புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்!

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்.

மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல்.

மூத்த எழுத்தாளர், மூத்த இதழாளர், மூத்த கவிஞர், மூத்த நூலாசிரியர், மூத்த பதிப்பாளர், மூத்த தமிழறிஞர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர்.

தமிழக அரசின் பாவேந்தர் விருது (1990), 1997 இல் சென்னைக் கலாச்சாரக் கழகத்தின் சார்பில் தமிழன்னை விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது(2008), கலைஞர் விருது, பேராசிரியர் விருது(2018), ஆகியன இவருக்கு வழங்கப் பெற்றுள்ளன.

வானொலி, தொலைக்காட்சிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊடக வழியான தம் தமிழ்ப்பணியை ஆற்றிவருகிறார்.

சிங்கப்பூர் வானொலியிலும் 4 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளதுடன் இவரது செவ்வி(பேட்டி)யும் ஒலிபரப்பாகியது.

இலக்கிய ஓவியரான கவிக்கொண்டல் செங்குட்டுவன் சித்திர ஓவியரும்கூட. சென்னையில் உள்ள வாகினிப் படநிலையத்தில் ஓராண்டு ஓவியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் பொது நூலகத் துறையில் நூல் தேர்வுக்குழு உறுப்பினராகப் பத்தாண்டுகள்பணியாற்றியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராக இருந்து அதன் வழித் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.

புத்தகக் கொடையாளர்

செருமனி (ஜெர்மன்) வாழ் தமிழர்கள் தமிழ்நூல்களுக்காக ஏங்கி இருந்தனர். அவர்களின் குறைகளை அறிந்து தோர்ட்டுமண்டு (Dortmund) நகரில் நூலகம் அமைப்பதற்கு 10,000 நூல்களைத் திரட்டிக் கப்பல் மூலம் அனுப்பி வைத்தார்.

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் உதவியுடன் நிறுவப்பட்ட நூலகம் என அந்நூலகத்தில் குறித்துள்ளது. இந்த அருவினை அவருக்குப் புகழ் மகுடம் சூட்டியுள்ளது.

இவரது நூலக அமைப்புப் பணியால் பலரும் இவரும் உதவியை நாடி வந்தனர். சென்னையில் வி.சி.பி. நிறுவன நூலகம், கமலஃகாசன் இரசிகர் மன்ற நூலகம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன நூலகம்,

அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள பேராசிரியர் ஆய்வு நூலகம், சென்னை வடபழனியில் உள்ள அண்ணா பொதுநல மன்ற நூலகம், மும்பை திராவிட முன்னேற்றக் கழக நூலகம், எனப் பல நூலகங்களுக்கும் பல நூறு நூல்களைத் திரட்டி அளித்துள்ளார்.

இதனால், புத்தக வள்ளல் என்றும் புத்தகக் கொடையாளர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

Comments (0)
Add Comment