கருகும் பயிர்கள்: டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க, மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், குறுவை பருவ சாகுபடிக்குத் தேவையான நீரை வழங்க மேட்டூர் அணையை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வழக்கமாக ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்படாததால், குறுவை சாகுபடி தாமதமாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடி பரப்பளவு குறையக்கூடும் என்றும், இதனால் விவசாயிகளின் வருமானம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அணையை திறப்பதுடன், நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை, மானிய விதைகள், உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் 24 மணி நேர மும்முனை மின்சாரம் உள்ளிட்ட ஆதரவு திட்டங்களை அரசு வழங்க வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– சு. சுரேகா

Comments (0)
Add Comment