சர்ச்சையைக் கிளப்பிய ஆடியோ லீக்ஸ்!

தமிழக அரசியலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு ஆடியோக்களும் சமயங்களில் வீடியோக்களும் கூட, வெளிவந்து அல்லது வெளிவர வைக்கக்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

தமிழகத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தபோது, அவர் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு ஆடியோ, லீக் செய்யப்பட்டு அரசியலில் பலதரப்பட்ட விவாதங்களைக் கிளப்பியது.

அதைத் தொடர்ந்து அவரது நிதியமைச்சர் பொறுப்பும் பறிபோனது. 

தற்போது அதே மாதிரி அதுவும் தமிழகத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், திமுக எம்.பி.யான ஆ.ராசா பேசியதாகச் சொல்லப்படும் இரண்டு ஆடியோக்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆ.ராசா அந்த ஆடியோ குறித்து கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருப்பதுடன் அதில் குறிப்பிட்டபடி தாம் பேசவில்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

அதோடு அந்த ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது மானநஷ்ட வழக்கும் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

உறுதி செய்யப்படாத அந்த ஆடியோவை நம்பி எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தைப் பேச, எடப்பாடியின் பேச்சுக்குத் தன்னுடைய பிரச்சாரத்தின் ஊடாக, கடுமையாக பதிலளித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தன் மீதும், கலைஞர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டை சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். 

அரசியலில், அதுவும் தேர்தல் காலத்து அரசியலில் எதுவும் பேசு பொருளாகலாம். எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படலாம்.

ஆனால், அவற்றிற்கு குறைந்தபட்ச ஆதாரம் இருந்தால்தான் அந்தக் குற்றச்சாட்டுக்கும் மதிப்பிருக்கும்.

அப்படிப்பட்ட மதிப்பில்லாத குற்றச்சாட்டுகளை பொதுவெளியில், கிளப்புகிறவர்கள் அதனால் உருவாகும் வெவ்வேறு பின் விளைவுகள் குறித்தும் யோசித்து முடிவெடுப்பது அவர்களுக்கும் நல்லது தமிழக அரசியலுக்கும் நல்லது.

சர்ச்சைகளை எழுப்புவதற்கு முன்பு, அவற்றை உறுதிப்படுத்திவிட்டுச் சொல்வது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.

– அகில் அரவிந்தன்

Comments (0)
Add Comment