பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பார்களே. அதைப்போல ரஷிய ராணுவத்தின் குறிசுடும் வீராங்கனை லுத்மிலாவின் பெயர் உளவியல் ரீதியாக ஜெர்மன் ராணுவத்தை ஓர் உலுக்கு உலுக்கி வந்தது.
லுத்மிலா குறிதவறாத அவரது துப்பாக்கியுடன் எதிரிகளை ஏய்க்கும் அழகே தனி. மரங்களில் கிழிந்த துணிகளைக்கட்டி அவர் தொங்க விட்டிருப்பார். அது காற்றில் அவ்வப்போது அசைந்து ஆடி எதிரிகளின் கவனத்தைத் திசை திருப்பும்.
இன்னொருபுறம் லுத்மிலா கவனம் சிதறாமல் எதிரிகளைக் குறிவைத்தபடி காத்திருப்பார்.
ஒரு பக்கம் எறிகணைத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும். மழைவிழும், பனி கொட்டும். மறுபக்கம் லுத்மிலா பொறுமையுடன் எதிரிகளின் நடமாட்டத்தைக் குறிவைத்தபடி சிலையாக இருப்பார்.
ஒருமுறை 12 அடி உயர மரத்தில் அவர் ஏறியபோது எதிரிகள் அவரை குறிவைத்து சுட, 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த அனுபவம் கூட லுத்மிலாவுக்கு உண்டு.
1941ஆம் ஆண்டு ஜூன் மாதம்.
செவஸ்டபோல் நகரத்தில் எதிரியின் மார்ட்டர் பீரங்கிக் குண்டு ஒன்று பக்கத்தில் வந்து விழுந்து வெடித்ததில் லுத்மிலாவின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
ரஷிய ராணுவம் உடனடியாக அவரை நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் ஏற்றி தலைநகர் மாஸ்கோவுக்குக் கொண்டுவந்தது. லுத்மிலா பிழைத்துக் கொண்டார்.
இந்த காயத்துக்குப்பிறகு இப்படி ஒரு வீராங்கனையை இழக்க சோவியத் ரஷியா விரும்பவில்லை.
அதனால் இளம் ஸ்னைப்பர் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு லுத்மிலாவுக்கு வழங்கப்பட்டது.
கூடவே வெளிநாடுகளுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம்தேதி. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகையில் லுத்மிலாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட், அவரது மனைவி எலினார் ரூஸ்வெல்ட்டுடன் வெள்ளை மாளிகையில் விருந்து உண்ட முதல் சோவியத் குடிமகள் லுத்மிலாதான்.
அமெரிக்காவில் ஊடகத்துறையினருடன் சந்திப்புகளையும் லுத்மிலா நடத்தினார். அப்போது ஊடகத்துறையினர் கேட்ட கேள்விகள் இருக்கிறதே. அடடா. அவ்வளவு அர்த்தம் பொதிந்த கேள்விகள் அவை.
‘மேடம். நீங்கள் களத்துக்குப் போகும் போது மேக்அப் போட்டுவிட்டு போவீர்களா? லிப்ஸ்டிக் போடுவீர்களா? உங்கள் சீருடை ஏன் உங்களை குண்டாகக் காட்டுகிறது? உங்களுக்கு பாய்ஃபிரண்ட் இருக்கிறாரா?‘ இந்தமாதிரியான அர்த்தமுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் லுத்மிலாவிடம் கேட்கப்பட்டன.
வாஷிங்டன் போஸ்ட் இதழ், லுத்மிலாவை, அமேசான் என்ற பழங்கால அல்லிராணியுடன் ஒப்பிட்டது. அவரை பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் என வர்ணித்தது.
சிகாகோ நகரில் ஒருமுறை ஊடகவியலாளர் சந்திப்பில் லுத்மிலா பொங்கி எழுந்து விட்டார்.
“எனக்கு 25 வயது. களத்தில் 309 பாசிஸ்ட்டுகளை நான் கொன்று இருக்கிறேன். அமெரிக்கர்களாகிய நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
என்னைப் போன்ற ஒரு பெண்ணின் முதுகுக்குப்பின்னால் ஒளிந்து கிடக்கிறீர்கள். இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படி ஒளிந்து கிடப்பீர்கள்?” இப்படி கேட்டார் லுத்மிலா.
இரண்டாம் உலகப்போரில் அதுவரை நுழையாமல் இருந்த அமெரிக்காவுக்குக் கிடைத்த செப்பல் ஷாட் அது.
அமெரிக்க அரசு லுத்மிலாவுக்கு கோல்ட் துணை இயந்திரத்துப்பாக்கி ஒன்றை பரிசாக அளித்தது. கனடா நாட்டுக்குச் சென்றபோது டொரண்டோ நகரில் வீவர் தொலைநோக்கியுடன் வின்செஸ்டர் மாடல் 70 ரைபிள் அவருக்குப் பரிசாகத் தரப்பட்டது.
இங்கிலாந்து தொழிலாளர்கள் 4,516 பவுண்ட் ஸ்டெர்லிங் பணத்தைத்திரட்டி, லுத்மிலாவிடம் கொடுத்து போரில் காயப்படும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு உதவியாக 3 எக்ஸ்ரே இயந்திரங்களை வாங்கும்படி வேண்டினார்கள்.
அமெரிக்கப் பயணத்தில் பல வி.ஐ.பி.க்களையும் லுத்மிலா சந்தித்தார். அவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். லுத்மிலாவுடன் கைகுலுக்கிய் சாப்ளின், ‘இந்த சின்ன கை இவ்வளவு பேர்களை கொன்றது அதிசயம்தான்’ என்றார்.
பாடகர் வூடி குத்ரி, லுத்மிலா பற்றி ஒரு பாடல் எழுதி, அதை புகழ்பெற வைத்தார்.
மீண்டும் ரஷியா திரும்பிய லுத்மிலாவுக்கு ராணுவத்தில் மேஜர் பதவி வழங்கப்பட்டது.
ஹீரோக்களுக்கான தங்க நட்சத்திரம் வழங்கி ரஷிய அரசு அவருக்குச் சிறப்பு செய்தது.
ரஷியாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் லெனின் விருதை லுத்மிலா ஏற்கெனவே 2 முறை வாங்கியிருந்தார்.
இரண்டாம் உலகப்போர் ஓய்ந்த நிலையில், கீவ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மீண்டும் தொடர்ந்தார் லுத்மிலா.
இரண்டாம் உலகப்போரின்போது ரஷிய ராணுவத்தில் இரண்டாயிரம் பெண்கள் குறிசுடும் வீராங்கனைகளாக சேர்ந்து களமுனைக்குப் போனார்கள். அவர்களில் லுத்மிலா உள்பட வெறும் 500 வீராங்கனைகள் மட்டுமே உயிருடன் திரும்ப முடிந்தது.
லுத்மிலா உள்பட அந்த வீராங்கனைகள் உயிருடன் திரும்பியது அதிர்ஷ்டத்தால் அல்ல. திறமையால்.
உலகப் போரில் பெண்கள் நேரடியாக போர்முனைகளில் இறக்கிவிடப்படாத அந்த காலகட்டத்தில், பெண்களால் போர் செய்ய முடியும், அதை சிறப்பாகவும் செய்ய முடியும் என்பதை எண்பித்தவர் லுத்மிலா.
அவர் அளவுக்கு ரஷிய ராணுவத்தில் குறிசுடும் வீரராக அப்போது இருந்தவர் வசிலி செய்ட்செவ் மட்டும்தான்.
(Enemy at the Gates என்ற திரைப்படம் வசிலி செய்ட்செவ்வின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்) வீராங்கனை லுத்மிலாவுக்கு சோவியத் ரஷியா 2 அஞ்சல் தலைகளை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
தனது 58ஆவது வயதில் இயற்கை மரணம் அடைந்த லுத்மிலா, சிலையாக, புத்தகங்களாக, கூடவே மக்கள் மனங்களின் வழியாக இன்றும் இறவாமல் உயிர் வாழ்கிறார்.
– மோகன ரூபன் முகநூல் பதிவு