தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி தள்ளிப்போகுமா?

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இவற்றுக்கிடையே முடிவுறாமல் நீண்டு கொண்டே இருக்கும் போர், உலகலாவிய அளவில் பெரும் பாதிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பல்வேறு நாடுகளில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அளவில் மட்டும் 80 லட்சம் கோடி அளவுக்கு பங்குச்சந்தை சரிந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரத்தை சொல்கிறார்கள்.

இதைப்போலவே இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது.

இத்தகைய சரிவு இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் பொருளாதாரச் சந்தையில் பெரும் சரிவை உண்டாக்கும் என்கிறார்கள்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சிலிண்டர் விலை கூடுதலாக ஏறி இருக்கிறது.

அதோடு வணிகரீதியாக விற்கப்படும் சிலிண்டர்களுக்கான பற்றாக்குறை இன்னும் அதிகரித்த நிலையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஓட்டல்களை அந்தந்த நிர்வாகம் மூடும் நிலை உருவாகி இருக்கிறது.

வணிகரீதியான சிலிண்டருக்கான பற்றாக்குறை நீடிக்கும் பட்சத்தில், தமிழகளவில் உள்ள பல்வேறு ஓட்டல்கள் மூடப்பட்டு பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடலாம்.

இதேபோல், முக்கிய எரிபொருளான பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இவற்றின் விலையும் கடந்த ஐந்து நாட்களாக உயர்ந்திருக்கிறது. எரிபொருட்களால் இயங்கும் கார்களும் ஆட்டோக்களும் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்க்கப்படுகிறது.

ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் இந்த நிலைமை இப்படியே நீடித்தால், என்னாவது என்று புலம்பும் நிலையில் இருக்கிறார்கள்.

ஆட்டோ, வாடகைக் காரை பயன்படுத்துபவர்கள் அதுவும் தமிழகத்தில் முகூர்த்த நாட்களும் அது சார்ந்த தேவைகளும் இருக்கையில், இந்த விலையேற்றம் கடும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு, திருச்சி சிறுகனூரில் 10 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படும் ஒரு பெரும் மாநாட்டை திமுக நடத்தியது.

அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்ததாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை  சொல்லப்பட்டது.

தற்போதைய நிலையில் நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள் 20,000 வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் தேவை இருந்திருக்கும். சில நாட்கள் கழிந்த நிலையில் அந்த மாநாடு நடந்திருந்தால், எத்தகைய எரிபொருள் நெருக்கடியை உருவாக்கியிருக்கும்.

இதைப்போலதான் தேர்தல் பிரச்சாரமும். இனி தேர்தல் நெருங்குவதாக சொல்லப்படும் நிலையில், அடுத்தடுத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுக்கையில் வாகனங்களின் தேவையும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

வெளியூர் செல்பவர்களுக்கான உணவுப் பொருட்கள் பற்றாக்குறை நீடிக்கும் பட்சத்தில் பல திண்டாட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அமெரிக்காவிடமிருந்து தற்காலிகமாக பெற்றிருக்கிறது இந்தியா.

இத்தகைய இறக்குமதி ஓரளவு தற்போதைய நெருக்கடியை அல்லது பற்றாக்குறையைத் தீர்க்க உதவும் என்றாலும், தேர்தல் போன்ற பெரும் செலவுகள் எழக்கூடிய ஒரு காலகட்டத்தில் உலக அளவில் எழுந்திருக்கின்ற இத்தகைய பற்றாக்குறையும் அதனால் உருவான பொருளாதார நெருக்கடியும் விலையேற்றமும் கடும் பாதிப்பை உருவாக்கத்தான் செய்யும்.

பொருளாதார நிபுணர்கள் சொல்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்; வாக்களிக்க இருக்கிற ஒவ்வொரு வாக்காளரும் இத்தகைய நிலை தொடர்ந்தால் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில் 5 மாநிலத் தேர்தல்களை நடத்துவதற்கான ஆலோசனையை கடந்த வாரம் நடத்தி இருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

அதன் உயர் அதிகாரிகள் தமிழகம் புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வந்து பல்வேறு அரசியல்வாதிகள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.

தேர்தலுக்கான தேதி எந்த சமயத்திலும் அறிவிக்கப்படலாம் என்கின்ற நிலையில் தான் தற்போது உலக அளவிலான ஒரு பற்றாக்குறை பெரும் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில் இருக்கிறது.

இந்தநிலையில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை சற்றே இந்த நிலைமை சீராகும் வரையில் தள்ளி வைக்கலாம் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.

அரசியல் கட்சிகளும் இதன் தேவையைக் கண்டிப்பாக உணர நேரிடலாம். அதைவிட வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக இதன் தேவையை உணர்வார்கள்.

இந்நிலையில் அனைவருடைய விருப்பத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலை உடனே நடத்துவதில் துரிதம் காட்டாமல் காலச் சூழ்நிலையைப் பொறுத்து, சற்றே தள்ளி வைப்பது ஒவ்வொரு வாக்காளருக்கு மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குமே நல்லதாக இருக்கும்.

யூகி

Comments (0)
Add Comment