாக்குச் சதவீதத்தைப் பெற்று, கூடுதல் தொகுதிகளைப் பெறுவாரா என்கிற கேள்விகளெல்லாம் எழுந்தாலும் கூட, அவர் கணிசமான வாக்கு வங்கியைப் பெறுவார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

விஜய்யின் மீது மற்ற கட்சிகளுக்கு இதுவரை இல்லாத கவனம், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அவருக்குக் கூடலாம்.

தனித்து நின்று தனது வாக்குவங்கியை தேமுதிக தலைவரான விஜயகாந்த் நிரூபித்த பிறகு அவர்மீது மற்ற கட்சிகள் கவனம் செலுத்தி கூட்டணி வைத்துக் கொண்டதைப் போல தற்போதும் நிகழ வாய்ப்பிருக்கிறது.

அத்தகைய ஜனநாயக ரீதியான வாய்ப்பை விஜய்க்கு உருவாக்கித் தந்தவர்களில் ஜென்சி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினருக்கும் பெரும் பங்குண்டு.

இதற்கு முன்பு நடந்த ஒரு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வெற்றியடையாத நிலையில், அப்போது அதிமுக தலைவர் ஒருவர் இப்படிச் சொன்னார், “பெரிய திரை (சினிமா) நமக்கு கைக் கொடுத்துச்சு. சின்ன திரை (தொலைக்காட்சி) நம்ம காலை வாரிடுச்சு“ .

அப்போது, சின்னதிரை செய்த அதே வேலையை பல சமூக வலைத்தளங்களில், தனக்குள் வைத்தபடி இருக்கும் செல்போன்கள் சாதித்திருக்கின்றன.

அதுவே வாக்கு எண்ணிக்கை எந்தளவிற்குக் கூடியதற்கு முக்கியமான காரணம்.

– வே. உஸ்மான்

#voterturnout #வாக்காளர்கள் #வாக்கு #வாக்குசதவீதம் #85சதவீதம் #தேர்தல்ஆணையம் #அரசியல் #கட்சிமாற்றம் #தவெக #விஜய் #பணப்பட்டுவாடா #எதிர்க்கட்சி #தேர்தல் #தமிழ்நாடுதேர்தல் #சட்டசபைத்தேர்தல் #Voters #Vote #85Percent #ElectionCommission #PoliticalParty #PartySwitch #TVK #Vijay #MoneyPolitics #Opposition #Election #TamilNaduElection #AssemblyElection #மக்கள்திலகம் #எம்ஜிஆர் #அதிமுக #MGR #ADMK

 
 
 
Comments (0)
Add Comment