உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. 100 ஆண்டுகள் நோயின்றி வாழ ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
உணவில் அதிக காய்கறிகள்:
மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களைவிட ஜப்பானியர்கள் தங்கள் உணவில் அதிகளவில் காய்கறிகள், கடற்பாசி உணவுகள், சோயா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களுக்குத் தேவையான தாவர ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறுதி செய்கிறது. இத்தகைய உணவுப் பழக்கம் ஜப்பானியர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைவாக சாப்பிடு; நிறைவாக வாழ்ந்திடு:
ஜப்பானியர்கள் எப்போதும் வயிறு முட்ட சாப்பிடுவதில்லை. தங்கள் வயிற்றில் 80 சதவீதத்தை மட்டுமே அவர்கள் நிரப்புகிறார்கள். நம் ஊர் மக்கள் பெரிய தட்டுகளில் சாப்பாட்டை வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.
ஆனால், ஜப்பானியர்கள் சாப்பிடுவதற்கு பெரிய தட்டுகளைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் சிறிய கோப்பைகளையே பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துவதால் தேவையற்ற அளவுக்கு மேல் அதில் உணவுப் பிடிப்பதில்லை. ஒரு கோப்பைக்கு மேற்பட்ட உணவை அவர்கள் சாப்பிடுவதும் இல்லை. அத்துடன் மாலை 7 மணிக்குள் அவர்கள் இரவு உணவை முடித்துக் கொள்வதால், செரிமான பிரச்சினை அவர்களுக்கு வருவதில்லை.
கொஞ்சம் எண்ணெய்; நிறைய தண்ணீர்:
நம்மவர்களில் பலருக்கும் எண்ணெய் பலகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பஜ்ஜி, போண்டா, சமோசா வகைகள் போதாதென்று பொரியலிலும் சிலர் அதிக அளவில் எண்ணெய் சேர்ப்பார்கள்.
இந்தப் பழக்கம் ஜப்பானியர்களுக்கு இல்லை. கொஞ்சம் எண்ணெய், நிறைய தண்ணீர் பயன்படுத்தி உணவுகளைத் தயாரிப்பது அவர்களின் வழக்கம். கூடுமான வரை அவர்கள் எண்ணெய்யைப் பயன்படுத்துவதே இல்லை. தண்ணீரில் வேகவைத்த உணவை சாப்பிடுவதிலும், சாப்பிடுவதற்கு முன் சூப் குடிப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
புதிதாக சமைக்கப்பட்ட உணவு:
மக்கள் மிக அதிகளவில் புதிய உணவை உட்கொள்ளும் ஒரு சில நாடுகளில் ஜப்பானும் ஒன்று. உணவை உற்பத்தி செய்த சில மணிநேரங்களுக்குள் அதை சாப்பிட்டு விடுகிறார்கள். நம்மைப்போல் பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் வழக்கமும், பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடும் வழக்கமும் ஜப்பானியர்களுக்குக் குறைவு.
அங்குள்ள விளைநிலங்களுக்கு ஏற்ற வகையில், குறைந்த அளவிலான மக்கள் தொகை இருப்பதால், உணவுத் தேவையும் விநியோகமும் சமநிலையில் இருக்க உதவுகின்றன. இத்தகைய புதிய உணவுகள் உடல் அதிக ஆற்றலை உற்பத்தி செய்யவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.
தேநீர் கலாச்சாரம்:
ஜப்பானியர்களிடையே அடிக்கடி தேநீர் அருந்தும் கலாச்சாரம் இருக்கிறது. இது அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஒரு சில பாக்டீரியாக்களுக்கு எதிராக போரிடும் ஆற்றலையும் அளிக்கிறது.
சோம்பேறித்தனமற்ற வாழ்க்கை:
எங்காவது செல்ல வேண்டுமானால் சொந்தக் காரையோ அல்லது மோட்டார் சைக்கிளையோ எடுக்கும் வழக்கம் ஜப்பானியர்களுக்கு இல்லை. அதற்கு பதில் அவர்கள் அதிகம் நடக்கிறார்கள். நடந்து சென்று பொதுப் பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்கிறார்கள்.
அதில்கூட பல மணி நேரம் நின்று பயணம் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் அங்குள்ள பெரும்பாலான மக்களிடையே இருக்கிறது. அவர்களின் ஆயுள் நீடித்து இருப்பதற்கு சோம்பேறித்தனமற்ற வாழ்க்கையும் ஒரு காரணமாக இருக்கிறது.
சுகாதார வசதிகள்:
ஜப்பானியர்கள் 1960-ம் ஆண்டிலிருந்தே ஒரு முழுமையான மற்றும் பாதுகாப்பான சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு 12 முறைக்கும் மேலாகத் தங்கள் மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள். இது அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகம்.
மக்களின் சுகாதாரத்துக்காக ஜப்பானிய அரசாங்கம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதத்தை செலவிடுகிறது. ஜப்பானியர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் முன்பே, வரக்கூடிய நோய்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் கடைபிடித்தால் ஜப்பானியர்களைப் போல் நாமும் 100 வயது வரை வாழலாம்.
– பி.எம்.சுதிர்