தேர்தல் காலம் என்று வந்துவிட்டாலே, அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் பல ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு அவை அரசியலிலும் பொதுவெளியிலும் சிறு சலசலப்பையாவது ஏற்படுத்தி இருக்கிறதுதான்.
கருத்துக் கணிப்பை அதற்கான முறையான நெறிமுறையோடு, பல்வேறு விதமான மக்களிடம் கலந்து உரையாடி யாரையும் பாரபட்சமாக ஒதுக்காமல் அனைத்துத் தரப்பினரையும் உண்மையாகவே நேரடியாகச் சந்தித்து கருத்துக் கணிப்புகள் முன்வைக்கப்படும்போது அவை உரிய கவனத்தை பெறும்.
அப்படிப்பட்ட கருத்துக் கணிப்புகள் முன்பு வெளிவந்திருக்கின்றன.
ஆனால், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்தக் கருத்துக் கணிப்பு சீசன் துவங்கிவிட்டது.
ஒவ்வொரு மீடியாவிலும் நாளிதழ்களிலும் இவை போதாதென்று சமூக வலைத்தளங்களிலும் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இத்தகைய கருத்துக் கணிப்புகள் முறையானபடிதான் நடத்தப்படுகின்றனவா அல்லது சில கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்றபடி ஒரு பண்டத்தைப் போல தயாரிக்கப்பட்டு இவை பொதுவெளிக்கு முன்னால் வைக்கப்படுகிறதா என்கின்ற சந்தேகம் எழுகிறது.
திமுக கூட்டணியை வெற்றி பெறும் என்று சில கருத்துக் கணிப்புகளும், அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று சில கருத்துக் கணிப்புகளும், விஜய்யின் தவெக கணிசமான வாக்குகளைப் பெறுவதால் தொங்கு சட்டசபை அமையலாம் என்று சில கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அவற்றால் சிறு சலனத்தை மட்டுமே பொதுவெளியில் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. காரணம் இத்தகைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பொதுமக்கள் மத்தியில் நம்பகத் தன்மையுடன் பார்க்கப்படவில்லை.
மக்களின் மிகச்சிறு பிரிவினரைச் சந்தித்து அவருடைய கருத்துக்களைப் பிரதிபிலிப்பதாகச் சொல்லும் கருத்துக் கணிப்புகளை விட, ஏப்ரல் 23-ம் தேதி அன்று வாக்களிக்கும் மக்கள்தான், தங்களுக்கான கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்துவார்கள்.
தற்போது வெவ்வேறு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கும் அதே ஊடகங்கள் தான், மக்களுடைய அசலான கருத்தையும் அவர்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதையும் வெளியிடப் போகின்றன.
அதாவது மே 4-ம் தேதி வரை மக்களின் அசலான முடிவுகளுக்காக காத்திருப்போம்.
– யூகி