இந்த மாதிரி மோசமான நிலையை எங்கும் பார்க்கவில்லை!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி

தேர்தல் பக்கங்கள் :

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட சமயத்தில் முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையரான என்.கோபால்சாமியைச் சந்தித்து பிரபல வார இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி மீண்டும் உங்கள் பார்வைக்கு.
*

கேள்வி: திரும்பவும் தேர்தலில் பணப் பட்டுவாடா நடப்பது பற்றிய புகார்கள் சொல்லப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

பதில்: இந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு ‘அப்ஸர்வர்’ போட முடியுமா? சொல்லுங்கள். அது சாத்தியமா? நேர்மையாக தேர்தல் நடப்பதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்று சொல்வதா?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்று சொல்வதா? ஒரு பக்கம் பண விநியோகமும் நடக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் இதில் புகுந்து தடுத்தாக வேண்டும்.

கேள்வி: இது தேர்தல் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்துகிற செயல்பாடுகள் இல்லையா?

பதில்: முதலில் இந்த சிஸ்டத்தை யார் பலவீனப்படுத்துகிறார்கள் என்று சொல்லுங்கள். உங்க கிட்டே கேட்கிறேன். யார் பணம் கொடுக்கிறார்கள்? யார் பணம் வாங்குகிறார்கள்?

கேள்வி: இங்கே தேர்தலின் ஒரு அங்கமாக இருப்பவர்கள் தானே இதில் ஈடுபடுகிறார்கள்?

பதில்: உண்மை தான். தொழில் முன்னேற்றத்தில், வளர்ச்சிப் பணிகளில் எதில் எதிலோ தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். படிக்கிறோம்.

இப்போது தேர்தலை முறைகேடாக நடத்துவதிலும் தேசிய அளவில் முதலாவது இடத்தில் இருக்க ஆசைப்படுகிறார்கள். இதைத் தவிர வேறு எப்படிச் சொல்வது?

கேள்வி: சென்ற ஏப்ரல் மாதத்தில் இதே தொகுயில் பணப்பட்டுவாடா நடந்து சுமார் எண்பது கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டும் அதற்கு இதுவரை முறையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லையே?

பதில்: எடுக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? யாராவது போய்த் தேர்தல் ஆணையத்தில் விசாரித்தார்களா? அதை முதலில் சொல்லுங்கள்.

கேள்வி: இதுவரை அப்படி ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் செய்திகள் வரவில்லையே?

பதில்: மீடியாக்காரர்கள் யாராவது அங்கு போய்க் கேட்டீர்களா? அப்படிக் கேட்காமல் ஒன்றும் நடக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்ட பண விஷயத்தில் ஏதோ நடவடிக்கை எடுக்கிற முயற்சியில் இருக்கிறது என்று எங்கோ படித்தேன்.

தேர்தல் ஆணையத்தில் அதற்குப் புகார் பதிவு பண்ணப்பட்டிருந்ததே. அதற்கு முறையான விசாரணை நடந்ததா? இல்லையா? முதலில் அங்கு மீடியாக்காரர்கள் யாராவது போய்க் கேட்டீர்களா? கேளுங்கள்.

கேள்வி: சென்ற முறை தஞ்சை, அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் தொகுதிகளில் ரத்து செய்திருப்பது தமிழகத்திற்கு வெட்கக் கேடு என்று சொல்லியிருந்தீர்களே?

பதில்: ஆம். சொல்லியிருந்தேன். சூழ்நிலையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? சொல்லுங்கள். என்ன மாறியிருக்கிறது?

கேள்வி: இப்போதும் திரும்பவும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடா நடப்பதாகப் புகார்கள் வருகின்றன.

சில லட்ச மதிப்பில் பணம் பிடிபடுகிறது. சிலர் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்தத் தொகுதியில் தேர்தல் முறையாக நடக்குமா?

பதில்: பணப்பட்டுவாடா இப்போதிருப்பது மாதிரித் தொடர்ந்தால் தேர்தலை நிறுத்துவார்கள். நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கேள்வி : அப்படி நிறுத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு அவமானகரமானதாக இருக்காதா?

பதில்: ஏற்கனவே இங்கு அவமானத்திற்குக் குறைச்சல் இருக்கிறதா? சொல்லுங்கள். போன தடவை இருநூறுக்கு மேற்பட்டவர்கள் மனுத் தாக்கல் செய்தார்கள்.

இந்த முறை நூற்றுக்கணக்கானவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் என்ன செய்யமுடியும்? கண்காணிக்க எவ்வளவு அப்ஸர்வர்களைப் போட முடியும்?

ராணுவப் பாதுகாப்பை வரவழைத்தாலும், பணப்பட்டுவாடா விஷயத்தில் ராணுவத்தினர் எல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியுமா? தகராறு நடந்தால் அதை விலக்குவார்கள். அவ்வளவு தான்! அங்குள்ள நாற்பது, ஐம்பது வீடுகளுக்கு ஒரு அப்ஸர்வரைப் போட முடியுமா?

கேள்வி: இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடந்தபோது சிறப்புப் பார்வையாளராகச் சென்றிருக்கிறீர்கள்.

எங்காவது இந்த அளவுக்குப் பணப் பட்டுவாடா நடப்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

பதில்: ஏன் சார்.. என் வாயைக் கிளறுகிறீர்கள்? பல நாடுகளுக்குப் போயிருந்தாலும் இந்த மாதிரி மோசமான நிலையை நான் எங்கும் பார்க்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் கூட இந்த அளவுக்கு மோசம் இல்லை.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலின் போது மது விநியோகம் எல்லாம் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்ததைப் பார்த்தால், இங்கே வீசிய புயல் காற்று கொஞ்சம் அங்கேயும் அடித்திருப்பதைப் போலிருக்கிறது.

கேள்வி: இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்?

பதில்: இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நிறைய அப்ஸர்வர்களை நியமிக்கலாம். பாதுகாப்பைப் பலப்படுத்தலாம்.

தீவிரமாகப் பணப்பட்டுவாடா நடக்காமல் முடிந்தவரை தடுக்கலாம். மீறிப் போனால் தேர்தலை ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்யப்பட்டால் அது தமிழ்நாட்டுக்குத் தான் தலைகுனிவு.

– மணா

Comments (0)
Add Comment