முட்டை… இது வெறும் ஆம்லெட், ஆப்பாயில் போடும் வஸ்து மட்டுமல்ல… பூமியின் 350 கோடி ஆண்டுகால வரலாற்றை அடைகாத்து வைத்திருக்கும் ஒரு அதிசயப் பெட்டகம்!
ஏன், திடீரென முட்டை புராணம்?
ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்ட ஆட்சியர், “2026 குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுதும் முட்டை உள்ளிட்ட இறைச்சி கடைகள், உணவகங்கள் மூடப்பட வேண்டும்.” என்று உத்தரவிட்டார்.
இதுதான் நாடு முழுதும் பெரும் விவாதகமாக ஆனது. கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
ஆனாலும், விவாதம் அதே வீரியத்துடன் தொடர்கிறது.
மத விழாக்கள், சில தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அசைவத்துக்கு தடை விதிப்பது வழக்கம்தான். அப்போது கூட முட்டைக்கு தடை என்பது கிடையாது.
முதன் முதலாக அரசு விழாவுக்காக இறைச்சி தடை.. அதுவும் முட்டை தடை என்பது சர்ச்சையாகிவிட்டது.
இப்போதும், சோசியல் மீடியா முழுதும் இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தூள் பறக்கின்றன.
நாம் முட்டை குறித்து ஆராய இதுவே காரணம்!
கடலில் தொடங்கிய “டூப்ளிகேட்” அரசியல்!
பூமியில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான்.
சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பாக்டீரியாக்கள் தான் சீனில் இருந்தவை.
ஆனால், அவை முட்டையெல்லாம் போடவில்லை.
“செல் பிரிதல்” (Cell Division) என்ற மேஜிக் மூலமாக இனப்பெருக்கம் செய்தன.
அதாவது, ஒரு பாக்டீரியா அப்படியே தன்னை இரண்டாகப் பிளந்து கொண்டு இரண்டு குட்டி பாக்டீரியாக்களாக மாறியது.
அதாவது, அதுவே அம்மா, அதுவே குழந்தை!
முட்டைக்கு “ஹெல்மெட்” போட்ட அந்தப் பல்லி!
இந்த நிலையில்தான் கடல்வாழ் உயிரிகள் முட்டையிட்டன. (அப்போது கடலில் மட்டுமே உயிரிகள் இருந்தன.)
இந்த முட்டைகளுக்குக் கடினமான ஓடு கிடையாது. அதற்குப் பதிலாக, முட்டையைச் சுற்றி ஒரு மென்மையான ஜெல்லி போன்ற படலம் மட்டுமே இருக்கும்.
ஓடு இல்லாததால், தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் நேரடியாக முட்டைக்குள் ஊடுருவி கருவைச் சென்றடையும்.
மெல்ல கடலில் இருந்து தரைப்பகுதிக்கு வந்தன உயிரிகள். இங்கே அவற்றின் முட்டைகளுக்கு ஆபத்து இருந்தது.
காற்றில் இருந்தால் சீக்கிரம் காய்ந்து (Dry out) உள்ளே இருக்கும் கரு இறந்துவிட்டன.
இதன் பரிணாம வளர்ச்சியாக ஒரு அதிசயம் நடந்தது.
சுமார் 31.2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால், ‘ஹைலோனோமஸ்’ (Hylonomus) என்ற ஒரு பல்லி போன்ற குட்டி ஹீரோ நிலப் பகுதிக்கு என்ட்ரி கொடுத்தது.
இந்த உயிரினம்தான் முதன்முதலில் முட்டைக்கு மேலே ஒரு கடினமான ஓட்டை உருவாக்கிக் கொண்டது.
அதாவது, கருவுக்கு ஒரு பாதுகாப்பான ‘ஹெல்மெட்’ போட்ட முதல் உயிர் இதுதான்! இதை விஞ்ஞானிகள் “அம்னியோடிக் எக்” (Amniotic egg) என்கிறார்கள்
கோழி முன்னாடியா? முட்டை முன்னாடியா?
இந்த மில்லினியம் கேள்விக்கு விடை, முட்டையில் இருந்தாதான் கோழி வந்தது என்பதுதான்.
58,000 ஆண்டுகளுக்கு முன்னால் காட்டில் வாழ்ந்த ஒரு வகை பறவை (Red Junglefowl) இட்ட முட்டையில், ஒரு சின்ன “ஜெனிடிக் மிஸ்டேக்” (Genetic Mutation) நடந்தது.
அந்த முட்டையிலிருந்து பிறந்த குஞ்சுதான் நாம் இன்று பார்க்கும் ‘முதல் கோழி’.
அப்போ மேட்டர் தெளிவுதானே? முட்டைதான் முன்னாடி வந்தது!
சைவமா அசைவமா?
இது மிகப்பெரிய கன்பியூஷன். ஆனால் அறிவியல் சிம்பிளா சொல்லுது:
பாயிண்ட்-1: மாடு செத்துப் போகாமலே பால் கொடுக்குது, கோழி செத்துப் போகாமலே முட்டை கொடுக்குது. ரெண்டுமே ஒரு உயிரினத்தின் உடல் சுரப்புதான்.
பாயிண்ட் 2: பாலில் உயிர் கிடையாது, கருவுறாத முட்டையிலும் உயிர் கிடையாது.
பாயிண்ட்-3: பாலில் இருக்கும் அதே புரோட்டீனும், கால்சியமும் முட்டையிலும் செமத்தியா இருக்கு.
அதனால்தான் இதை ‘லெக்டோ-ஓவோ சைவம்’ என்கிறார்கள்.
ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் மற்றும் 13 அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன.
இது மூளை வளர்ச்சிக்குத் தேவையான ‘கோலின்’ (Choline) சத்தின் மிகச்சிறந்த ஆதாரம்.
அரியலூர்: டைனோசர்களின் ‘மகப்பேறு’ வார்டு!
முட்டைக்கும் நம்ம அரியலூருக்கும் ஆண்டாண்டு காலமாக பிரிக்க முடியாத பந்தம் உண்டு.
2009-ஆம் ஆண்டு செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி என்ற கிராமத்தில், நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் படிமங்களாக கிடைத்தன.
ஒவ்வொன்றும் சுமார் 13 முதல் 20 சென்டிமீட்டர் விட்டம் கொண்டவை.
ஆம்.. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த “டைனோசர்கள் அழிந்துவிட்டன” என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால் அறிவியல் ரீதியாக, குறிப்பிட்ட வகை டைனோசர்கள், பரிணாம வளர்ச்சியில் “பறவைகளாக” மாறின.
அந்த வகையில் டைனேசர்களின் நேரடி வாரிசு, இன்றைய கோழிகள்! இதை டி.என்.ஏ. ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
டைனோசர் முட்டை ஓடுகளில் இருந்த அதே நுண்ணிய துளைகள் (Pores) மற்றும் கால்சியம் கார்பனேட் கட்டமைப்பு தான் இன்றைய கோழி முட்டையிலும் இருக்கிறது.
கரு சுவாசிப்பதற்கான இந்த “வென்டிலேஷன்” சிஸ்டம் பல கோடி ஆண்டுகளாக மாறவே இல்லை.
முட்டைக்குள் எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன பார்த்தீர்களா?
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ஒரு பிரம்மாண்டமான படிம அருங்காட்சியகம் (Fossil Museum) இருக்கிறது.
அங்கு 6.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அதிசய முட்டைகளை பார்வைக்கு வைத்து இருக்கிறார்கள்.
நீங்கள் ஒரு முறை சென்று பார்த்து வியந்துவிட்டு வாருங்கள்!
– பத்திரிகையாளர் டி.வி. சோமு