தேர்தல் நடத்தை விதிகளை மீறியது யார்?

ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு, மார்ச் 15-ம் தேதியன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடனேயே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளே சுறுசுறுப்பாகி விட்டதான ஒரு தோற்றம் ஊடகங்கள் வழியாக தெரிந்தது.

விதிகள் அமலுக்கு வந்த நாளிலிருந்தே தங்கள் வாகனங்களில் தங்களது சொந்த தேவைக்காக அல்லது வணிகத் தேவைக்காக எடுத்துச் சென்ற பணம், நகைகள், பொருட்கள் உட்பட பலவற்றையும் விரட்டி விரட்டிப் பிடித்தார்கள் பறக்கும் படையினர்.

அப்போது பல முகூர்த்தங்கள் இருந்ததால், தங்களுடைய வீட்டில் நிகழும் திருமணத்திற்காக நகைகளை எடுத்துச் செல்பவர்கள் கூட அதில் மாட்டிக் கொண்டார்கள். அவர்களது நகைகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வளவு ஏன்? 50,000 வரை தான் பணத்தைக் கொண்டு செல்லலாம் என்கிற நடத்தை விதியை மீறி 50,001 ரூபாய் கொண்டு சென்றதற்காக அந்த நபரிடமிருந்து அந்தப் பணத்தைப் பொறுப்பாக கைப்பற்றி தன்னுடைய கடமை உணர்வை பறக்கும் படையினர், காண்பித்ததன் விளைவாக இதுவரை சுமார் 1,072 கோடி ரூபாயும் நகை உள்ளிட்ட பிற பொருட்களும் கைப்பற்றப் பட்டிருக்கின்றன.

கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்களும் பணமும் முறையான கணக்குக் காட்டப்பட்டு, எந்தளவுக்கு அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதெல்லாம், தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்.

இப்படித் தங்களிடம் சிக்கிய பொதுமக்களைப் படாதபாடு படுத்தி பறிமுதல் செய்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை பெருமிதமாகச் சொல்கிற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரிதானே என்று பலர் நினைக்கலாம்.

ஆனால், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில், சில கட்சிகள் பணப்பட்டுவாடாவை மிகவும் பொறுப்பாக செய்வதாக ஊடகங்களில் விஷ்வலான காட்சிகள் வெளிவந்தன. 

திமுக, அதிமுக மட்டுமில்லாமல் தவெகவைச் சேர்ந்த சில வேட்பாளர்களும், பணத்தை வெவ்வேறு அளவில் விநியோகித்திருப்பதாகவும், சில பொருட்களை வழங்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தங்களுக்குக் கிடைத்த பணத்தை யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள் என்று பல பெண்கள் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்தக் காட்சிகளும் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் அப்பட்டமாக வெளியாகின.

தமிழகம் முழுக்க இப்படிப்பட்ட பணப்பட்டுவாடா குறிப்பிட்ட நாட்களில் கனக்கச்சிதமாக நடந்தேறியிருக்கிறது என்றால், அந்தப் பணம் எவ்வளவு நாட்களுக்கு முன்பே அங்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு மக்களைச் சென்றடைந்திருக்க வேண்டும். 

சாதாரண குடிமக்களை சோதனை என்கிற பெயரில் படுத்தி எடுத்த தேர்தல் ஆணைய அதிகார்கள் தமிழகம் முழுக்க வெளிப்படையாகவே நடந்த பணப்பட்டுவாடாவை எப்படி அனுமதித்தார்கள்?

அவர்களுடைய கண்காணிப்பை மீறி இதெல்லாம் நடக்க முடியுமா? அப்படி பணம் பறிமாறப்படும்போது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால், தேர்தல் நடத்தைவிதிகளின்படி பணத்தை வாங்கியவர் மீதும், பணத்தைக் கொடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அந்தப் பணத்தையோ, பொருளையோ வழங்கியதற்காக – தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்த வேட்பாளர் தேர்தலிலேயே போட்டியிட இயலாத சூழ்நிலை உருவாகியிருக்கும். பணப்பட்டுவாடாவும் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், தேர்தல் ஆணையம் ஏன் இத்தகைய விழிப்பான கண்காணிப்பை இந்த விஷயத்தில் மேற்கொள்ளவில்லை? சாதாரண பொதுமக்கள் மீது எடுத்த விதிமுறை மீறல் நடவடிக்கையை ஏன் வேட்பாளர்கள் மீது எடுக்கவில்லை?

அப்படியென்றால், தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிற தேர்தல் நடத்தை விதிமுறையை தேர்தல் ஆணையமே மீறியதாக அர்த்தப்படாதா?

மக்களின் மாண்புக்காகத் தானே நாம் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறோம்?

– யூகி 

 
Comments (0)
Add Comment