தமிழக நீதித்துறை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்களுக்கு தற்போது சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் விதித்திருக்கிற தீர்ப்பு, மிகவும் மாறுதலான ஒன்றாக தோன்றலாம்.
2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகப்பட்டிருந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை மூடவில்லை என்பதற்காக, சென்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் என்பவரை அடித்துத் துன்புறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து தனது தந்தையைத் தேடி காவல் நிலையத்திற்கு விசாரிக்கச் சென்ற அவரது மகன் பென்னிக்ஸையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்துத் துன்புறுத்தியதோடு, உடைகளைக் களைந்து மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
அடிபட்ட காயங்களுடன் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி சிறை நிர்வாகம் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அந்தத் தாக்குதலின் விளைவாகத் தந்தை – மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் சாத்தான்குளம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் போராட்டங்களையும் உருவாக்கியது.
இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது.
பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட வீடியோ காட்சியைப் பார்த்து நீதிபதிகளே அதிர்ந்து போனார்கள்.
அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலரே இதற்கு எதிராக வெளிப்படையான சாட்சியத்தை அளித்திருக்கிறார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் முதலில் அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு அவர்களுக்குக் கூடுதலான அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பரிமாறி இந்தத் தீர்ப்பைக் கொண்டாடி இருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
சமூக வலைதளத்திலும் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதேசமயம் காவல்துறையில் உள்ள சிலரே இந்தத் தீர்ப்பு குறித்து சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்த பரிசீலினை தேவை என்பதை சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்திவந்த நிலையில், சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒன்பது பேர்களுக்கும் இரட்டைத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த காவலர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிகழ்ந்த எத்தனையோ காவல் நிலைய மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் அதற்கு முறையான தண்டனை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்த நிலையில், இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இனி என்ன நடக்கும்?
எதிர்காலத்தில் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, காவலர்களுக்கு தண்டனைக் குறையும் விதத்தில் சில மாற்றங்கள் வரலாம். சில முடிவுகள் மறுபரீசிலனைக்கு உள்ளாகலாம்.
ஆனாலும், இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, இதுவரை காவலர்கள் பொதுமக்களிடம் நடந்துகொண்ட எதேச்ச அதிகார அத்துமீறலை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பது உண்மை.
இது பொதுமக்களிடம் அத்துமீற முயலும் எந்த ஒரு காவலருக்கும் எச்சரிக்கை உணர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், குறிப்பிட்ட கட்சி சார்ந்து காவலர்கள் இம்மாதிரியான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை.
அதாவது அதிமுகவோ, திமுகவோ ஆட்சியில் இருந்தாலும் காவலர்களின் அத்துமீறல்கள் தொடர்வதற்குச் சாத்தான்குளம் மற்றும் அண்மையில் நடந்த மடப்புரம் கோவில் சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன.
இந்தத் தீர்ப்பு ஓரளவாவது காவல்துறையினரின் செயல்பாட்டில் எதிரொலித்தால், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு நலன் விளைவிக்கும்.
சாத்தான்குளம் தீர்ப்பின் விசாரணை மாதிரியே மடப்புரம் கோவிலில் நடந்த அத்துமீறல் குறித்து முறையான விசாரணை நடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பார்வையாக இருக்கிறது.
மக்களின் வரிப்பணத்தில் தான் தங்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை காவல்துறையினர் அழுத்தமாக உணர வேண்டிய சந்தர்ப்பத்தை இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய தீர்ப்புகள் வெளிவரும்போது பொதுமக்கள் அதனை வரவேற்கவே செய்கிறார்கள், அதுதான் இப்போதும் நிகழ்ந்திருக்கிறது.
‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று அடிக்கடி வலியுறுத்துகிற காவல்துறை இனிமேலாவது அதை உண்மையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.