உழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும், அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனின் கடமை.
உழவுத் தொழில் செய்யும் உழவன் இன்று கவனிக்கப்படாததும் இதற்குக் காரணமாகும். அவனுக்கு விளைபொருளுக்கு ஏற்ற சரியான விலை இல்லை.
மரபு கலாச்சாரங்கள் விதைகளில் அகற்றப்பட்டு வீரியமற்ற துரித வளர்ச்சி விதைகள் மரபினம் மாற்றி வியாபார நோக்கோடு விற்பனைக்கு வந்து விட்டது.
நாம் உண்ணும் உணவுப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு நம்மிடமில்லை. மரபை மீட்டெடுத்து அதை நினைவாக்க முயலும் வேளையில் மரபணு மாறிய விதைகளை வீசி எறிவது முக்கியம்.
உழவே நம் நாட்டின் முதுகெலும்பு எனப் போலி வார்த்தைகள் கூறும் நம்மிடையே இருக்கும் பெரும் குறைகளாக மண்ணுக்கும் உழவனுக்கும் நாம் செய்யும் தீங்குகளை ஏராளமாக வரிசைப்படுத்தலாம்.
அந்த வழியில் அதன் முக்கியத்துவத்தை வள்ளுவப் பெருந்தகையின் குறள் வழியே உழவனையும் உழவுத் தொழிலையும் பாதுகாத்தல் பற்றிக் கூறியுள்ளார்.
பால் : பொருட்பால்.
இயல் : குடியியல்.
அதிகாரம்: உழவு.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
– உட்பட பல குறள்களை இயற்றியுள்ளார் திருவள்ளுவர்.
நாம் தவற விட்ட உழவர்கள் சார்ந்த நெறிமுறைகள்:
உழவனுக்கு எப்பொழுதும் குரல் கொடுக்க வேண்டும், ஆனால் நாம் எப்பொழுதும் அவனிடமிருந்து விலகியே உள்ளோம். உழவன் டில்லியில் போராடியபோது அதைக் கண்டு கொள்ளவேயில்லை, ஜல்லிக்கட்டுக்கு கொடுத்த ஆதரவை விட அதிகமான ஆதரவு நாம் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அச்சத்தில் ஆழ்த்தியது, ஆனால் இடது சாரி சிந்தனையாளர்கள் இவற்றைக் கையில் எடுத்துப் போராடி வருவதால் மட்டுமே, உழவனுக்குக் கடைநிலை மடை போல் ஏதோ கொஞ்சம் சூழல் இலகுவாக இருக்கிறது.
இந்த நிலையை நாம் தவறவிட்டது முக்கியமாக ஆராயப்பட வேண்டிய கூறுகளாகும்.
அதுமட்டுமின்றி காவேரி நீரை நம்பிய உழவர்களின் போராட்டத்தின் போது நீதி கிடைக்காததற்கு முக்கிய காரணம் நாம் இணைந்து போராடாமல் போனதும், அதுமட்டுமின்றி தடுப்பணைகள் பற்றாக்குறையும் இதற்கு முக்கிய காரணிகளாக விளங்குவது கவனிக்கத்தக்கது.
பாரம்பரிய விதைகளை அழித்துவிட்டு மரபு மாற்றம் செய்த விதைகள், பூச்சிக் கொல்லிகள் எனக் கார்பரேட் நிறுவனங்கள் கையில் விவசாயத்தை ஒப்படைத்துவிட்ட அரசை நாம் முழுமையாக எதிர்க்காதது மற்றொரு காரணமாகும்.
எது வந்தாலும் அதை எதிர்த்து எந்தப் பதிவிடுதலும் கிடையாது.
கடன் தொல்லையால் நிலத்தில் இறந்து கிடக்கும் உழவன் சார்பாக மறுவாழ்விற்கு அந்த உழவனின் குடும்பம் மனு அளித்தாலும் பதில் கிடையாது.
இப்படி உழவன் நலத்தை மதிக்காமல் நம்முடைய நலத்தையும் சேர்த்து அழித்துச் செல்லும் வாழ்வா பெரிது? என்கிற கேள்வி எழச்செய்கிறது.
இத்தகைய செயலைத் தவற விட்ட நாம் உண்ட உணவுக்கும், இனி உண்ணப் போகும் உணவுக்கும் காட்டும் நன்றி இதுதானா?
இனியாவது காளைகளைக் காப்பாற்றினோம் என மார்தட்டாமல் மரபின் மாற்றம் செய்யப்பட்ட பசுக்களைத் தவிர்த்து நாட்டு மாடுகள் என்றிழைக்கப்படும் நம் பாரம்பரியமான காளைகளையும், பசுக்களையும் வார்த்தெடுப்போம், வளர்ப்போம்.
உழவன் குறித்த சிந்தனைகளையும் உழவு முறைகளையும் கேட்டறிந்து அவன் வாழ்வியல் சார்ந்த மரபை மீட்டெடுத்து இனிவரும் சமூகம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நம்மால் முடிந்த சாத்தியங்களை உருவாக்க முயற்சி செய்வது நம் கடமை.
மண் நஞ்சானால் உணவும் நஞ்சாகும், நஞ்சு உண்பதை விட அதை அகற்ற வழி தேடுவோம்.
உழவனுக்குத் தோள் கொடுக்கும் மனிதனாவோம். பசும் படையில் போராடி உணவுப் போரில் ஈடுபடும் உழவனும் ஒரு இராணுவ வீரர்களைப் போன்று மதிக்கப்பட வேண்டும்.
இனி வரும் தலைமுறையினர் இந்தக் கருத்துடன் உழவர்களுக்காகப் போராட வேண்டும்.
வள்ளுவன் கனவுகள் மெய்ப்படும் அளவிற்கு இந்த உழவர்கள் வாழ அழகான நிலங்களை உருவாக்குவோம், இயற்கையான பசுமையை நோக்கிச் செல்வோம்.
உழவின்றி அமையாது உலகு! உழவனின்றி ஏது உணவு!
– ப. தனஞ்ஜெயன்
– நன்றி : கீற்று.காம்