தமிழிலக்கியத்திற்கு தனிப்பாதையை அமைத்த புதுமைப்பித்தன்!

எழுத்தாளர் வே. மு. பொதிய வெற்பனின் நூலாய்வை முன்வைத்து...
தமிழ் இலக்கிய உலகில் தனிப்பாதையை அமைத்து இன்றளவும் பேசப்படுபவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன்.
 
கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எத்தளத்தில் இயங்கி இருந்தாலும் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு மகத்தானது. போற்றுதலுக்குரியது.
 
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் குறித்து பலர் எழுதியிருந்தாலும் எழுத்தாளர் வே. மு. பொதியவெற்பனின் ‘புதுமைப்பித்தன் கதைகள்: அகலமும் ஆழமும்’ என்னும் தொகுப்புக்கு சிறப்புகள் பல உண்டு.
 
திரு. த. பி. சொ. அரிராம் சேட்டு நினைவுக் குழுவினர் நடத்திய போட்டியில் இந்த ஆய்வேடு எழுதப் பட்டு முதல் பரிசு பெற்றது. மாணவப் பருவத்திலேயே எழுதியுள்ளார். தனித்தமிழில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
 
போட்டிக்கான நாள் முடிந்த நிலையில் ஒரு மாதம் அவகாசம் பெற்று அதன்பின்னே புதுமைப்பித்தனை வாசித்து புதுமைப்பித்தன் தொடர்பானவற்றையும் வாசித்து ஆய்வேட்டை முடித்துள்ளார்.
 
‘ஒரு சிறு…’ என்னும் முதல் அத்தியாயம் சிறுகதை என்பதற்கான வரையறையைக் கூறியுள்ளது. பாச்செய்யுள் இயற்ற எத்தனை திட்ப நுட்பம் தேவையோ அத்தனையும் சிறுகதைக்கும் தேவை என்கிறார்.
 
புதினம் வாழ்வின் அகலம் பரந்தது என்றால் சிறுகதை ஆழம் செறிந்தது என்று விளக்கியுள்ளார்.
 
புதினங்கள் பணக்காரர்களுக்கான பெருவிருந்து என்றும் சிறுகதைகளோ வேலைக்காரர்களுக்கான நேத்திரங்காய் வறுவல் என்றொரு ஆய்வாளர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தும் விதத்தில் சிறுகதை நாடகத்துடன் தொடர்புடையது என்னும் ஆய்வொன்றையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
 
நெடுஞ்சிறுகதை நாவெல்லா (novella) ஆகும் என்றும் புதுக்கவிதை, விடுகதை, கதை விடல் ஆகிய வடிவங்களுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
 
ஆனாலும் சிறுகதை எழுதும் போது மேற்படி அளவுகளிலிருந்து மாறுபடவும் வாய்ப்புள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.
 
‘கதையின் கதை’ யை இரண்டாம் அத்தியாயத்தில் கூறியுள்ளார். 1842-களில் சிறுகதையெனும் இலக்கிய வடிவம் மேனாட்டாரால் வகுக்கப்பெற்றன என்கிறார்.
 
இரவீந்திர நாத் தாகூர் இந்திச் சிறுகதைக்கு இந்திய வடிவம் தந்ததாகவும் 1908களுக்குப் பின் பாரதி மொழி பெயர்த்ததாகவும் அவரே சொந்தமாக சில கதைகள் எழுதியதாகவும் வ. வே. சு. அய்யர் எழுதியதாகவும் தகவலளித்துள்ளார்.
 
பாரதியின் கதைகளை விட வ.வேசு. அய்யரின் சிறுகதைகளே வழிகாட்டியாக இருந்துள்ளன என்கிறார். இதே காலத்தில் இராமானுசலு நாயுடுவே கதை சொல்வதில் சமர்த்தர், பாத்திரங்களை உயிர்த்தன்மையுடன் இருக்கச் செய்தவர் என எழுத்தாளர் புதுமைப்பித்தனே இனங்காட்டியதை எடுத்துரைத்துள்ளார்.
 
‘அகலமும் ஆழமும்’ பகுதியில் 1930களுக்குப் பின்னான சிறுகதை வளர்ச்சி குறித்து பேசப்பட்டுள்ளது. இக்காலத்தில் கல்கி, வை. மு. கோதைநாயகி உள்பட பலர் சிறுகதைகள் எழுதியுள்ளனர் என்கிறார்.
 
கல்கியுடனே புதுமைப் பித்தன் ஒப்பிடப்பட்டுள்ளார். கல்கியின் சிறுகதைகளில் கலந்து கிடக்கும் அணியான நகைச்சுவை புதுமைப்பித்தனில் மயங்கிக்கிடக்கும் பண்பு என்றும் கல்கியிடம் நிறையும் உண்டு பித்தனிடம் குறையும் உண்டு என்கின்றன ஒப்பீடுகள்.
 
சிறுகதைகள் வெளியிடுவதற்கு ஏற்ப மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, காந்தி போன்ற தாளிகைகள் (சிற்றிதழ்கள் வெளியாயின என்கிறார்.
 
மெளனி, எம்.வி.வெங்கட்ராம் உள்பட ஏராளமானோர் மணிக்கொடியில் எழுதிய சிறுகதையாளர்கள் என குறிப்பிட்டுள்ளார். புதுமைப்பித்தனே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்னும் கூற்றை உறுதிப்படுத்துகிறார்.
 
மணிக்கொடியாளர்களில் சிறுகதைக்கு முழு உருவையும் உயிர்ப்பையும் அளித்த முதல்வர் புதுமைப்பித்தனே என்று வலியுறுத்துகிறார்.
 
‘பண்டைய இலக்கியப் புலனில்’ புதுமைப்பித்தன் அகலியைப் பொருண்மையாக்கி புனைந்த இரு சிறுகதைகள் குறித்து அலசியுள்ளார்.
 
இரண்டிலும் வேறு வேறு கெளதமர்களைப் படைத்துள்ளார் என்கிறார். கற்பு என்பது மனத்தூய்மையிலேயே என்பதை உறுதிப்படுத்துகின்றன என்கிறார்.
 
இந்திரனின் விலங்குணர்ச்சி, கெளதமனின் தெய்வத்தன்மை வெளிப்பட அகல்யைப் பேதையின் பெண்மை களப்பலியாக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இந்திரன்கள் இன்றும் உள்ளனர் என்கிறார்.
 
வடிவமைப்பாலும் கருச்சிறப்பினாலும் நடைநலத்தாலும் புதுமைப்பித்தனின் கதைகள் தனிச்சிறப்பினவாய் அமைந்துள்ளன என ஆய்ந்தளித்துள்ளார். தொன்மத்தைக் கையாண்டு வெற்றிப் பெற்றுள்ளார் எனவும் அறிவிக்கிறார்.
 
“இலக்கியத்திற்குப் பூகோள எல்லைகள் கிடையா. எனினும் எவ்வெவ்விலக்கியமும் அவ்வந் நிலத்தின் நீர்மைக்கேற்ப நிகழ்வதாலேயே நிவந்தோங்கும்” எனத் தொடங்குகிறது ‘தென்பாண்டிச் சீமையின் பகைப்புலனில்’.
 
ஒரு படைப்பாளியின் பின்புலம் குறித்து பேசுகிறது. பேச்சுத் தமிழைக் கதைகளில் முதன் முதல் கையாண்டவர் புதுமைப்பித்தன் என கண்டறிந்துள்ளார்.
 
திருநெல்வேலி வேளாளர் வாழ்க்கைச் சித்திரப்பாங்கைக் காட்டும் ‘நினைவுப் பாதை’ ஒன்றே புதுமைப்பித்தனுக்கு சிறுகதை உலகில் தகுதியான இடத்தைப் பெறும் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
 
கல்யாணி, துன்பக் கேணி, மனித யந்திரம் போன்ற சிறுகதைகளிலும் நெல்லை மணம் கமழ்கிறது என்கிறார். இதை ‘ஊர்ப்பித்தம்’ என்கிறார்.
 
சமயப் பார்வையுடன் சமூகப் பார்வையும் புதுமைப்பித்தனிடம் வெளிப்பட்டுள்ளது என்கிறார். புதுமைப் பித்தன் நெல்லைச் சைவப்பிள்ளைமார் என்றாலும் சமையல் காரசாரமாக உள்ளது என்கிறார்.
 
கட்டுரையின் முடிவில் “புதுமைப்பித்தனின் பாதங்கள் நெல்லையில் பதிந்து கிடக்கின்றன. பார்வைகள் நிவந்தோங்கி நீணிலமெங்கணும் பரந்து விரிகின்றன” என்பது சுட்டத்தக்கது.
 
புதுமைப்பித்தன் சிறுகதைகளில் ‘குமுகப் போக்கும் அகவ நோக்கும்’ குறித்து ஓர் இயலில் எழுதப்பட்டுள்ளது. மனிதனை மனிதனாக கோபாலபுரம், சங்குத் தேவனின் தர்மம் சிறுகதைகளில் படைத்துள்ளதைக் காட்டியுள்ளார்.
 
பெண்மைப் படும்பாட்டை புலமைப்பித்தன் கதைகளில் புலப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். ‘வழி’ யில் விதவையான பெண் படைத்த கடவுளையும் பாராபட்சமான சட்டங்களையும் சபிப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
 
புதுமைப்பித்தன் காலம் சுதந்திர போராட்ட காலம் என்றாலும் விடுதலைக் குறித்து எழுதப்படாதது ஒரு விமரிசனமாக வைக்கப் பட்டிருப்பினும் அவ்வாறான பிரச்சார கதைகள் இல்லாதது ஒரு சிறப்பே என்கிறார்.
 
பொன்னகரம், கவந்தனும் காமனும் ஆகியவை ஒரு புதிய உலகத்தையும் ஒரு தர்மத்தையும் காட்டுகின்றன என்கிறார்.
 
நடப்பியலின் உண்மைக் காட்சியினை அப்பட்டமாக, அம்மணமாக வழங்கியவர் புதுமைப்பித்தன் என்றும் உளவியல் உண்மைகளை அம்மணமாகவும் உலகியலின் அலங்கோலங்களை முண்டக்கட்டையாக்கி இலக்கியப் பரத்தமை புரிந்தாரில்லை என பொதிய வெற்பனின் பாணியிலேயே எழுதி பித்தனின் நேர்மையைப் பாராட்டியுள்ளார்.
 
சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒளிந்து கிடக்கும் அகவததை ( வர்க்கத்தை) இனங்காட்டத் தவறாதவன் புதுமைப் பித்தன் என புதுமைப்பித்தனை இனங்காட்டியுள்ளார் பொதியவெற்பன்.
 
ஒவ்வொரு படைப்பாளிக்கும் ‘ இலக்கிய நடை ஆளுமை’ முக்கியம். இலக்கிய நடை ஆளுமையே படைப்பாளியை அடையாளப்படுத்தும். படைப்புகளை மேம்படுத்தும். படைப்பாளர்களை வாசிக்கச் செய்யும். கொண்டாட வைக்கும். புதுமைப்பித்தனின் ‘இலக்கிய நடை ஆளுமை’ குறித்து விதந்தோதியுள்ளார் பொதியவெற்பன்.
 
“எழுத்து நடையில் லகுவில் சிக்காது நழுவும் விசயங்களையும் இழுத்துப்பிடித்துக் கொண்டு வந்து அற்புதமான சொல்லாட்சியினால் தமது வசனகதிக்குள் சிறைப்படுத்தும் அசுர சாதனை புதுமைப்பித்தன் ஒருவரிடம்தான் இருக்கிறது” என விமர்சகர் க. நா. சு. குறிப்பிட்டதாக எடுத்துக் காட்டியுள்ளார்.
 
சிறுகதைத் திருமூலர் மெளனி, சிறுகதை வள்ளுவர் புதுமைப்பித்தன், சிறுகதை மன்மதன் கு. ப. ரா. என்றாலும் மன உணர்ச்சிகளை வார்த்தைகளில் மடக்கிக் கொண்டு வரும் சக்தி மற்றவர்களை விட புதுமைப்பித்தனிடமே இருந்தது என்கிறார்.
 
உவமைகளைக் கவிதையில் பிரயோகித்த கவிஞர் சுரதாவிற்கு இணையாக சிறுகதையின் உவமையைக் கையாண்டவர் புதுமைப்பித்தன் என்று உறுதியாகக் கூறுகிறார்.
 
புதுமைப் பித்தனின் சிறுகதையில் பண்புப் பொருள், வண்ணனை, வழக்காடு, வழக்குரை, கதைப்போக்கு, விளக்கம், உணர்ச்சி ஆகிய உரைநடைகளச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
 
நினைவோடை, உருவகம், பதுமை சொல்லுங்கதை, குத்தல் அங்கதம், பாத்திரப் பண்போவியம், வட்டாரப் பகைப்புலன், வசைமாறிக் கசையடிகள், கூர்விசைக் குறிப்பாய்ச்சல், இருதலைத் தாக்கம் ஆகிய உத்திகள் எல்லாம் புதுமைப்பித்தன் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என நயம்பட உரைத்துள்ளார் பொதியவெற்பன்.
 
“காலச் சூழலுக்காளான புதுமைப்பித்தன் அதன் மீது தனது தனித்த ஆளுமையினைத் தம் நடை வாயிலாகக் கணிசமாகவே, ஆழமாகவே பதித்து விடுகின்றார் என்பதுண்மையே…” என்று தன் தனித்தமிழ் நடையில் புதுமைப்பித்தன் நடையைப் போற்றியுள்ளார்.
 
எழுத்தாளர் புதுமைப் பித்தனிடம் ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம்’ குறித்தும் அழகுற காட்டியுள்ளார். ஒரு சிறிய பொறி கிடைத்தாலும் சிறுகதையாக்கிடுவார் என்கிறார்.
 
திறனாய்வுத் துறையிலும் முதன்மைப்பெற்றவர் புதுமைப்பித்தன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
 
கட்டுரை, இதழியம், திரைக்கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினாலும் அவருக்கிருந்த படைப்பாற்றல் ஒரு முகப்பாடுற்று வெளிப்பட்டது சிறுகதைத் துறையிலேயே என புலப்படுத்தியுள்ளார்.
 
கடிதங்களையும் புதுமைப் பித்தன் எழுதியுள்ளார். அவை ‘கண்மணி கமலாவிற்கு’ என்னுமொரு தொகுப்பாகியுமுள்ளது. “புதுமைப்பித்தன் என்றாலே சிறுகதைகள்தான் எல்லோரின் நினைவிலும் வரும்.
 
புதுமைப்பித்தனின் இலக்கியப் பயணமோ அதோடு மட்டுமல்லாது கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நீண்டு கொண்டே செல்கின்றது” என புதுமைப்பித்தன் மகள் தினகரி சொக்கலிங்கம் புதுமைப்பித்தன் கட்டுரைகள் தொகுப்பிற்கான வாழ்த்துரையில் எழுதியிருப்பதை எண்ணச் செய்கிறது.
 
புதுமைப் பித்தன் பழந்தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சி உடையவராகவும் சிறந்து விளங்கினார் என்றும் ஒரு தகவல் தரப்பட்டுள்ளது.
 
புதுமைப்பித்தன் சொ.வி. உள்பட பல திருநாமங்களில் எழுதி அவதார லீலையை நடத்தியுள்ளார் என்கிறார்.
 
தகுதியற்றவர்கள் தரமறியாமல் ஒப்புக்குப் புகழ்ந்தேத்தும் முகமனை புதுமைப்பித்தன் கண்டிக்கவே செய்தார் என்பது சுட்டத் தக்கது.
 
உலகச் சிறுகதையாளர்களான செகாவ், மாப்பசான் முதலியோருக்குச் சமதையான தமிழ்ச் சிறுதையாளர் என்றாலும் மக்களோடு ஒட்டி நின்றே இலக்கியங்களைச் சிருட்டித்திருந்தாரானால் மார்க்சிம் கார்க்கியைப் போல சிறந்த எழுத்தளராக மடடுமின்றி சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கியிருக்கக் கூடும் என்னும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
 
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சோதனைக் களமாக இருந்தாலும் அவரின் சாப விமோசனமே உலகச் சிறுகதை இலக்கியத்துக்குத் தகுதியானதாகும் என தன் ஆய்வைத் தெரிவித்துள்ளார்.
 
அவரின் சிறுகதைகள் சொத்துகள் என்றாலும் காசு எதையும் சம்பாதிக்காமல் காச நோயையே இறுதியில் சம்பாதித்துள்ளார் என்பது கவனிப்பிற்குரியது.
 
பாவேந்தர் பாரதிதாசன் பாண்டியன் பரிசைத் திரைப்படமாக எடுக்க முயன்று தோல்வி அடைந்தது போல புதுமைப்பித்தனும் குற்றாலக் குறவஞ்சியைத் திரைப்படமாக்க முயன்று இருந்ததை எல்லாம் இழந்து இறுதியில் வறுமையில் உழன்றார் என தெரிவித்துள்ளார்.
 
திரை உலகத்திற்கு எழுத்தாளர்களின் அருமைத் தெரியாது என்பதையும் கூறியுள்ளார்.
 
“மொத்தத்தில் ஏறத்தாழ இருநூறு சொந்தக் கதைகள், 100 மொழிபெயர்ப்புக் கதைகள், பதினைந்து பாடல்கள், எத்தனையோ திறனாய்வு, 100க்குட்பட்ட கட்டுரைகள், இரண்டு ஓரியல் நாடகங்கள், 3 திரைப்பட உரையாடல்கள், நாவல் என்ற அம்சத்திற்குப் பொருந்தாத சில நெடுங்கதைகள், அபூர்ணமாக நிற்கும் நாவல்கள் சினிமாக் கதைகள் வேறு பல என நம் புதுமைப்பித்தனின் படைப்பெல்லை விரிவதனை புதுமைப் பித்தன் வரலாறு காட்டுகிறது” என ‘ரசமட்ட நக்கீரம்’ கட்டுரையில் புள்ளி விவரம் தந்துள்ளார்.
 
ஆனால், ராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம் தொகுப்பில் 108 சிறுகதைகள் மட்டுமே உள்ளன.
 
ஏறத்தாழ அனைத்து வெளியீடுகளிலும் இதே அளவுதான் உள்ளன. மொழி பெயர்ப்பு சிறுகதைகளும் 58 மட்டுமே புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்ட புதுமைப்பித்தன் மொழி பெயர்த்த உலகச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ளன.
 
ஆ. இரா. வேங்கடாசலபதி தொகுத்து காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகள் தொகுப்பில் 53 கட்டுரைகளும் 25 மதிப்புரைகளும் மட்டுமே இடம் பெற்றுள்ளன. பொதியவெற்பனின் இத்தொகுப்பு 1976இல் முதல் பதிப்பு வந்துள்ளன.
 
தற்போது வந்துள்ள தொகுப்புகளில் படைப்புகள் குறைவாகவே உள்ளன. மற்றவை எங்கே என்னும் கேள்வி எழுகிறது.
 
பாவை பப்ளிகேஷன்ஸ் மூலம் அ. சிவக்கண்ணன் தொகுத்த புதுமைப்பித்தன் நாடகங்கள் தொகுப்பில் உள்ளன.
 
ரசமட்டம் என்பது புதுமைப்பித்தனின் புனைப்பெயர். அப்பெயரிலேயே விமர்சனங்கள் எழுதினார்.
 
‘புத்தகாசிரியர்கள் கண்டு அஞ்சிவதஞ்சி அடங்க முடிந்ததற்குப் காரணம் ரசமட்டத்தின் நக்கீரப் பார்வையே’ என்கிறார்.
 
புதுமைப்பித்தனின் கதைகளுக்கு புதுமைப்பித்தனே முதல் திறனாய்வாளர் ஆவார் என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த பனிரெண்டு கதைகள் தேர்ந்தெடுத்துக் தர சொன்னால் தன்னுடைய கதைகளில்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுவார் என்று தொகுப்பின் நிறைவாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு எழுத்தாளர் ஒரு கட்டுரையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ” வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும்.
 
அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்”
 
‘புதுமைப்பித்தன் கதைகள் : அகலமும் ஆழமும்’ என்னும் இத் தொகுப்பின் முதல் பதிப்பு 1976இல் வெளிவந்துள்ளது. இரண்டாம் பதிப்பு 2006இல் வெளிவந்துள்ளது. இடையிலும் புதுமைப்பித்தன் குறித்த பல தொகுப்புகள் வந்துள்ளன.
 
விவரம்
 
1. புதுமைப் பித்தனும் ஜெயகாந்தனும்- எம். வேதசகாயகுமார்.
2. புதுமைப்பித்தன் எனும் பிரம்மராகஷஸ்-ராஜ்கெளதமன்
3. புதுமைப் பித்தனும் கயிற்றரவும்-ராஜமார்த்தாண்டன்
4. பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன்- கருத்தரங்கக் கட்டுரைகள்
5. புதுமைப் பித்தன் – ஆர். கே. கண்ணன்
6. புதுமைப்பித்தன் என்றொரு
கலைஞன்- சந்தியா நடராஜன் தொகுப்பு
6. புதுமைப்பித்தமும் பிரமிள் சித்தமும் – வே. மு. பொதியவெற்பன்
 
எழுத்தாளர் பொதிய வெற்பனே புதுமைப்பித்தன் குறித்து மீண்டும் எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் ‘புதுமைப்பித்தன் கதைகள் : அகலமும் ஆழமும்’ முதன்மையாக உள்ளன. முன்னத்தி ஏராக உள்ளன.
 
இத்தொகுப்பிற்காக பொதிய வெற்பன் ஏராளமான மேற்கோள்கள் காட்டியுள்ளார். புதுமைப்பித்தனின் கூற்றையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
 
வாசிப்பின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன் கூற்றுக்கு வலு சேர்த்துள்ளார். வாசித்த நூல்களைப் பிற்சேர்க்கையில் தந்து வியக்கச் செய்துள்ளார்.
 
எழுத்தாளர் வே. மு. பொதிய வெற்பன் தனித்தமிழில் பேரார்வம் கொண்டவர் என்பதால் இத்தொகுப்பு முழுக்க தனித்தமிழில் எழுதியுள்ளார்.
 
தனித்தமிழில் எழுதி இருந்தாலும் புரிதலுக்குத் தடை ஏதுமில்லை. வாசிப்பிற்கும் சிக்கலில்லை.
 
சிரமப்பட்டுத்தான் வாசிக்க வேண்டியிருக்கிறது என்று கரிசல்காட்டு நாயினா கி. ராஜநாராயன் கூறியது போன்ற உணர்வு வாசிக்கும்போது ஏற்படவில்லை. ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.
 
தனித்தமிழில் எழுதியதற்கு எதிர்ப்பும் வந்துள்ளது. ஆதரவும் கிடைத்துள்ளது. தனித்தமிழ் ஆர்வத்தால் பொதியவெற்பன் சற்றும் பின்வாங்கவில்லை.
 
இவ்வாறிவை, கலைவடிவளித்தோருள், எனவுமதனால், சிறுகதைப்பிறையிதழ், இனனோருண்மையினை, என்னுமுண்மையினை என்னும் சொற்களில் இரண்டு, மூன்று சொற்களைச் சேர்த்து ஒரே சொல்லாக்கியுள்ளார்.
 
‘புதுமைப் பித்தன் : அகலமும் ஆழமும்’ தலைப்பிட்டாலும் புதுமைப்பித்தனின் நீளத்தையும் உயரத்தையும் கூட காட்டியுள்ளார்.
 
புதுமைப் பித்தன் சிறுகதைகள் குறித்த மதிப்பீடாக மட்டுமல்லாமல் புதுமைப் பித்தன் மீதான பொதியவெற்பனின் மதிப்பையும் அறிய முடிகிறது.
 
ஒரு விமர்சகனாய்ப் புதுமைப்பித்தனிடம் தோற்ற இடங்களும் உண்டு என்றாலும் ஓர் ஆய்வு மாணவராய் வெற்றி பெற்றதன் விளைவே இத் தொகுப்பு.
 
“புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் கூட இந்த அளவில் அவருடைய படைப்புகளையும் சாதனைகளையும் ஆராயவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என எழுத்தாளர் சிட்டி வாழ்த்துரையில் எழுதியிருப்பது உண்மையே என்று உணரச் செய்கிறது.
 
“கமலா கடைசியாக இந்த உலகத்துக்கு நான் விட்டுச் செல்வது ராசமுக்திப் படமும் தினகரியும்தான்” என்று தன் மனைவியிடம் புதுமைப்பித்தன் கூறியதாக எழுதியுள்ளார்.
 
புதுமைப்பித்தன் ராசமுக்தி, தினகரியை மட்டும் விட்டுச் செல்லவில்லை. அழியாச் செல்வங்களான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழி பெயர்ப்புகள், கடிதங்கள் ஆகியவற்றையும் விட்டுச் சென்றுள்ளார் என்பதை இலக்கிய உலகம் நன்கறியும்.
 
“புதுமைப்பித்தன் புகழ் பரப்புதலைத் தனது முக்கிய பணிகளில் ஒன்றாகக் கருதும் பொதியவெற்பன்” என புதுமைப்பித்தன் மகள் தினகரியே சான்றளித்த பின் வேறென்ன பொதியவெற்பன் குறித்து எழுத ஏலும்?.
 
– நன்றி: பொன். குமார்
Comments (0)
Add Comment