லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவை முழுதும் கைப்பற்றப்போவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு எதிரி நாடுகள் மட்டுமின்றி, அதன் நட்பு – நேட்டோ – நாடுகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நேட்டோ நாடுகளில் ஒன்றையே கபளீகரம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார் டிரம்ப்.
முதலில் நேட்டோ நாடுகள் என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில், சோவியத் யூனியன் எழுச்சி பெற்றது. “கம்யூனிச அபாயத்துக்கு” பயந்த 12 நாடுகள் அமெரிக்கா தலைமையில், ராணுவக் கூட்டணி அமைத்தன.
இதை எதிர்கொள்ள, சோவியத் யூனியன் தலைமையில் எட்டு நாடுகள், வார்சா ஒப்பந்தம் என ராணுவக் கூட்டணி வைத்தன.
1991ல் சோவியத் யூனியன், மீண்டும் பல நாடுகளாக பிரிந்து, முதலாளித்துவ நாடுகளாக மாறின. அப்படி பிரிந்த நாடுகளில், ரஸ்யா தவிர மற்ற அனைத்தும் நேட்டோ அணியில் சேர்ந்தன.
இப்போது வார்சா ஒப்பந்தம் என்பதே இல்லை. நேட்டோவில் 32 நாடுகள் உள்ளன.
சோவியத் யூனியன் “அபாயம்” இல்லை என்கிற நிலையில், இந்த நேட்டோ நாடுகளையே கபளீகரம் செய்யும் முயற்சியில் இறங்கிவிட்டது அமெரிக்கா.
தன் அண்டை நாடான, கனடாவை, தனது மாநிலமாக சேர வற்புறுத்துறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு அந்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் டிரம்ப், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப்போகிறேன் என்கிறார். இது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுயாட்சி பிரதேசம்.
அதற்கென தனி நாணயம், நாடாளுமன்றம் எல்லாம் உண்டு. அதே நேரம், பாதுகாப்பு, வெளியுறவை மட்டும் டென்மார்க் கவனித்துக் கொள்கிறது.
டிரம்ப் பேச்சுக்கு, டென்மார்க், கிரீன்லாந்து இரண்டுமே கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளும் இணைந்து, “டென்மார்க்கின் பாதுகாப்பில் இருக்கும் கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா பேசுவது தவறு. அந்நாட்டை ஆக்கிரமிக்க அமெரிக்கா முயற்சித்தால் ராணுவ ரீதியாக எதிர்கொள்வோம்” என அறிவித்துள்ளன.
ஆனால், அண்மையில் டிரம்ப், வெனிசுவேலா அதிபரை கடத்தி வந்ததை மறைமுகமாக குறிப்பிட்டு, “அமெரிக்காவின் நலனுக்காக எதையும் செய்வோம்” என்றார். அதாவது கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.
இதை உறுதிப்படுத்துவது போல, டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர் ஸ்டீபன் மில்லரின் மனைவி, சமூக வலைதளத்தில் ஒரு சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்டார்.
அதில் கிரீன்லாந்து தீவு அமெரிக்கக் கொடியின் வண்ணத்தில் மாற்றப்பட்டு இருந்தது. அதற்கு “விரைவில்” (SOON) என்று தலைப்பிட்டிருந்தார்.
இது ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த ஒரு வெளிப்படையான சவாலாகவே பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்ல தொடர்ந்து தனது நேட்டோ நாடுகளை – தனது நட்பு நாடுகளை – டிரம்ப் மிரட்டி வருகிறார்.
“நேட்டோ நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2% முதல் 4% வரை ராணுவத்திற்காகச் செலவிட வேண்டும். அவ்வாறு செய்யாத நாடுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமெரிக்கா உதவாது.
தவிர, 2027க்குள் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். தவறினால் நேட்டோவிலிருந்து அமெரிக்கா விலகும்” என்றெல்லாம் தொடர்ந்து அச்சுறுத்துகிறார்.
இந்த நிலையில்தான் அவரது கிரீன்லாந்து மிரட்டல் நேற்று முன்தினம் வலுப்பட்டிருக்கிறது.
வட அமெரிக்க கண்டத்தில் நேட்டோ ராணுவ ஒப்பந்த நாடுகள் இரண்டு உள்ளன. அவை, அமெரிக்கா, கனடா.
மீதமுள்ள 32-ம் அமெரிக்காவை இனி ஒரு நம்பகமான கூட்டாளியாகக் கருத முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் நாடுகள் தங்களின் இராணுவப் பட்ஜெட்டை பெரிய அளவில் (சுமார் $13.7 பில்லியன்) உயர்த்தியுள்ளன.
பிரான்ஸ் – ஜெர்மனி கூட்டணி: அமெரிக்காவின் ஆயுதங்களை இனி வாங்குவதில்லை என்றும், ஐரோப்பிய தொழில்நுட்பத்திலேயே சொந்தமாக ஏவுகணைகளைத் தயாரிக்கவும் அவை முடிவெடுத்துள்ளன.
பிரிட்டன் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து, அமெரிக்காவிற்கு ஈடாக ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டது.
அரசியல் நோக்கர்கள், “இவை எல்லாம், அமெரிக்காவை நம்பியிருக்காமல், ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சி.
கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயன்றால், இவை நிச்சயம் ராணுவ ரீதியாக எதிர்த்து நிற்கும்” என்கிறார்கள்.
அதே நேரம், “அமெரிக்காவுக்கு உள்ளேயே, டிரம்ப்பின் முடிவுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
டெமாக்ரடிக் கட்சி மற்றும் மிதவாத குடியரசுக் கட்சியினர், டிரம்ப்பை எதிர்க்கின்றனர்.
அமெரிக்க அதிபர் தன்னிச்சையாக நேட்டோவிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் சட்டங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
2026-ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தற்காப்புச் சட்டத்தில் (NDAA), ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைப்பதற்கு நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்கின்றனர்.
ஆக, “அடுத்தடுத்து டிரம்ப் என்னென்ன பிரச்சினைகளை ஏற்படுத்துவார், அதனால் உலக அளவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்…” என்கிற திகில் உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது.