சர்வதேச அளவில் சொந்த நாடு, வீடுகளை இழந்து நாடு நாடாக அலையும் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறும் விதமாக உலகக் குடிபெயர்வோர்கள் தினம் (அ) பன்னாட்டு புலம் பெயர்ந்தோர் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஆதி கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் இறந்தது.
பின் ஆற்றுச்சமவெளி நாகரிகம் வளர துவங்கிய காலங்களில் மனிதன் ஆறுகளின் நீர் வளத்தை பயன்படுத்தி வேண்டிய உணவை தேடி அலையாமல் தானே பயிரிட்டு உற்பத்தி செய்ய கற்றான்.
அதற்கு பின் நாடோடியாக இருந்த அவனது வாழ்க்கை ஒரே இடத்தில் தங்கி குடும்பமாக… கூட்டுக் குடும்பமாக… பிறகு கட்டுப்பாடுகளுடைய சமூக கூட்டமாக மாறியது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய புதிய கண்டுபிடிப்புகளுடன் நாகரிகமும் விஞ்ஞானமும் கைகோர்த்து மனிதன் வாழ்வை வளமாக்கின.
நாளுக்கு நாள் அவனது தேவையும் தேடலும் அதிகமாகின. உணவு உடை மற்றும் இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளை தாண்டி மனித சக்தி சிந்திக்க துவங்கியது.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஒளவை பாட்டியின் முதுமொழி மனிதனின் தேடலுக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கியது.
அதுவரை காட்டுக்குள் வாழ்ந்த மனிதனின் தேடல், கடலை தாண்ட துவங்கியது. உள்நாட்டில் கிடைக்காத பல விஷயங்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
அந்த வகையில் பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு போர், இனவெறி போராட்டங்கள், சமுதாய வேறுபாடுகள் மற்றும் சமூக அநீதி போன்ற பல காரணங்களுக்காக மனிதன் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தான்.
பணத்திற்காக, பதவிக்காக, புதிய வாழ்க்கை முறைக்காக புதிய சமுதாய அங்கீகாரத்திற்காக இந்தியர்களும் புலம் பெயர்ந்தனர்.
தமிழில்கூட திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லப்படுகிறது. அப்படி, பல்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் தொழில் ரீதியாகவும், இயற்கை பேரிடர் ரீதியாகவும் மற்றும் போர் காரணங்களாலும் தன் நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டை தேடி சென்று குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழவும் தொடங்குகிறார்கள்.
19-ம் நூற்றாண்டு துவக்கத்தில் துவங்கிய இந்த இந்திய புலம் பெயர்தல் நிகழ்வு இன்று மிகப்பெரிய சமுதாய நிகழ்வாக நடக்கிறது.
துவக்கத்தில் கொத்தடிமைகளாக, ஊழியர்களாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் இன்று வல்லுநர்களாக வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.
முதன் முதலாக யூகர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இன்று உலக மயமாக்கலுக்கு பிறகு இந்நிகழ்வு அனைத்து நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சமூக நிகழ்வாக மாறியுள்ளது.
புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிச., 18-ம் தேதியை உலக புலம் பெயர்ந்தோர் தினமாக கடைபிடிக்க 2000 டிச.4-ல் ஐ.நா.சபை முடிவு செய்தது.
பொதுவாக இரண்டு வகையான புலம்பெயர்வுகள் உள்ளன. ஒன்று போர் அல்லது உள்நாட்டு கலவரத்தால் புலம்பெயர்வது.
அந்த வகையில் சமீபத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக, அங்கு வாழ்ந்து வந்த ஓர் இனத்தின் பெரும்பான்மையான மக்கள் கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறினர்.
சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களால் லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர்.
சிரியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
இவை நாம் சமீபத்தில் கண்ட மிகப்பெரிய மக்கள் புலம் பெயர்வுகள். மற்றொரு வகை, வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்பவர்கள்.
இவர்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக செல்வதில்லை, தனித்தனி நபராக சென்று பின்னர் அங்கேயே குடியுரிமைப் பெற்று வாழ்பவர்கள்.
உண்மையில் போரினால் விடம் தேடி வேறு நாட்டுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை விட, இவர்களே எண்ணிக்கையில் அதிகம்.
கடந்த 20 ஆண்டுகளில், அதாவது இந்த நூற்றாண்டு தொடங்கியது முதலாக இலங்கை தமிழ் ஈழ அகதிகள், சிரியா உள்நாட்டு போரால் அகதிகளானவர்கள், மியான்மரில் ரொஹிங்கியா முஸ்லீம் மக்கள், அமெரிக்காவில் புகும் மெக்ஸிகோ அகதிகள் என லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர்.
சொந்த நாடின்றி, வீடின்றி பல நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இவர்கள் அகதிகள் என்ற அடையாளத்தோடே வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம், 68.5 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 25.4 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளதுடன் அவர்களில் அரைவாசிப் பங்கினர் 18க்கும் குறைந்த வயதுடையவர்கள் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் இரண்டு மணித்துளிகளுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் குறிப்பிடுகிறது.
அதே சமயம் புலம்பெயர்ந்த இந்தியர்களின் அவலங்களை வி.எஸ்.நய்பால், சல்மான் ருஷ்டி, ரோஹின்டன் மிஸ்ட்ரி, உமா பரமேஸ்வரன், பாரதி முகர்ஜி, சுனித்ரா குப்தா, ஜூம்பா லாகிரி, கீதா ஹரிஹரன், கீதா மேதா, சித்ரா திவாகுருனி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்களால் பதிவு செய்துள்ளனர்.
காதல் முறிவு, பன்முக காதல், திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட உறவு முறைகள், அதனால் உண்டாகும் பிரச்னைகள், கலாசார தாக்குதல்களை இவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் லண்டனில் செட்டில்’ 601 சுவராஜ் பால் மிகப்பெரிய தொழிலதிபராக திகழ்கிறார். பாரிசில் செட்டில் ஆன லட்சுமி மிட்டல் உலக இரும்புத் தொழிலில் முடிசூடா மன்னராக உள்ளார்.
விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசு பெற்று ஹரிகோவிந்த் குரானா, சந்திரசேகர, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற வி.எஸ்.நய்பால், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வெளிநாடு வாழ் இந்தியர்களே, உலகில இந்தியர்கள் பல துறைகளில் சாதிப்பது பெருமையான விஷயம் தான்.
ஆனால் நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விவசாயிகளின் தற்கொலை, பன்னாட்டு கம்பெனிகளால் நலிவறும் நம் பாரம்பரிய தொழில்கள் போன்ற அன்றாட பிரச்னைகளை தீர்க்க புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்கு என்ன? என சிந்திக்கத் தூண்டுகிறது.
உலகில் எந்தவொரு இனக் குழுவும் தமது சொந்த மண்ணைவிட்டு, மிக விருப்பத்துடன் புலம்பெயர்வதில்லை.
அதுவொரு மரண வலி. புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழர்களின் முகங்களிலும் வார்த்தைகளிலும் அந்த வலியை தெரிந்துகொள்ள முடியும்.
– நிலவளம் ரெங்கராஜன்
நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்