தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!

புதுப்புது சிந்தனைகள் மூலம் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டத் தொடங்கி விட்டனர் இளைஞர்கள். தொழில்துறை புரட்சியின் திறவுகோலாக விளங்கும் ஸ்டார்ட் அப் கள் இதற்கு முக்கியத் துணை புரிகின்றன.

தமிழகத்துக்கு இது சிறந்த காலம் என கூறும் விதமாக நம் இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிறிதும் பெரிதுமாக பல ஆயிரம் ஸ்டார்ட் அப் கள் மாநிலத்தில் உருவாகி இருக்கின்றன.

பல நிறுவனங்கள், தொடங்கிய வேகத்திலேயே மிகப் பெரும் இலக்கை முன்வைத்து நகரத் தொடங்கி இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி நிறுவனம். நண்பர்கள் ஒன்று கூடி ஆரம்பித்த இந்தத் தொழில், அவர்களை உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

சுரண்டையை ஒட்டி இருக்கிற ஆலடிப்பட்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இவர்கள், படிப்பதற்காக சென்னை வந்தபோது சந்தித்துக் கொண்டனர்.

விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் ஆசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களும் அவர்கள் ஊரின் பிரசித்தி பெற்ற அல்வாவை வாங்கி வரும்படி சொன்னதை அடுத்து, இதற்குள்ள வரவேற்பை அறிந்து கொண்டனர்.

பின்பு தங்கள் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளின் போது அரங்கம் அமைத்து இதனை விற்பனை செய்யத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் அனைத்தும் விற்றுத் தீர்த்தன.

அப்பொழுதுதான் தங்கள் ஊரின் கருப்பட்டி அல்வாவிற்குள் மிகப்பெரிய வணிக வாய்ப்பு இருப்பதை அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கருத்தரங்குகளின் போதும், வாழை இலையில் வைத்து பரிமாறப்பட்ட அந்த இனிப்பின் ருசியை அனைவரும் சிலாகித்த போது எழுந்த எண்ணம் தான் ‘ஆலடிப்பட்டியான்’ உருவாவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

2014-ம் ஆண்டு “அல்வா கடை டாட் காம்” என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கியது இந்நிறுவனம்.

சுண்டி இழுக்கும் சுவை மற்றும் உயர்ந்த தரத்தின் காரணமாக குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளரின் நன்மதிப்பைப் பெற்றது.

தினம் 100 கிலோ வரையில் இனிப்புகள் நாடு முழுவதிலும் அனுப்பப்படுகின்றன. பண்டிகை காலங்களில் ஒரு டன் அளவிற்கு இதன் விற்பனை உயர்ந்து காணப்படுகிறது. தயாரிக்கும் இடத்திற்கே நேரடியாக வந்தும் மக்கள் இதனை வாங்கி செல்கின்றனர்.

தொடர்ந்து சிறுதானிய உணவு வகைகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியது இந்நிறுவனம்.

இயற்கை சுவையூட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படும் நோக்கில் கருப்பட்டியை உபயோகித்து தேநீர் காபி போன்றவற்றையும் சேர்த்து வழங்கி வருகின்றனர்.

கொரோனா காலத்திற்குப் பிறகு அனைவரும் ஆரோக்கிய பொருட்களைத் தேடத் தொடங்கியதன் விளைவே இத்தகைய உணவகங்கள் உருவாகக் காரணம்.

சென்னையின் பிரதான தெருக்களில் மஞ்சள் விளக்குகள் ஒளிர, பனை ஓலைகளைக் கொண்டு வித்தியாசமான வடிவமைப்பில் மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது ஆலடிப்பட்டியான்.

100 சதுர அடியிலிருந்து 8,500 சதுர அடி வரைக்கும் பரந்து விரிந்து கிளை பரப்பியுள்ளது இந்நிறுவனம்.

54 கடைகள், 13 வாகனங்கள் மற்றும் பல நூறு வேலையாட்கள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் இந்நிறுவனத்தின் வேர்களும் விழுதுகளுமாய் இருக்கின்றனர் இதனை தொடங்கிய நண்பர்கள்.

தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது ஆலடிப்பட்டியான்.

– எஸ்.வாணி

Comments (0)
Add Comment