சிலி நாட்டு சர்வாதிகாரியாக இருந்தவர் அகஸ்தோ பினோச்சே. அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரது பெயர் வால்தர் ராஃப் (Walther Rauff).
இந்த ராஃப், ஜெர்மன் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரிடம் பணியாற்றியவர். நகரும் வேன்களில் நச்சுப்புகை அறைகளை அமைத்து அந்த மொபைல் கேஸ் சேம்பர்கள் மூலமாக 90 ஆயிரம் பேர்களைக் கொன்ற புண்ணியவான் இந்த ராஃப்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தோற்றபிறகு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ராஃப் தென் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
அங்கே ஈக்வடார் நாட்டில் அகஸ்தோ பினோச்சேயை அவர் சந்தித்தார். அன்று முதல் இருவரும் உயிர் நண்பர்கள்.
சர்வாதிகாரி அகஸ்தோ பினோச்சேவுக்காக சிலி நாட்டில் தன் கைத்திறமையைக் காட்டி ஒரு வதைக் கூடத்தை உருவாக்கித் தந்தார் ராஃப். கற்ற வித்தை வீண் போகக் கூடாது இல்லையா? அந்த நல்லெண்ணத்தில்.
பினோச்சே ஆட்சியில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகம். சிலி நாட்டுத் தலைநகரம் சாண்டியாகோவில் ஒரு கால்பந்தாட்ட அரங்கம் அப்படியே வதைக் கூடமாக மாறியது.
அந்த வதைமுகாமின் பெருமையைப் பற்றி அங்கிருந்த காவலர் ஒருவர் சொன்ன கருத்து இது. “இங்கிருந்து தப்பிப்போக வேண்டுமானால் நீங்கள் இறந்தாக வேண்டும்”
ஆயிரக்கணக்கான மக்கள் சிலி நாட்டில் காணாமல்போனபோது அவர்களது உறவினர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதார்கள்.
அப்போது பினோச்சோ அடித்த கமெண்ட் என்ன தெரியுமா? – “காணாமல் போய் விட்டார்களா? விடுங்கள். உங்களுக்கு சவப்பெட்டி செலவு மிச்சம்”.
உலகமே அந்த காலகட்டத்தில் சர்வாதிகாரி பினேச்சேயை காறித் துப்பினாலும் அமெரிக்காவும், பிரிட்டனுக்கும் பினேச்சேக்கு ஆதரவாக இருந்தன. என்ன காரணம்?
சிலி நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்கள் தலைவர் சால்வதார் அல்லண்டே.
அவரை படுகொலை செய்து ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர் பினோச்சே. அதனால் ‘ஜனநாயக காவலரான’ அமெரிக்காவுக்குப் பினோச்சேயை ரொம்பவும் பிடிக்கும்.
அதுபோல, ஆர்ஜெண்டைனா, பிரிட்டன் இடையே ஃபாக்லாந்து போர் நடந்தபோது அண்டை நாடான ஆர்ஜெண்டைனாவுக்கு ஆதரவு தராமல் பிரிட்டனுக்கு ஆதரவு தந்தவர் பினோச்சே.
அதனால் அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கும், அவரது பழமை வாத கன்சர்வேடிவ் கட்சிக்கும் பினோச்சேயை மிகவும் பிடிக்கும்.
சரி. எல்லா ஆட்டமும் ஒருநாள் முடிவுக்கு வரும் இல்லையா? பினேச்சேயின் ஆட்டமும் ஒருநாள் முடிவுக்கு வந்தது.
லண்டன் நகரில் பினோச்சோ, ராஃப் இருவரும் ஒருநாள் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதாயிற்று.
“நான் எந்தப் படுகொலையும் செய்யலியே. பினோச்சே சொன்னதைத்தானே நான் செய்தேன்” என்றார் ராஃப். ஆனால், சிலி நாட்டில் தனக்குப் பிடிக்காதவர்களைக்கூட சொந்த விருப்பத்துக்காக கொலை செய்தவர்தான் ராஃப்.
இந்த இரு நண்பர்களையும் ஸ்பெயின் நாட்டில் வைத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் ஹிட்லர் காலத்தில் சர்வாதிகாரியாக இருந்தவர் பிராங்கோ. அவர் எந்த தண்டனையும் பெறாமல் அமைதியாக இறந்து போன அதிர்ஷ்டக்காரர்.
‘அன்று சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ அதை எங்களால் செய்ய முடியவில்லை. அதை இன்று பினோச்சேவுக்கு செய்து விட வேண்டியதுதான்’ என ஸ்பெயின் மக்கள் ஆவலாக இருந்தார்கள்.
ஆனால், பாருங்கள். ‘நான் நடக்க முடியாதவன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவன்‘ என்று சோகக் கதை பேசி, சொந்த நாடான சிலிக்கு போய்ச் சேர்ந்து விட்டார் பினோச்சே.
அங்கு போனதும் சக்கர நாற்காலியைத் தூக்கி தூர எறிந்து விட்டு மீண்டும் ஜம்மென்று நடக்க ஆரம்பித்து விட்டார் பினோச்சே.
‘அவரை சிலி நாட்டுக்கு அனுப்பியிருக்கக் கூடாது. ஸ்பெயின் நாட்டில் வைத்து வச்சு செய்திருக்க வேண்டும்’ என்று பலர் பிறகு வருத்தப்பட்டார்கள்.
சர்வாதிகாரிகள், இனப்படுகொலை புரிந்தவர்கள் எல்லோரும் சைலண்டாக படுக்கையில்தான் சாக வேண்டும் என்பது விதி போலிருக்கிறது.
பினோச்சே, அனைத்து வசதிகளுடன் 18 மாதங்கள் வெஸ்ட்வொர்த் எஸ்டேட் பகுதியில் இருந்த அவரது வீட்டில் வீட்டுச் சிறையில் இருந்தார். நிம்மதியாக வாழ்ந்து 91ஆம் வயதில் பினோச்சே காலமானார்.
ராஃப் என்ன ஆனார்?
பினோச்சே சிலி நாட்டுக்கு வந்தபோது அவருடன் சேர்ந்து ராஃப்பும் வந்து விட்டார். சிலி நாட்டில் அரசுப் பாதுகாப்பில் வாழ்ந்து 78ஆவது வயதில் ராஃப் நிம்மதியாக மரணமடைந்தார்.
புரட்சியாளர்களும், போராளிகளும்தான் சுடப்பட்டோ, குண்டுவெடித்தோ சாகிறார்கள்.
சர்வாதிகாரிகளும், இனப்படுகொலை செய்யும் கேடுகெட்டவர்களும் நிம்மதியாக இயற்கை மரணம்தான் எய்துகிறார்கள்.
இயற்கையின் கணக்கில் அல்லது இறைவனின் கணக்கில் ஏதோ தப்பு இருக்கிறது.
– மோகன ரூபன்