தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பலர் உணர்ச்சிவசப்பட்டும், ஆவேசப்பட்டும் பேசுவது இயல்பு என்றாலும், தற்போதைய பிரச்சாரங்கள் எல்லையை மீறி இருக்கிறதோ என்கிற அளவுக்கு போயிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து முன்வைக்கப்பட்ட மோசமான குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதாகச் சொல்லப்பட்ட ஆடியோ விவகாரத்திலும், அதே போன்ற எல்லை மீறிய பேச்சுக்கள் பொதுவெளியில் பேசப்படுகின்றன.
இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து, முன்னாள் முதல்வர் கலைஞர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிகரமாகப் பதிலளித்தார்.
மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்களும் தரம் தாழ்ந்த வகையிலேயே இருக்கின்றன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் கேவலமான விமர்சனங்கள் பரஸ்பரம் பரிமாறப்படுகின்றன.
காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த எல்லை மீறிய பிரச்சாரங்கள், ஜனநாயக உணர்வு கொண்ட அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிற விதத்தில் இருக்கிறது.
எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் யாராக இருந்தாலும் “நாகாக்க” என்பதுதான் வாக்காளர்களின் சார்பில் சொல்ல வேண்டிய செய்தியாக இருக்கிறது.