நூல் அறிமுகம்: நிலவு ஒரு கதை சொல்லி!
ஆசிரியர் குறிப்பு:
காரைக்குடி-செக்காலையில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரைப்பாடலாசிரியர்.
இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு நேர் உரைத் தொகுப்பு வெளியாகியுள்ளன.
ஆணின் பார்வையில் வெளிப்படும் கவிதைகள். அழகுணர்ச்சி அதிகம் தெறிக்கின்றன. எல்லாக் கவிதைகளுமே அகவயமானவை.
நிலவு துர்கனா கண்டு திடுக்கிட்டு விழிப்பது போல கவிஞன் அன்றாட நிகழ்வின் மேல் தன் கற்பனையைத் திணிக்கும் கவிதைகளும் தொகுப்பில் சில வந்துள்ளன.
இனி நூலுக்குள்…!
இல்லாமையின் அழுத்தத்தை உள்–வெளி உலகங்களின் ஒத்திசைவை சத்தமில்லாத துயரத்தின் காட்சியியலை மிகவும் நிதானமாக, எவ்வித அலங்காரமும் இன்றி பதிவு செய்கிறது இந்தக் கவிதை.
மின்னல் – உள்மனக் கீறலை வெளிப்புற காட்சியுடன் ஒப்புமைப்படுத்துகிறது. அவளில்லை, தூக்கம் வரவில்லை என்ற ஒருவரி அழகிய கவிதையாகியிருக்கிறது.
கடைசிவரியில் வரவிரும்பியும், கதவைத் தட்டாத தயக்கம் மழைக்கு மட்டும் தானா?
“நீ இருந்திருந்தால் உன் அருகில்
அமைதி ஒரு கொடிபோல் படர்ந்திருக்கும்
சாளரக்கண்ணாடியில்
விரிசலாய் எழுந்த மின்னல்
பூஜாடியின் முகத்தை
ஒளிரச் செய்து மறைகிறது
உறங்காத மழை
கதவின் அருகில்
தட்டாமல் நிற்கிறது.”
***
கூட்டத்திலிருந்து விலகும் தனிமனிதத் தருணத்தை ஆட்டின் மூலம் சொல்லுகின்ற இந்தக் கவிதையின் வடிவமைதியைக் கவனியுங்கள் :
” கிடைக்குப் பயணிக்கும்
ஆட்டுமந்தையைக் கவனித்தது
பின்னந்திச் சூரியன்
ஏதோ ஒரு ஏகாந்தத்தின்
உள்ளழைப்பில்
சூரியனைத் திரும்பிப்பார்த்த
ஆடொன்று
அங்கேயே நின்றுவிட்டது
அந்தியின் ஒளியில்
தானொரு நிழலாகி நிற்பதை
தற்சமயம் விரும்புவது போல”
***
சாப்பாடு முடிதல், கழுவுதல் இரண்டும் metaphorஆக இங்கு இயங்குவதைக் கவனியுங்கள்.
வயிறார ஒருவர் சாப்பிட்ட திருப்தியும், வழியில்லாதவனின் ஏக்கப் பட்டினியும் சோப்பின் மணமாகக் காற்றில் பரவுகிறது.
தூரத்தில் என்ற வார்த்தையைத் தவிர்த்து எதிரில் என்றிருக்கலாம். அழகான கவிதை.
“கடைசிச் சாப்பாடு முடிந்த பின்னிரவு
விடுதியைக் கழுவிவிட்ட ஊழியன்
மொட்டைமாடிக்குப் போகிறான்
நிலா கவனிக்கிறது
வெங்காற்று அவனைத் தழுவுகிறது
தூரத்தில் ஒருத்தி
சன்னலை மூடுகிறாள்.
சோப்பின் மணம்
அவனது முழுநாளையும்
கழுவித்தள்ளிக் கொண்டிருக்கிறது.”
பழநிபாரதியின் மொழியில் அலங்காரம் குறைவு; காட்சியியல் அதிகம். ஒவ்வொரு கவிதையும் நீளமில்லாத ஒரு காட்சி போல அமைந்துள்ளது.
முடிவு வரிகள் பெரும்பாலும் கவிதையின் மையப்பொருளுக்குத் தாவுகின்றன.
கவிஞர் தன்னை முன்னிலைப்படுத்தாமல், பிற இருப்புகளை/புறக்காட்சிகளை உன்னிப்பாகக் கவனிப்பதுடன், கவிதைகளில் தான் சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லாததும் ‘நிலவு ஒரு கதை சொல்லி’ நூலில் இடம்பெற்றுள்ள இந்தக் கவிதைகளை அழகாக்கி இருக்கின்றன.
– சரவணன் மாணிக்கவாசகம்
நூல்: நிலவு ஒரு கதை சொல்லி
ஆசிரியர்: பழநிபாரதி
தமிழ்வெளி
விலை: ரூ.120/-
தொடர்புக்கு: 90940 05600
தொடர்புக்கு: 90940 05600