தேர்தல் பிரச்சாரத்தைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சூடு பறக்கும் வெயிலுக்கிடையே ஆரம்பித்துவிட்டன.
சில கட்சிகள் தேர்தல் அறிக்கைகளையும் அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டதைப் போலவே, தவெக தலைவரான விஜய்யின் அதே மாதிரியான இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
பெரம்பூரில் வேட்பு மனுத்தாக்கல் செய்து ஆரம்பித்த பிரச்சாரத்தில் அந்த இலவசங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் திமுக தலைவரான ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், நயினார் நாகேந்திரன் என்று பலரும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது, தவெக தலைவரான விஜய்க்கு மட்டும் ஏன் இத்தனைக் கெடுபிடிகள்? என்று கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே, ‘ஜனநாயகன்’ படத்தைத் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியதிலிருந்து, ஏன் அந்தப் படம் வெளிவருவதில் இத்தனை தாமதம்? எதனால் இந்தத் திரைப்படம் வருவதை இவ்வளவு முனைப்போடு தடுக்கிறார்கள்? என்கின்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கின்றன.
இதேமாதிரி அவரது பிரச்சாரத்தை துவக்கியதும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிக்கிறது.
தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல், யார் பிரச்சாரம் செய்கிறார்கள்?
தேர்தல் பிரச்சாரம் துவங்கியதுமே எந்த ஊரில் பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த ஊரின் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எத்தனை வாகன ஓட்டிகள் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பதை யாரும் எளிதில் உணர முடியும்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் துவங்கி, சீமான் வரை பலரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பிரச்சாரம் செய்வதில்லை என்பதுதான் இங்குள்ள நடைமுறை.
ஆனால், விஜய்க்கு மட்டும் ஏன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக வம்படியாக ஒரு வழக்குப் பதியப்படுகிறது.
விஜய் ஒரு இடத்திற்கு போகும்முன்பே அந்த இடத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை துல்லியமாக அவரால் கணிக்க முடியுமா?
அப்படியே ஒரு கணிப்பை காவல்துறையிடம் சொல்லியிருந்தாலும் கூட அந்தக் கணிப்பிற்கு ஏற்பதான் மக்கள் அங்கு வரப்போகிறார்களா?
அந்த விதத்தில் விஜய்யின் மீது மட்டும் வைக்கப்படும் இடையூறு சம்பந்தமான குற்றச்சாட்டு வலுவானதாக இல்லை.
இரண்டாவதாக, “யாரும் பணம் கொடுத்தால் வாங்கிட்டு அவுங்க காதில் விசிலை ஊதி அனுப்புங்க” என்று விஜய் பேசியதற்கும் ஒரு வழக்குப் பதிவாகியிருக்கிறது.
இத்தகைய சிக்கலால் சென்னையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய நாளிலேயே ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிற வில்லிவாக்கம் தொகுதிக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.
போதுமான காவல்துறை பாதுகாப்பு தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் தவெகவினர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையமே பிரச்சாரம் செய்யும் அனைத்துக் கட்சிகளுக்கும் சமத்துவமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது.
இனி அடுத்தடுத்து தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய இருக்கும் விஜய், தான் செல்லவிருக்கும் பல்வேறு தொகுதிகளில் எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகிறார் என்கின்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடும் விஜய்க்கு எந்தளவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது? வாக்குப் பதிவில் அது எப்படி பிரதிபலிக்கப்போகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், பிரச்சாரத்தின்போது, அவருக்கு மட்டும் ஏன் இத்தனை கெடுபிடிகள் வழிந்து உருவாக்கப்படுகின்றன?
‘ஜனநாயகன்’ படத்தை எடுத்த விஜய்க்கு குறைந்தபட்ச ஜனநாயகம் கூட ஏன் மறுக்கப்படுகிறது? என்பதெல்லாம் தேர்தல் களத்தில் விடை தெரியாத கேள்விகளாகவே இருக்கின்றன.
– லியோ