உள்ளாட்சித் தேர்தல்கள் மக்களிடம் பெற்றுள்ள மதிப்பு?

தேர்தல் பக்கங்கள்:

“பில்டிங் ஸ்ட்ராங்.. ஆனா பேஸ்மண்ட் வீக்..” என்று பிரபலமான திரைப்பட வசனத்தைப் போலவே ஆட்சியமைப்பின் மேலடுக்கைவிட பலவீனமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது தற்போதைய உள்ளாட்சி அமைப்பு.

தமிழகத்தை பொறுத்தவரை நீண்டகாலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலே நடத்தப்படாமல் இருந்தது.

ராஜீவ் காந்தி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? மக்களுக்கு முன்னால் எப்படி செயல்படுகிறார்கள்?

தமிழகத்தின் எந்த ஒரு பெருநகரத்திலும் அல்லது சின்னஞ்சிறு கிராமங்களிலும் போய், “உங்க ஊர் கவுன்சிலர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டால் போதும், அசர அடிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது அவர்களது பதில்கள்.

அவ்வளவு குற்றச்சாட்டுகள், அவ்வளவு புகார்கள், அவ்வளவு அதிகார எல்லை மீறல்கள் அனைத்தும் நிறைந்த நபராக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பற்றியோ அல்லது உள்ளாட்சி அமைப்பின் உள்பொறுப்பிலிருக்கும் நபர்களைப் பற்றியோ சொல்வதற்கு அவ்வளவு ஆதாரங்கள் பொதுமக்கள் வசமிருக்கின்றன.

சாலை போடுவதில் துவங்கி, பள்ளிக்கூடம் கட்டுவது, பாலம் கட்டுவது, மழைநீர் வாய்க்கால்கள் அமைப்பது என்று தமிழகத்தில் எந்தப் பணிகள் உள்ளாட்சி சார்பில் நடந்தாலும் அதில் கவுன்சிலருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்கப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமான ஒன்றாக இருக்கிறது.

இத்தகைய செயல்பாடுகளை செய்பவர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கின்ற பேதங்கள் இல்லை. கட்சி பேதம் இல்லாமல் தங்களை தேர்ந்தெடுத்த எளிய மக்களை முடிந்த ஷவரைக்கும் சுரண்டுவது என்பதை செயல்படுத்தி வந்திருக்கிறார்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.

தமிழ்நாட்டில் விதிவிலக்காக மிகச் சில பிரதிநிதிகள் இருக்கலாமே ஒழிய, பொதுவாக பல உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

மிக எளிமையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பலர் மிகக்குறுகிய காலத்தில், பொருளாதார அளவில் உயர்ந்து வீடு, கார், சொத்துக்கள் என்று விரிவடைந்து போனதைப் பற்றி பல கிராமங்களில் ஆதாரபூர்வமாகச் சொல்கிறார்கள்.

எளிய நில பட்டா பெருவதில் கூட கமிஷன் வாங்குவது நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் தன்னுடைய வீட்டை இடித்துப் புதுப்பிக்கிறார் என்றாலோ அல்லது புதியதாக வீடு கட்டுகிறார் என்றாலோ,

அந்த ஏரியா கவுன்சிலர் தன்னுடைய சகாக்களோடு அங்கு வந்து நின்று, “தங்களுக்கான கமிஷனை ஒதுக்கி கொடுத்தால்தான் வேலையைத் தொடரமுடியும்“ என்று தன்னை தேர்ந்தெடுத்த வாக்காளர்களையே மிரட்டி வசூலிப்பது தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு உதாரணம்.

ஒருவர் தன்னுடைய வீட்டையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு பகுதியையோ விற்க முயற்சித்து, அந்தப் பகுதியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்றால் அவர்களிடம்,

“நீங்க விற்கப் போகும் இடம் குறிப்பிட்ட கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். அதனால் அந்த கோவிலுக்குச் சென்று ‘என்.ஓ.சி’ அதாவது தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வர வேண்டும்” என்று வற்புறுத்துவார்கள்.

சம்பந்தப்பட்ட நபரும் அந்த கோவிலுக்குச் சென்று அந்தச் சான்றிதழைக் கேட்கும்போது,

“குறிப்பிட்ட தொகைக் கொடுத்தால் மட்டுமே அத்தகைய சான்றிதழை தர முடியும்“ என்று பதிலளித்து,

அப்படி நிர்பந்தத்தின் பேரில் வாங்கப்பட்ட கமிஷனில், அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் போய் சேர்கிறது அந்த கமிஷன் தொகை.

சென்னை போன்ற பெரு நகரத்திலேயே இத்தகைய எதிர் விளைவுகளை பல நிலப் பத்திர அலுவலகங்களில் பலர் எதிர்கொள்ள வேண்டிய நிலை இங்குள்ள எதார்த்தமாக இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் கவுன்சிலரோ, மேயரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எதிரான அதிகார மையத்தைப் போலவே நடந்து கொள்வது, தமிழகத்தின் பல பகுதிகளில் அவர்களுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்கள் சார்ந்த கட்சிக்கும் எதிரான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் சமயத்தில், இப்படி அந்தந்தப் பகுதிகளில் கமிஷன் விஷயத்தில் மக்களிடம் அவப்பெயரை வாங்கிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு எந்தக் கட்சியும் பிரச்சாரத்திற்கு வந்தால் அந்த கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எத்தகைய மதிப்பு கிடைக்கும்?

வெறுமனே இவர்களுக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மட்டுமே அடிமட்டத்திலிருந்து பரவிக் கிடக்கிற அதிருப்தி உணர்வை மாற்றி அமைத்து விட முடியுமா?

இன்னும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு சில மாதங்கள் இருக்கிறது என்றாலும், நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்கான எதிர்வினை அந்தந்தப் பகுதிகளில் தெரிய வரலாம் என்பதே உண்மை.

– யூகி

Comments (0)
Add Comment