தேர்தல் களத்தில் தனி ஆவர்த்தனம் செய்யும் சீமான்!

வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் திட்டம்

கோடை உஷ்ணத்தை மிஞ்சும் வகையில் தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்த மாதம் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அனைத்துப் பிரதானக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் ஒரு ‘ரவுண்டு’ சுற்றுப்பயணம் செய்து முடித்து விட்டார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மாநிலம் தழுவிய சூறாவளிப் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல் தலைவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான்.

தமிழ்க் கடவுள் முருகன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருப்பவர் சீமான். இதனால் திருத்தணியில் இருந்து  கடந்த 23-ம் தேதி பரப்புரையை ஆரம்பித்தார் அவர்.

திருந்தணி முருகன் கோயிலுக்கு அன்றைய தினம் தனது மனைவி, மகன் மற்றும் கட்சியினருடன் வந்த சீமான், மலை மீதுள்ள கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள்  நடத்தினார்.

அவருக்குக் கட்சியினர் மூன்றரை அடி உயர வேலை வழங்கினர். அந்த வேலை கையில் ஏந்தி  சீமான் முருகனை வழிபட்டார்.   

அங்கு அவர் அளித்த பேட்டி :

‘என்னை நம்புவோர் என்றும் அஞ்சுவதில்லை‘ என்று கோயிலில் எழுதப்பட்டுள்ளது. அந்த வாசகத்தை நம்பித்தான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன். முருகரிடம் சொல்லி விட்டுத்தான் களத்துக்கு செல்கிறேன்’ என்றார்.

மாலையில்  திருத்தணியில் ‘வேலோடு நீ வாடா முருகா’ என்ற பாடலைப் பாடி பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

அங்கிருந்து அவர் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து வருகிறார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் என பரப்புரை நிகழ்த்திய சீமான், தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை இன்று  (சனிக்கிழமை) நிறைவு செய்கிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் சீமான் இலவசங்கள் அளிப்பதை விமர்சித்தே பேசுகிறார்.

திருவண்ணாமலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் இதனையே  தெரிவித்தார்.

அவர் பேசியது:

“மாற்றம் என்பது சொல் அல்ல செயல். உலகத்துக்கு  சோறு போட்ட கூட்டத்தை, அரிசி, பருப்புக்கு கையேந்தும் கூட்டமாக மாற்றி நிறுத்தியுள்ளனர்.

நீங்கள் நோட்டை வாங்கி ஓட்டை விற்றால், அவர்கள் ஓட்டை வாங்கி நாட்டை விற்பார்கள்.

வாக்கு வலிமை மிக்க ஆயுதம், அதனை அநீதிக்கு எதிராகத் தூக்கு.

இந்தத் தேர்தல் நமக்கு ஒரு புரட்சிகர மாறுதலுக்கான அரசியல் போர். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்” என்றார்.

சீமானின் கணக்கு என்ன?

வழக்கம் போல் அவர் இந்தத் தேர்தலிலும் தனித்தே களம் காண்கிறார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவர் காரைக்குடியில் நிற்கிறார்.

2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினாலும், அந்தக் கட்சி, 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தான் முதன்முறையாக போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் 1.1% சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 4% வாக்குகள், 2021 சட்டசபைத் தேர்தலில் 6.7% வாக்குகள் வாங்கியது.

கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் 8.22% சதவீத வாக்குகளை அள்ளி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது நாம் தமிழர்.

இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி எத்தனை இடங்களில் ஜெயிக்கும் என்பது தெரியவில்லை.

‘ஆனால், கட்சியின் வாக்கு சதவீத்தை உயர்த்த வேண்டும் என வியூகம் அமைத்து சீமான்  செயல்பட்டு வருவதாக நாம் தமிழர் வட்டாரங்கள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளன.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment