கோவை மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
2025 நவம்பர் 2-ம் தேதி இரவு, கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள புதர்க்காட்டில் 25 வயது இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவருடன் காரில் இருந்த 20 வயது மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.
இக்குற்றத்தில் ஈடுபட்டதாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கருப்பசாமி என்கிற சதீஷ் (30), அவருடைய தம்பி காளீஸ்வரன் என்கிற கார்த்திக் (21), மதுரையைச் சேர்ந்த இவர்களது உறவினர். குணா என்கிற தவசி (20) ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி டிசம்பர் 1-ல் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு சமர்ப்பித்தது.
2026 ஜனவரி 8-ல் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 2-ல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
மூன்று வாரங்களில் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மார்ச் 7 அன்று குற்றவாளிகள் மூவருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 70(1)-ன்படி சாகும்வரை சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வி.சுந்தரராஜ்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் ஏழு லட்சமும் அவருடைய நண்பருக்கு இரண்டு லட்சமும் இழப்பீடாக வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பாலியல் வழக்குகளிலும் போக்சோ வழக்குகளிலும் விரைந்து தீர்ப்பு வழங்கப்படுவது நம்பிக்கை அளிக்கிறது.
இந்த வழக்குகள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதேநேரம், கவனம்பெற்ற அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்படுவதில்லை. 2019 பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் 2025-ல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.
1992-ல் நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் 30 ஆண்டுகள் கழித்துத்தான் நீதி கிடைத்தது.
இதுபோன்ற தாமதத்தால், பாதிக்கப்படுகிறவர்கள் நீதியை நாடுவது + குறையும்; குற்றவாளிகள் அச்சமில்லாமல் குற்றங்களில் ஈடுபட வழிவகுக்கும்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 346-ன்படி பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றம் பதிவுசெய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
போக்சோ வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், பெரும்பாலான வழக்குகளில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை.
காவல் துறை – நீதித் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை.
கட்டமைப்புச் சிக்கல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பாலின – சாதிரீதியான கண்ணோட்டம் உள்ளிட்ட பல காரணங்கள் தாமதத்துக்கு வழிவகுக்கின்றன.
பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முன்னிலை வகித்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வதையும் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் பாலியல் வழக்குகளையும் யாரும் மறுக்க முடியாது.
இந்நிலை மாற வேண்டும். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தாமதிக்கப்படாமல் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட அரசு, சமூகம், நீதி அமைப்புகள் துணைநிற்க வேண்டும்!
– நன்றி: இந்து தமிழ் திசை தலையங்கம்